அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஜிஐசி முன்னாள் முதலீட்டுத் தலைவர் பரிசீலனை

அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஜிஐசி முன்னாள் முதலீட்டுத் தலைவர் பரிசீலனை

2 mins read
d0b34aa4-c5d4-4e39-9c03-827b0fd9c0c1
அரசாங்கத்தின் முதலீட்டு நிதியமான ஜிஐசி குழுமத்தில் இருந்து 2013ல் ஓய்வு பெற்ற திரு இங் கோக் சோங். - படம்: புளூம்பர்க்

சிங்கப்பூர் அரசாங்க முதலீட்டு நிதியமான ஜிஐசியின் முன்னாள் தலைமை முதலீட்டு அதிகாரியான இங் கோக் சோங், தான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலித்து வருவதாக சனிக்கிழமை தெரிவித்தார்.

நடக்க இருக்கின்ற அதிபர் தேர்தலில் போட்டியிடும் சாத்தியம் உள்ள வேட்பாளராக அவரின் பெயரை இணையத்தள அறிக்கை ஒன்று வெள்ளிக்கிழமை தெரிவித்து இருந்தது.

அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக ஒரு மாதத்திற்கு முன்னதாக திரு ஜார்ஜ் கோ என்ற தொழில்முனைவர் குறிப்பிட்டு இருந்தார்.

முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் தான் அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக ஜூன் 8ஆம் தேதி அறிவித்தார். திரு தர்மன் ஜூலை 7ஆம் தேதி அரசாங்கத்தில் இருந்தும் மக்கள் செயல் கட்சியில் இருந்தும் விலகினார்.

இப்போதைய அதிபர் ஹலிமா யாக்கோப், தனது பதவிக்காலம், வரும் செப்டம்பர் 13ஆம் தேதி முடிவடைந்ததும் மீண்டும் போட்டியிடப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

திரு இங், 75, அரசாங்க முதலீட்டு நிதியமான ஜிஐசியில் 27 ஆண்டுகாலம் சேவையாற்றினார். பிறகு அவர் 2013ல் ஓய்வுபெற்றார்.

திரு இங், இப்போது அவந்தா இன்வெஸ்ட்மெண்ட் மேனேஜ்மெண்ட் என்ற முதலீட்டு நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக இருக்கிறார்.

இந்த நிறுவனத்தை முன்பு ஜிஐசியில் தன்னுடன் பணியாற்றிய இரண்டு பேருடன் சேர்ந்து 2015ல் திரு இங் தொடங்கினார்.

இதனிடையே, இந்த நிறுவனம், 2020 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான கடைசி மூன்று நிதியாண்டுகளில் லாபகரமான நிறுவனமாக இருந்துவந்துள்ளது என்பது, கணக்குத் தணிக்கை, நிறுவன ஒழுங்குமுறை ஆணையத்திடமிருந்து பெறப்பட்ட ஆவணங்கள் மூலம் தெரியவருவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.

இந்த நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளில் பங்குதாரர்களின் பங்குமுதலாக சராசரி சுமார் $73 மில்லியன் தொகையைக் கொண்டு இருந்தது.

திரு இங், சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பட்டப்படிப்பை முடித்த பிறகு நிதி அமைச்சில் முதலீட்டுப் பகுப்பாய்வாளராக 1970ல் பொதுச் சேவையில் சேர்ந்தார்.

அரசாங்கத் தேர்வாணையத்தின் படிப்பு உபகாரச் சம்பளம் பெற்றவரான திரு இங், ஓராண்டுக்குப் பிறகு சிங்கப்பூர் நாணய ஆணையம் அமைக்கப்பட்டதும் அதற்கு மாறினார்.

ஜிஐசி நிதியம் அமைக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 1986ஆம் ஆண்டில் அந்த நிதியத்தின் பங்குபத்திரங்கள், முறிகள் துறை தலைவராக ஆனார். அந்த நிதியத்தின் வெளிநாட்டினராக அல்லாத முதலாவது இயக்குநரும் அவரே.

பிறகு 2007ல் ஜிஐசியின் முதன்மை தலைமை முதலீட்டு அதிகாரியாக பொறுப்பேற்ற திரு இங், 2013ல் ஓய்வு பெறுவது வரை அந்தப் பொறுப்பை வகித்து வந்தார்.

குறிப்புச் சொற்கள்