தேசிய நாள் அணிவகுப்பு 2023ல் முழுமைத் தற்காப்பின் ஆறு தூண்களும் காட்சிக்கு இடம்பெறும்.
சிங்கப்பூர் ஆயுதப் படைகள், சிங்கப்பூர் காவல்துறை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவற்றை மட்டும் பிரதிபலித்த முந்தைய அணிவகுப்புகளைப்போல் அல்லாமல் இந்த ஆண்டு இடம்பெறக்கூடிய முழுமைத் தற்காப்பு அணிவகுப்பில் ஆறு பெரிய மிதவைகள் இடம்பெறும்.
அவை முழுமைத் தற்காப்பின் வெவ்வேறான தூண்களைப் பிரதிநிதிக்கும். அந்தத் தூண்களில் ஒன்று மனோவியல் தற்காப்பு. அது பாட்டி ஒருவரின் பொக்கிஷமான பொருள்களில் ஒன்றாக இருக்கக்கூடிய ஒரு பிஸ்கெட் டின் போன்ற வடிவத்தில் பிரதிநிதிக்கப்படும்.
ராணுவம், குடிமை, பொருளியல், சமூகம், மின்னிலக்கம் ஆகிய இதர ஐந்து தூண்களையும் பிரதிநிதிக்கும் அமைப்புகள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய இதர பொருள்களைப் போன்ற வடிவங்களைக் கொண்டிருக்கும்.
முழுமைத் தற்காப்பு அணிவகுப்பு தொடங்கும் போதும் முடியும் போதும் இரண்டு திரைப்படங்கள் திரையிடப்படும். அவை முழுமைத் தற்காப்பின் ஆறு தூண்களைப் பற்றி ஒரு பதின்ம வயதுப் பையன் தன்னுடைய குடும்பத்தாருக்கு அன்றாடம் பயன்படக்கூடிய பொருள்களைக் கொண்டு விளக்குவதாக இருக்கும்.
முழுமைத் தற்காப்பு அணிவகுப்பில் 650 பேர் பங்கேற்பர். முழுமைத் தற்காப்புக் கொடி, கடந்த 58 ஆண்டுகளில் முழுமைத் தற்காப்பிற்குத் தொண்டாற்றி இருக்கும் அனைவருக்கும் நன்றி கூறுவது உட்பட இதர பல அங்கங்களும் அந்த முழுமைத் தற்காப்பு அணிவகுப்பில் உள்ளடங்கி இருக்கும்.
தஞ்சோங் காத்தோங் தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த 29 மாணவர்கள் 2015 ஜூன் 5ஆம் தேதி மலேசியாவின் சாபாவில் தலைமைத்துவ முகாம் ஒன்றில் இருந்தனர்.
அப்போது 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அவர்களில் மொத்தம் ஏழு பேர் மாண்டுவிட்டனர். பல காயங்களுடன் 11 வயது சிறுவன் ஒருவன் உயிர் தப்பினான்.
அந்தச் சிறுவனுக்கு இப்போது வயது 19. மூன்றாவது சார்ஜண்ட் அர்ணாவ் கரண் சப்ரியா என்ற அந்தப் பதின்ம வயது இளைஞர் இப்போது முழுநேர தேசிய சேவையாளராக இருக்கிறார்.
அவர், பாடாங்கில் ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெறும் தேசிய தின அணிவகுப்பில் முழுமைத் தற்காப்பின் ஆறு தூண்களில் ஒன்றான மனோவியல் தூணைப் பிரதிநிதிக்கும் மிதவையின் உச்சியில் சிங்கப்பூருக்கே உரிய கனிவான சிங்கா உடையுடன் காட்சி தருவார்.
தேசிய தின அணிவகுப்பைக் காணும் ஆயிரக்கணக்கான மக்களிடையே மீள்திறனின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் தகவலைப் பரப்ப தான் விரும்புவதாக மூன்றாவது சார்ஜண்ட் அர்ணாவ் கரண் சப்ரியா தெரிவித்தார்.