இந்தியாவில் மீண்டும் எலன்

2 mins read
f1c25e37-67af-4056-ab25-1f631aa291de
அமெரிக்க நிதி அமைச்சர் ஜெனட் எலன் ஒன்பது மாதங்களில் இந்தியாவுக்கு மூன்றாவது முறையாகச் சென்றிருக்கிறார். - படம்: ராய்ட்டர்ஸ் 

அமெரிக்க நிதி அமைச்சர் ஜெனட் எலன் கடந்த ஒன்பது மாதங்களில் மூன்றாவது முறையாக இந்தியாவுக்கு வருகை அளித்து இருக்கிறார்.

அண்மையில் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க அமைச்சரின் இந்த இந்தியப் பயணம், இந்திய-அமெரிக்க உறவின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக நம்பப்படுகிறது. இரு நாட்டு உறவும் இந்தப் பயணம் மூலம் மேலும் அணுக்கமடையும் என்றும் கூறப்படுகிறது.

உலகப் பொருளியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதும் திருவாட்டி எலனின் இந்தியப் பயணத்தின் நோக்கம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அமைச்சர் எலன் இப்போதைய இந்தியப் பயணத்தின்போது ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்களைச் சந்திக்கிறார். அதற்கு முன்னதாக அவர், ஞாயிற்றுக்கிழமை குஜராத் மாநிலத்தின் தலைநகர் காந்தி நகரில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலவும் மனமுவந்த உறவை மேலும் பேணி வளர்க்க தான் முயல்வதாக அவர் குறிப்பிட்டார்.

வியட்னாமின் ஹனோய் நகருக்குச் செல்வதும் தமது திட்டத்தில் அடங்கும் என்றார் அவர். பொருளியல் பிரச்சினைகளை எதிர்நோக்கும் வளரும் நாடுகளின் கடன் சுமையைச் சீரமைப்பதன் தொடர்பில் முயற்சிகளை மேற்கொள்வது தமது இந்தியப் பயணத்தின் நோக்கம் என்றாரவர்.

டாக்டர் எலன் இந்தியாவுக்கு மூன்றாவது முறையாக வந்திருப்பது அமெரிக்க-இந்திய உறவின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

உக்ரேன் பிரச்சினை பற்றி கருத்து கூறிய டாக்டர் எலன், உக்ரேன் போர் முடிய வேண்டும் என்பதே மிக முக்கியமான ஒன்று என்றார்.

உக்ரேனில் போரைத் தொடர்வதற்குத் தேவைப்படக்கூடிய ராணுவச் சாதனங்களும் தொழில்நுட்பங்களும் ரஷ்யாவின் கைக்கு கிடைப்பதைத் தடுப்பதற்கான முயற்சிகளை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொள்ளும் என்று அமெரிக்க அமைச்சர் உறுதிபட கூறினார்.

பரஸ்பர நன்மைகள், ஏழை நாடுகளின் கடன் சுமை குறைப்பு உள்ளிட்ட துறைகளில் சீனாவுடன் சேர்ந்து செயல்பட தான் நாட்டமாக இருப்பதாக அமெரிக்க நிதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

அண்மையில் பெய்ஜிங்கிற்குத் தான் மேற்கொண்ட பயணம் பற்றி குறிப்பிட்ட டாக்டர் எலன், தன்னுடைய சீனப் பயணம் காரணமாக அமெரிக்க-சீன உறவு மேம்பாட்டில் நிச்சயமான ஒரு நிலை ஏற்பட உதவி கிடைத்து இருக்கிறது என்றார். உலகின் மாபெரும் பொருளியல் வல்லரசுகளான அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர அக்கறைக்குரிய துறைகளில் ஒத்துழைக்க வேண்டும். இந்தக் கடமை அந்த நாடுகளுக்கு இருக்கிறது என்று அவர் தெரிவித்தார். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் உறவு மேம்பட ஏராளமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது என்றும் அண்மையில் தான் மேற்கொண்ட சீனப் பயணம் மிக முக்கியமான ஒரு தொடக்கம் என்று தான் நம்புவதாகவும் டாக்டர் எலன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்