பாரம்பரிய ஒயிலாட்டத்தை 395 பேர் ஆடி சிங்கப்பூர் சாதனை நூலில் இடம்பெறுவதற்காக மக்கள் கழக இந்தியர் நற்பணிப் பேரவை ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.
அரங்கத்தை அதிர வைக்கும் இசையுடன் ஒயிலாட்டம் மக்களை கவரும் வண்ணம் ஆடினர் நடனக் கலைஞர்களும் மக்களும். சிங்கப்பூர் சாதனை நூலில் வெற்றிகரமாக இடம்பெற்றதையடுத்து நற்பணிப் பேரவைக்கும் ‘ஏ கே தியேட்டர்’ அமைப்பிற்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
அடித்தளத் தலைவர்கள், சமூக அமைப்பு பங்காளிகள், நிரந்தரவாசிகள், புதிதாக சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்றவர்கள் உள்ளிட் ட கிட்டத்தட்ட 4,000 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதில் கிட்டத்தட்ட 500 வசதிகுறைந்த குடும்பங்கள் சிண்டாவின் ஆதரவில் கலந்துகொண்டனர்.
டெளன்டவுன் ஈஸ்ட் டி மார்க்கீ இடத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மக்கள் மற்ற இந்திய சமூகங்களைப் பற்றி மேலும் அறிய கேளிக்கைக் கூடாரங்கள் அமைக்கப்பட்டன. சிங்கப்பூர் மலையாளிகள் சங்கம், சிங்கப்பூர், தெலுங்கு சமாஜம் வந்தோருக்கு விளையாட்டுகள், பாரம்பரிய இசைக்கருவிகள் போன்றவை பற்றி தகவல்களுடன் பலவிதமான நடவடிக்கைகளையும் ஏற்பாடு செய்தன.
இந்தியர்களிடையே ஒற்றுமையை வளர்க்கவும் சிங்கப்பூர் சமூகத்துடன் அவர்களை இணைக்கவும் 21 சமூக அமைப்புகளுடன் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொவிட்-19 பரவல் காலகட்டத்திற்கு பிறகு பெரிய அளவில் நற்பணி ஏற்பாடு செய்துள்ள முதல் நிகழ்ச்சியான இதற்கு துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்திருந்தார்.
சிங்கப்பூரில் இந்தியர்களின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து நற்பணி பேரவையின் அயராத உழைப்பையும் முயற்சிகளையும் பாராட்டினார் துணைப் பிரதமர். இதுவரை செயல்படுத்திய முயற்சிகளை சுட்டி சமூகத்தில் வசதி குறைந்தவர்களுக்கு உதவும் முக்கியத்துவத்தையும் துணைப் பிரதமர் தன் உரையில் வலியுறுத்தினார்.
மூத்த துணை அமைச்சரான டாக்டர் ஜனில் புதுச்சேரி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களுடன் உரையாடி அமைக்கப்பட்ட கண்காட்சிகளை ரசித்தார்.
தொடர்புடைய செய்திகள்
வந்திருந்த வட்டாரவாசிகள், குழந்தைகள் ஆகியோர் நுழைவுச்சீட்டு பெற்று நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ‘வைல்ட் வைல்ட் வெட்’ நீர்ப் பூங்காவுக்குச் சென்று இனிதாகப் பொழுதைக் கழித்தனர்.
குறைந்த வசதிகொண்ட குடும்பங்களுக்கும் இலவசமாக ‘வைல்ட் வைல்ட் வெட்’ நீர்ப் பூங்காவுக்கு செல்லும் வாய்ப்பையும் அளித்தது நற்பணி.
கடந்த ஈராண்டுகளாக நற்பணிப் பேரவை இளையர்கள் பிரிவில் தொண்டூழியராக இருக்கும் திருவாட்டி மரகத பிரியா, 33, தமிழ்நாட்டில் ஒயிலாட்டத்தை கண்ணால் ரசித்ததோடு இதுவே ஆட்டத்தில் கலந்துகொள்வது முதல்முறை என்று தெரிவித்தார். நண்பர்களுடன் சேர்ந்து ஆடுவதில் மகிழ்ச்சி அடைந்ததாகவும் அவர் பகிர்ந்துகொண்டார்.
2019இல் சிங்கப்பூர் குடிமகனான இவர், சமூகத்தில் உள்ள வசதி குறைந்தவர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கியதோடு அவர்களுக்கு மேலும் எப்படி உதவலாம் என்று யோசிக்க ஆரம்பித்தார்.
“மற்ற இளையர்களையும் ஊக்குவித்து சமூகத்திற்கு திருப்பிக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்க்க நற்பணி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. வசதி இல்லாதவர்களுக்கு வாய்ப்பளிக்கும் இந்த முயற்சியை கண்டு என் மகள் உதவி செய்யும் பழக்கத்தை மேற்கொள்வார் என்று நம்புகிறேன்,” என்றார் திருவாட்டி மரகத பிரியா.