படுக்கை இட பற்றாக்குறை; வெளிநாட்டு ஊழியர் எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு

படுக்கை இட பற்றாக்குறை; வெளிநாட்டு ஊழியர் எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு

3 mins read
92bb52eb-fdad-4799-9fae-94e5c86d5899
சிங்கப்பூரில் 2023 மே மாத நிலவரப்படி கட்டுமானத் துறை, கடல்துறை, பதனீட்டுத் தொழில் துறையில் வேலை அனுமதியுடன் சுமார் 434,000 வெளிநாட்டு ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் வேலை பார்க்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான படுக்கை இடங்கள் இப்போது பற்றாக்குறையாக உள்ளன.

இந்தப் பற்றாக்குறை, அடுத்த இரண்டாண்டுகளில் அத்தகைய ஊழியர்களின் எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் சாத்தியம் இருக்கிறது.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் கடந்த 2022 டிசம்பர் முதல் புதிதாக ஏறக்குறைய 17,000 படுக்கைகள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

இருந்தாலும்கூட இது போதாததாகத் தெரிகிறது. சென்ற ஆண்டு ஜனவரி மாதம் பொருளியல் திறந்துவிடப்பட்டது முதல் சிங்கப்பூருக்கு வேலைக்கு வரும் புதிய வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால் படுக்கைகளுக்கான பற்றாக்குறை நிலவி வருவதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.

இந்தப் பற்றாக்குறை பற்றி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்குப் பதிலளித்த மனிதவள அமைச்சு, வெளிநாட்டு ஊழியர் தங்கு விடுதிகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரிப்பது இயலாத ஒன்று என்று எச்சரித்தது.

முதலாளிகள் உற்பத்தித்திறனைப் பெருக்குவதன் மூலம் வெளிநாட்டு ஊழியர்களைக் குறைத்துக்கொள்ள வேண்டும் அல்லது சொந்தமாக ஊழியர் குடியிருப்புகளைக் கட்டுவது குறித்து அவர்கள் பரிசீலிக்க வேண்டும் என்று ஏற்கெனவே அமைச்சு வலியுறுத்தியிருந்தது. அதையே இப்போதும் அமைச்சு மீண்டும் வலியுறுத்தியது.

சிங்கப்பூருக்கு வெளிநாட்டு ஊழியர்கள் வருவதற்கு முன்பாகவே அவர்களுக்கான தங்குமிடங்களை முதலாளிகள் ஏற்படுத்திவிட வேண்டும்.

மேலும் பல கட்டுமானத் திட்டங்களை மேற்கொள்வதற்கு முன்னதாக புதிய ஊழியர்களுக்குத் தங்குமிடங்களை ஏற்படுத்தித் தருவதற்கான தங்கள் ஆற்றல்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு முதலாளிகள் செயல்பட வேண்டும் என்று அமைச்சு விளக்கியது.

சிங்கப்பூர் பொருளியல் கொவிட்-19 தாக்கத்தில் இருந்து மீண்டதை அடுத்து முதலாளிகள் அதிக வெளிநாட்டு ஊழியர்களை வேலையில் அமர்த்துகிறார்கள்.

வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் படுக்கைகளுக்கு அதிகத் தேவை ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு அதிக ஊழியர்களை முதலாளிகள் கொணர்வதும் ஒரு காரணம் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நாடாளுமன்றத்தில் ஜூலை மாதத் தொடக்கத்தில் எழுத்து மூலமாக அளித்த பதிலில் குறிப்பிட்டு இருந்தார்.

சிங்கப்பூரில் 2023 மே மாத நிலவரப்படி கட்டுமானத் துறை, கடல்துறை, பதனீட்டுத் தொழில் துறையில் வேலை அனுமதியுடன் சுமார் 434,000 வெளிநாட்டு ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.

இந்த எண்ணிக்கை, கொவிட்-19 தொற்றுக்கு முந்தைய 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 18% அதிகமாகும். 2022 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 35% அதிகமாகும்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் கடந்த 18 மாத காலத்தில் இந்த மூன்று துறைகளிலும் புதிதாக 112,000 ஊழியர்கள் சேர்ந்து இருக்கிறார்கள்.

நடைமுறைச் செலவு அதிகரித்து இருப்பதாலும் தேவை கூடி இருப்பதாலும் வர்த்தக ரீதியிலான விடுதிகளில் படுக்கைகளுக்கான சராசரி மாத வாடகை அதிகரித்து இருக்கிறது.

ஓர் ஊழியருக்கு 2021 முதலாம் காலாண்டில் $280 ஆக இருந்த அந்த வாடகை, 2023 முதலாம் காலாண்டில் $420 ஆகக் கூடி இருக்கிறது என்பதை டாக்டர் டான் சுட்டிக்காட்டினார்.

வாடகைக் கட்டணம் தொடர்ந்து கூடுகிறது என முதலாளிகள் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது. விடுதிகளில் சில படுக்கைகளுக்கான வாடகை மாதம் $600ஐ எட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது பற்றி கேட்டபோது, ஊழியர் தங்கு விடுதிகளில் கிடைக்கக்கூடிய படுக்கைகளின் எண்ணிக்கையையும் அவற்றின் வாடகையையும் அதிகாரிகள் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக அமைச்சு தெரிவித்தது.

இந்தத் தொழில்துறையுடன் சேர்ந்து செயல்பட்டு மேலும் படுக்கைகள் கிடைப்பதை அமைச்சு உறுதிப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்