இல்லப் பணிப்பெண்களுக்கு புடவை

இல்லப் பணிப்பெண்களுக்கு புடவை

2 mins read
aabb3f95-4a8f-4402-9661-f9763bea43f8
கண்ணையன் மீனாட்சி (இடமிருந்து மூன்றாவது), சாமுண்டேஸ்வரி குளஞ்சிநாதன் (இடமிருந்து இரண்டாவது) - படம்: பே. கார்த்திகேயன்
multi-img1 of 3

இந்தியப் பெண்கள் அதிகம் விரும்பி அணியும் உடை புடவையாக இருந்தாலும் சில முறை மட்டுமே புடவையைக் கட்டிய பிறகு அதை மீண்டும் அணியாமல் சேகரித்து வைத்திருப்பது பெரும்பாலான வீடுகளில் வழக்கமாகிவிட்டது.

அதன் காரணமாக சமூகத்தினரிடமிருந்து நன்கொடைகளாக பெறப்பட்ட கிட்டத்தட்ட 6000 பயன்படுத்தப்பட்ட புடவைகள் சிங்கப்பூரில் பணிபுரியும் இல்லப் பணிப்பெண்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் வளாகத்தில் இடம்பெற்ற ‘சேலைத் திருவிழா’ என்ற இந்நிகழ்வை முதல் முறையாக சிங்கப்பூரில் இயங்கி வரும் அரசு சாரா அமைப்பான இந்து நிலையம் ஏற்பாடு செய்திருந்தது.

இல்லப் பணிப்பெண்களை ஈர்த்ததுமின்றி பார்ப்பதற்குப் புதிதுபோல் இருக்கும் பயன்படுத்தப்பட்ட புடவைகள் $5 லிருந்து $30 வரை மலிவான விலையில் பொதுமக்களுக்கும் விற்கப்பட்டன.

இந்து நிலையத்தின் தலைவரான டாக்டர் ந. வரப்பிரசாத், “நாங்கள் ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் இதேபோல ஒரு நிகழ்வை வாரயிறுதியில் ஏற்பாடு செய்திருந்தோம். அதில் அமோக வரவேற்பு கிடைத்தது. பெண்கள் பெரும்பாலும் புடவைகளை வாங்கியபின் அவற்றை சில முறை பயன்படுத்திய பின்னர் மீண்டும் கட்டுவதில்லை. அப்படியே விட்டுவிடுவதற்குப் பதிலாக இல்லப் பணிப்பெண்களுக்கு வழங்குவதை உன்னதமாக கருதுகிறேன்.” என்றார்.

நிகழ்வு காலை 10 மணிக்கு தொடங்கியிருந்தாலும் 11.30 மணிக்குள் பெரும்பாலான இலவச புடவைகளை பல்வேறு இல்லப் பணிப்பெண்கள் பெற்றுக்கொள்ள ஒன்று திரண்டனர்.

இந்த சமூக நிகழ்வுக்கு வித்திட்ட இந்து நிலையத்தின் தொண்டூழியரான உமா ஜெயராமன், 57, “புடவைகளை நன்கொடையாக தந்த பெண்கள் சிலர் தங்கள் புடவையை ஒரு ஆண்டிற்கு மேலாக கட்டாமல் வைத்திருந்தார்கள். அலமாரியில் அந்தப் புடவைகள் வீணாக வைத்திருப்பதற்குப் பதிலாக தேவைப்படுவோருக்கு நாங்கள் வழங்க முற்பட்டோம். எதிர்காலத்தில் பயனாளிகளை சென்றடையும் நிகழ்வுகள் மேலும் பல ஏற்பாடு செய்வோம்.” என்று தெரிவித்தார்.

சிங்கப்பூரில் 15 ஆண்டுகளாக இல்லப் பணிப்பெண்ணாக பணிபுரியும் 43 வயது கண்ணையன் மீனாட்சி இதுபோன்ற நிகழ்வுக்கு வருவது இதுவே முதல் முறை.

வகைவகையான புடவைகளைக் கண்டு மலைத்துப் போன அவர், “நான் சிங்கப்பூரில் அதிகம் புடவை கட்டுவதில்லை. ஆனாலும் என்னைப் போன்ற இல்லப் பணிப்பெண்களுக்கு இந்த ஆதரவு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. கும்பகோணத்தில் இருக்கும் எனது தாயாருக்கும் ஊர் மக்களுக்கும் இந்தப் புடவைகளை அன்பளிப்பாக வழங்கப் போகிறேன்.” என்று பூரித்தார்.

தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்திலிருந்து 2007 ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு இல்லப் பணிப்பெண்ணாக பணிபுரிய வந்தார் சாமுண்டேஸ்வரி குளஞ்சிநாதன், 48.

தெரிந்த இல்லப் பணிப்பெண்கள் மூலம் நிகழ்வைப் பற்றி அறிய வந்த அவர், “எனக்கு புடவைகள் என்றால் மிகவும் விருப்பம். ஒவ்வொரு நன்னாளுக்கும் நான் புடவை அணிவேன். எனது வீட்டு உரிமையாளரும் எனக்கு அவ்வப்போது புடவைகள் தருவார். சில புடவைகளை இந்தியாவில் இருக்கும் எனது குடும்பத்தினருக்கு சரக்கு கப்பலில் அனுப்ப போகிறேன். சாதாரண நாளில் என்னால் இவ்வளவு புடவைகளை வாங்கியிருக்க முடியாது.” என்று பகிர்ந்தார்.

குறிப்புச் சொற்கள்