அனுஷா செல்வமணி
பிற இனத்தவர்களுடனும் இளையர்களுடனும் ஒன்றிணைந்து முதல் முறையாக வில்வித்தை விளையாடுவதற்கான வாய்ப்பு மூத்த தலைமை பொறியாளராகப் பணிபுரியும் 44 வயது ராகவன் ராமச்சந்திரனுக்கு கிடைத்தது. தனது நண்பர்களோடு குழுவாக சேர்ந்து வில்வித்தைக் கலையைக் கற்றுக்கொண்டு விளையாடியது இவருக்கு ஒரு புதிய அனுபவம்.
நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயிலும் முஹம்மது காஷிஃப், 18, தன் நண்பர்களோடு காற்பந்து விளையாட்டில் ஈடுபட்டார். பொதுவாக இந்தியர்களும் மலாய் இனத்தவர்களும் அதிகம் விரும்பி விளையாடுவது காற்பந்தாக இருந்தாலும், சீன நண்பர்களோடு சேர்ந்து காற்பந்து விளையாடியது அவருக்கு மகிழ்ச்சி அளித்தது.
இவர்களைப் போல வெவ்வேறு இனம், சமயத்தைச் சேர்ந்த ஏறத்தாழ 245 பேர் சனிக்கிழமை காலை ‘ஹார்மோனி கேம்ஸ்’ எனும் நல்லிணக்க விளையாட்டுகளில் கலந்துகொண்டு தங்களின் விளையாட்டுத்திறனை வெளிப்படுத்தினர்.
2008லிருந்து நடைபெற்று வரும் இந்த விளையாட்டு நிகழ்ச்சி, ஒவ்வோர் ஆண்டும் சிங்கப்பூரில் உள்ள பல்வேறு சமய அமைப்புகளின் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இவ்வாண்டு கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சின் ஆதரவில் இந்து அறக்கட்டளை வாரியமும் இந்து ஆலோசனை மன்றமும் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கைகோத்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
இந்து அறக்கட்டளை வாரியத்தின் இந்து இளையர் கட்டமைப்பை சேர்ந்த இளம் தொண்டூழியர்கள், சிண்டா எனும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் இளையர் பிரிவுடனும் மக்கள் கழக இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் இளையர் பிரிவுடனும் சேர்ந்து விளையாட்டுகளை நடத்தினர்.
‘மனம் நிறைய நல்லிணக்கத்தோடு விளையாடுவோம்’ என்ற கருப்பொருளில் கலந்துகொண்டவர்களுக்கிடையே இன நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் விதத்தில் நிகழ்வு அமைந்தது. நார்த்லைட் பள்ளியில் இடம்பெற்ற விளையாட்டில் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
“சிங்கப்பூர் ஒரு பல்லின நாடு. விளையாட்டு மூலம் நல்லிணக்கத்தைக் கொண்டு வருவது ஒரு சிறந்த முயற்சி. விளையாட்டில் ஒவ்வொருவரும் ஆரவாரத்துடன் கலந்துகொண்டு ஈடுபடுவார்கள். நம் நாட்டின் நல்லிணக்கத்தைக் கட்டிக்காக்கும் விதமாக மேலும் பல முயற்சிகள் எடுக்க வேண்டும்,” என்று அமைச்சர் தனது உரையில் தெரிவித்தார்.
விளையாட்டுகளில் கலந்துகொண்டவர்கள் போட்டிக்கான பிரிவு, போட்டியில்லாத பிரிவு என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஃபுட்சால் காற்பந்து, கூடைப்பந்து, தரைப்பந்து, கேப்டன் பந்து, லேசர் டேக் எனும் குறிசுடும் விளையாட்டு, வில்வித்தை, கபடி ஆகியவற்றில் ஈடுபட்டனர்.
இந்து அறக்கட்டளை வாரியத்தின் இந்து இளையர் கட்டமைப்பின் தலைவரான கார்த்திக் ராமசாமி, “நாங்கள் இந்த நிகழ்வுக்காக இவ்வாண்டு ஜனவரி மாதமே திட்டமிடத் தொடங்கி விட்டோம். இளையர்களாக இருப்பதால் இளைய தலைமுறையினரை ஈர்க்கும் விளையாட்டுகளை இவ்வாண்டு சேர்க்க முனைந்தோம்,” என்று பகிர்ந்தார்.
இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைவர் திரு ராஜன் கிருஷ்ணன், “ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு எங்களுக்கு இதை வழிநடத்த வாய்ப்பு கிடைத்ததைக் கௌரவமாகக் கருதுகிறேன். வெறும் இந்தியர்களை மட்டும் மையமாக வைத்து ஏற்பாடு செய்யப்படும் ஒரு நிகழ்வாக இல்லாமல் அனைவரையும் உள்ளடக்கியது இந்நிகழ்வு,” என்றார்.
இந்து ஆலோசனை மன்றத்தின் தலைவர் திரு க. செங்குட்டுவன், “சமயங்களுக்கிடையில் எவ்வித விரிசலும் ஏற்படாமல் சமரசத்துடன் இருக்க இந்த நிகழ்வு ஒரு நல்ல முயற்சி. மக்களை இணைக்கும் ஒரு பாலமாக விளையாட்டு இருக்கிறது,” என்று கூறினார்.
நிகழ்வின் இறுதியில் போட்டி பிரிவுக்கான விளையாட்டுகளில் பங்கேற்று வெற்றி பெற்ற முதல் மூன்று குழுக்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. அடுத்த ஆண்டு கத்தோலிக்க சமய அமைப்பு விளையாட்டு நிகழ்வை எடுத்து நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

