இணையத்தில் போலியான பொருள்களை விற்றதாகச் சந்தேகிக்கப்படும் 32 வயது ஆடவர் ஒருவர் வியாழக்கிழமை நடத்தப்பட்ட அதிரடி சோதனையின்போது கைது செய்யப்பட்டார்.
இதில் $244,000 மதிப்புடைய போலி வாசனைத் திரவியம், காலணிகள், அழகு பராமரிப்புப் பொருள்களைக் காவல்துறையினர் கைப்பற்றினர்.
ஜூரோங் வெஸ்ட் சென்ட்ரலில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையின்போது வர்த்தகச் சின்னத்தை மீறியதாக நம்பப்படும் 3,300க்கும் அதிகமான பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
வர்த்தகச் சின்னத்தை மீறிய பொருள்களை வைத்திருந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், $100,000 வரை அபராதம் அல்லது ஐந்து ஆண்டு வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
சட்ட ரீதியிலான வர்த்தகங்கள், வாடிக்கையாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் லாபம் ஈட்டுவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல்துறை எச்சரித்தது.
இச்சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.