தாமதமான வீவக திட்டங்கள் 2025 தொடக்கத்தில் கட்டி முடிக்கப்படும்

தாமதமான வீவக திட்டங்கள் 2025 தொடக்கத்தில் கட்டி முடிக்கப்படும்

2 mins read
f3a3840d-7828-4707-a09f-8513f45191b9
செங்காங்கில் கட்டப்பட்டு இருக்கும் அங்கோர்வேல் வில்லேஜ் வீடுகள் தாமதமான இரண்டு பிடிஓ திட்டங்களில் ஒன்றாகும். - படம்: சாவ் பாவ் 

சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்று காரணமாக தாமதமடைந்த அனைத்து பொது வீடமைப்புத் திட்டங்களும் 2025 தொடக்கத்தில் பூர்த்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிடிஓ வீடுகளின் கட்டுமானத் தாமதத்தை அகற்றுவதற்கான தனது முயற்சிகள் பற்றிய ஆகப் புதிய தகவல்களை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

இதுவரையில் அத்தகைய பிடிஓ திட்டங்களில் ஏறக்குறைய 72 விழுக்காட்டுத் திட்டங்கள் அல்லது 66 வீடமைப்புக் கட்டுமானங்கள் 2022 அக்டோபருக்கும் 2023 ஜூன் மாதத்திற்கும் இடையில் முடிக்கப்பட்டு இருக்கின்றன.

தாமதமான எஞ்சிய 28 விழுக்காட்டுத் திட்டங்கள் இப்போது கட்டப்பட்டு வருகின்றன என்று கழகம் தெரிவித்தது.

வீவக இந்த ஆண்டின் முதல் பாதியில் 16 குடியிருப்புத் திட்டங்களில் சுமார் 11,940 அடுக்குமாடி வீடுகளைக் கட்டி முடித்தது.

கடந்த 2018ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆறு மாத காலத்தில் இந்த அளவுக்கு அதிகமாக கழகம் இப்போதுதான் வீடுகளை கட்டி இருக்கிறது.

கடந்த 2018ல் 11 கட்டுமான திட்டங்களில் 9,190 வீடுகள் கட்டப்பட்டன.

செங்காங்கில் உள்ள ஏங்கர்வேல் வில்லேஜ் வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு இருக்கின்றன.

தங்கள் வீட்டுச் சாவிகளை ஜூலை 10ஆம் தேதி பெற்றுக்கொள்ளலாம் என்று அங்குள்ள இரண்டு குடியிருப்பு புளோக்குகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

இன்றைய தேதி வாக்கில் 115 குடும்பத்தினர் தங்கள் வீடுகளுக்கான சாவிகளைப் பெற்றுக் கொண்டனர் என்று கழகம் தெரிவித்தது.

ஏங்கர்வேல் வில்லேஜ் திட்டத்தில் வீடுகளை முன்பதிவு செய்திருந்த 197 பேர் அந்தத் திட்டம் தாமதம் அடைந்ததன் காரணமாக ஈட்டுத்தொகையைப் பெறவிருக்கிறார்கள்.

இந்தத் தொகை $1,100 முதல் $4,500 வரைப்பட்ட தாக இருக்கும். சராசரி தொகை $3,000. மொத்தம் 197 குடும்பங்களுக்கும் கிடைக்கக்கூடிய மொத்த ஈட்டுத்தொகை சுமார் $600,000 ஆக இருக்கும் என்று மதிப்பிடப்படுவதாக கழகம் தெரிவித்தது.

இப்படி தாமதமாக சாவிகள் ஒப்படைக்கப்பட்ட மற்றொரு கட்டுமானத் திட்டம் பொங்கோல் வாட்டார்வே சன்ரைஸ் திட்டமாகும்.

வாட்டார்வே சன்ரைஸ் II திட்டத்தில் வீடுகளை வாங்கிய 896 பேருக்குத் தாமதம் காரணமாக சுமார் $5.1 மில்லியன் ஈட்டுத்தொகையை வழங்கப்போவதாக கழகம் மார்ச் மாதம் தெரிவித்தது. சராசரியாக $5,750 கிடைக்கும்.

வீடு வாங்குவோருக்கு கட்டுமான தாமதம் காரணமாக சங்கடம் ஏற்படுவதை தான் ஒப்புக்கொள்வதாகக் குறிப்பிட்ட கழகம், தரம், பாதுகாப்புக் குறையின்றி கூடுமானவரை வேகமாக வீடுகளைக் கட்டி ஒப்படைக்க தன்னால் ஆன அனைத்தையும் செய்வதாகவும் கூறியது.

வீடுகளை வாங்குவார் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு அமைதி காத்து வருகிறார்கள் என்றும் இதற்காக தான் அவர்களுக்கு நன்றி கூறுவதாகவும் கழகம் தெரிவித்தது.

இந்த ஆண்டில் ஏறக்குறைய 20,000 வீடுகளை கட்டி முடித்து சாவிகளை ஒப்படைக்கும் வகையில் திட்டமிட்டப்படி பணிகள் நடந்து வருவதாக கழகம் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்