கென்னத் ஜெயரத்னம், ஃபேஸ்புக் பயனர், இணையத்தளத்திற்கு பொஃப்மா உத்தரவு

3 mins read
5e8d2d33-f52e-4a13-92ce-62cfe99b035b
எதிர்த்தரப்பு அரசியல்வாதியான கென்னத் ஜெயரத்னம், ஃபேஸ்புக் பயனர் தமிழ் செல்வன், ஜோம் என்ற இணைய வெளியீட்டுத்தளம் ஆகியவை திருத்த அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கின்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம் 

ரிடவுட் ரோடு விவகாரம் பற்றிய தவறான தகவல்களைக் கொண்டிருந்த சமூக ஊடகப் பதிவுகள், கட்டுரை தொடர்பில் திருத்தங்களை வெளியிடும்படி எதிர்த்தரப்பு அரசியல்வாதி, ஃபேஸ்புக் பயனர் ஆகியோருக்கும் ஜோம் என்ற இணைய வெளியீட்டுத் தளத்துக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

திருத்தங்களை வெளியிடும்படி சீர்திருத்தக் கட்சித் தலைவர் கென்னத் ஜெயரத்னம், ஃபேஸ்புக் பயனர் தமிழ் செல்வன் ஆகிய இருவருக்கும் இரண்டாம் சட்ட அமைச்சர் எட்வின் டோங் உத்தரவிட்டு இருப்பதாக சட்ட அமைச்சு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

சட்ட, உள்துறை அமைச்சர் சண்முகத்தின் புதல்வருடைய நிறுவனத்துக்கு குத்தகை கொடுக்கப்பட்டு இருப்பதாக நிலவும் ஊகச் செய்திகளை மறுத்து சிங்கப்பூர் நில ஆணையம் அறிக்கை வெளியிடுமா என்ற தலைப்பில் திரு ஜெயரத்னம் ஜூலை 2ஆம் தேதி ‘தி ரைஸ்பவுல் சிங்கப்பூர்’ என்ற தனது இணையத்தளத்தில் ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தார்.

திரு தமிழ் செல்வன் ஜூலை 1ஆம் தேதி ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டு இருந்தார்.

எண் 26 ரிடவுட் ரோடு மற்றும்/அல்லது எண் 31 ரிடவுட் ரோடு பங்களாக்களைப் புதுப்பிக்க ‘லிவ்ஸ்பேஸ்’ என்ற நிறுவனத்திற்கு சிங்கப்பூர் நில ஆணையம் குத்தகையைக் கொடுத்து இருந்ததாக அந்த இருவரும் அந்தக் கட்டுரையிலும் பதிவிலும் பொய்யான தகவல்களைத் தெரிவித்து இருந்தார்கள்.

அமைச்சர் கா சண்முகத்தின் புதல்வர், லிவ்ஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என்பதற்காக அந்தக் குத்தகை கொடுக்கப்பட்டதாகவும் அவர்கள் கோரி இருந்தனர்.

ஆனால், இது பொய் என்றும் அந்தக் குத்தகைகள் பகிரங்க ஒப்பந்தப்புள்ளி மூலம் தனித்தனியான ஒப்பந்தக்காரர்களுக்குக் கொடுக்கப்பட்டதாகவும் சட்ட அமைச்சு தெரிவித்தது.

பொஃப்மா சட்டத்தின்கீழ், திரு ஜெயரத்னமும் திரு தமிழ் செல்வனும் தங்களுடைய இணையத்தளத்திலும் டுவிட்டர், ஃபேஸ்புக் பக்கங்களிலும் திருத்த அறிவிப்பை வெளியிட வேண்டும்.

தாங்கள் வெளியிட்ட பதிவுகளும் கட்டுரைகளும் தவறான தகவல்களைக் கொண்டிருக்கின்றன என்பதை அவர்கள் அந்தத் திருத்த அறிவிப்பில் குறிப்பிட வேண்டும்.

அத்துடன், அந்தத் திருத்த அறிவிப்பில் ஓர் இணைப்பிற்கான ஏற்பாடும் இருக்க வேண்டும். அந்த இணைப்பு, இந்த விவகாரம் தொடர்பிலான உண்மையான நிலவரங்களையும் விளக்கங்களையும் கொண்டிருக்கும் அரசாங்கத்தின் அறிக்கைக்கு இட்டுச் செல்ல வேண்டும்.

இரண்டாம் சட்ட அமைச்சர் திரு டோங், ஜோம் என்ற இணைய வெளியீட்டுத் தளத்திற்கும் திருத்த உத்தரவை பிறப்பித்து இருக்கிறார் என்று சட்ட அமைச்சும் தொடர்பு, தகவல் அமைச்சும் ஞாயிற்றுக்கிழமை கூட்டறிக்கை ஒன்றில் தெரிவித்தன.

‘சிங்கப்பூர் திஸ் வீக்’ என்ற தலைப்பிலான கட்டுரையை ஜூலை 7ஆம் தேதி ஜோம் இணையத் தளம் வெளியிட்டு இருந்தது.

ரிடவுட் விவகாரம் தொடர்பில் அமைச்சர்கள் நடத்தை நியதிகளை மீறி இருக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறதா, அவர்களுக்கு ஏதாவது அனுகூலம் கிடைத்து இருக்கிறதா என்பதன் தொடர்பிலான கேள்விகளுக்கு மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் பதிலளிக்கவில்லை என்று அந்தக் கட்டுரை பொய்த் தகவல்களை வெளியிட்டு இருந்தது.

அது மட்டுமன்றி, ரிடவுட் பங்களாக்களை வாடகைக்கு எடுப்பவர்கள் அமைச்சர்களாக இருப்பதால் அந்தப் பங்களாக்களைப் புதுப்பிக்க சிங்கப்பூர் நில ஆணையம் $1 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையைச் செலவிட்டதாகவும் அந்தக் கட்டுரை தெரிவித்தது.

மூத்த அமைச்சர் டியோ நாடாளுமன்றத்தில் ஜூலை 3ஆம் தேதி தெரிவித்த முக்கியமான தகவல்களை ஜோம் இணையத்தளம் வெளியிடாமல் விட்டுவிட்டது என்பதை அமைச்சுகள் வெளியிட்ட கூட்டறிக்கை சுட்டியது.

திருத்த அறிவிப்பை வெளியிடும்படி ஜோம் தளத்திற்கு தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோவும் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.

எதிர்த்தரப்பு அரசியல்வாதியும் தலைமறைவாக இருப்பவருமான சார்ல்ஸ் இயோ வெளியிட்ட இணையத்தளப் பதிவு ஒன்றை வட்டார அளவில் தடை செய்யும்படி இன்ஸ்டகிராமை அரசாங்கம் கேட்டுக்கொண்டது என்று அதே ஜோம் செய்தியில் தவறாக தகவல் வெளியிடப்பட்டு இருந்தது.

இத்தகைய உத்தரவையோ வேண்டுகோளையோ இன்ஸ்டகிராமின் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு அரசாங்கம் பிறப்பிக்கவில்லை என்று அந்தக் கூட்டறிக்கை தெரிவித்தது.

திருத்த உத்தரவுக்கு ஏற்ப, ஜோம் இணையத்தளம் தான் வெளியிட்ட பதிவுகளில் பொய்யான தகவல்கள் இடம்பெற்று இருந்தன என்பதைக் குறிப்பிட வேண்டும்.

அதோடு மட்டுமன்றி, உண்மையான தகவல்களுக்கு இட்டுச் செல்லும் இணைப்பையும் அது தனது இணையத் தளத்திலும் சமூக ஊடகப் பக்கங்களிலும் வெளியான பதிவுகளில் சேர்க்க வேண்டும்.

குறிப்புச் சொற்கள்