நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின்னுக்கும் சக மக்கள் செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் செங் லி ஹுவிக்கும் இடையிலான தகாத உறவு பிப்ரவரி மாதம் நான் அறிவுரை கூறிய பின்னரும் தொடர்ந்ததாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
அவர்கள் இருவருக்கும் இடையிலான உறவு குறித்து 2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்குப் பின் தமக்கு தெரிய வந்தது என்றும் ஆனால் அது எப்பொழுது தொடங்கியது என்று தமக்கு தெரியாது என்றும் பிரதமர் கூறினார்.
மக்கள் செயல் கட்சியிலிருந்து தாங்கள் விலகிவிட்டதாக திரு டான் சுவான் ஜின், திருவாட்டி செங் லி ஹுவி அறிவித்ததன் தொடர்பில் கூட்டப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர்கள் இருவரிடமும் தான் பிப்ரவரி மாதம் பேசி அறிவுறுத்தியதாக பிரதமர் சொன்னார். எனினும், ஜூலை மாதம் தமக்குக் கிடைத்த வலுவான தகவலின்படி அவர்கள் இருவரும் தங்கள் உறவை தொடர்வதாகக் கோடி காட்டின என்றும் பிரதமர் தெளிவுபடுத்தினார்.
“அப்பொழுதே திரு டான் பதவி விலக வேண்டும் என்று நான் முடிவெடுத்தேன். அதற்கான ஏற்பாடுகள் தயார்நிலையில் இருந்தாலும் இல்லையென்றாலும் அவர் பதவி விலக வேண்டும். அதற்குமேல் காத்திருக்க முடியாது என்று நான் முடிவெடுத்தேன்,” என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார்.
“நாடாளுமன்ற நாயகர் ஒருவர் சக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் தகாத உறவு வைத்துள்ளது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல, அது முறையானதும் அல்ல,” என்று பிரதமர் கூறினார்.
பிப்ரவரி மாதம் தான் செய்தது தவறு என்பதை திரு டான் ஒப்புக்கொண்டார். அவர் பதவி விலக முன்வந்தார். அதைப் பிரதமரும் தான் ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார்.
ஆனால், கெம்பாங்கான்-சாய் சீ தொகுதியும் மரின் பரேட் குழுத்தொகுதியும் தொடர்ந்து கவனித்துக் கொள்ளப்பட வேண்டியதை தான் உறுதிசெய்ய வேண்டியிருந்ததாக திரு லீ கூறினார். இதற்கிடையே, திருவாட்டி செங்குடன் திரு டானுக்கு இருந்த தகாத உறவும் முடிவுக்கு வரவேண்டியது அவசியம் என்று பிரதமர் மேலும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“மக்கள் செயல் கட்சி எதிர்பார்க்கும் உயர் தரநிலைகளிலிருந்து கட்சியின் இந்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழுவியிருப்பது எனக்கு கவலை தருகிறது. இப்படிப்பட்ட ஒரு நிலை உருவாகும்போது மக்கள் செயல் கட்சியின் தலைமைச் செயலாளர் என்ற முறையில் அதைச் சரிசெய்ய வேண்டியது எனது பொறுப்பு. அந்த அடிப்படையில், அறிவுரை வழங்குவது, தவற்றைத் திருத்துவது, இறுதியில் தேவையானால் கட்சியிலிருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் அவர்களை விலக்குவது,” என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.
நாடாளுமன்றக் கூட்டத்தின் அடுத்த தொடர் ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்கும்போது தான் புதிய நாடாளுமன்ற நாயகரின் பெயரை அறிவிக்கவுள்ளதாக திரு லீ கூறினார். அப்பொழுது தான் இது குறித்து அமைச்சர்நிலை அறிக்கை ஒன்றையும் வாசிக்க உள்ளதாக பிரதமர் சொன்னார்.
இடைக்காலத்தில், நாடாளுமன்ற துணை நாயகர் திருவாட்டி ஜெசிக்கா டான் நாடாளுமன்ற நாயகராக பொறுப்பேற்பார் என்றும் திரு லீ தெரிவித்தார்.
திரு டான், திருவாட்டி செங் இருவரின் குடும்பத்தினர் இந்தப் பிரச்சினையிலிருந்து மீண்டுவரவும் ஆறுதல் பெறவும் அவர்களுக்கு தேவையான கால, நேர அவகாசத்தை வழங்கும்படியும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
இதுபோல், 2012ஆம் ஆண்டு மக்கள் செயல் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற நாயகர் மைக்கல் பாமர் விவகாரமும் தற்போதைய விவகாரமும் கையாளப்பட்ட முறை மாறுபட்டுள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்த திரு லீ, இரண்டு விவகாரங்களையும் ஒன்றாக வைத்துப் பார்க்க முடியாது என்று கூறினார்.
இந்த விவகாரத்தால் அடுத்த பொதுத்தேர்தலை எப்பொழுது வைத்துக்கொள்ளலாம் என்ற தமது முடிவில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு பதிலளித்த பிரதமர், பொதுத்தேர்தலை உடனடியாக நடத்தும் எண்ணம் எதுவும் தமக்கு இல்லை என்று கூறினார்.
தற்போதைய அரசின் இரண்டாம் கட்டம் இப்பொழுதுதான் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்த திரு லீ, அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் கைநிறைய இருப்பதாகவும் அதில் அரசு முழுமூச்சுடன் ஈடுபட்டுள்ளதாகவும் திரு லீ சியன் லூங் விளக்கினார்.
அண்மையில் நடந்துள்ள சில சம்பவங்கள் மக்கள் செயல் கட்சியில் தரநிலைகள் கீழிறங்கிவிட்டதாக நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த பிரதமர், இதுபோன்ற சம்பவங்களால் அவ்வப்போது நடைபெறும் என்று கூறினார்.
செய்தியாளர் சந்திப்பில் முடிவாகப் பேசிய திரு லீ, தமது தந்தையும் முன்னாள் பிரதமருமான திரு லீ குவான் இயூ கூறியதை நினைவுகூர்ந்தார். அப்பொழுது திரு லீ குவான் இயூ, “நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், அரசு முறை ஊழலில் சிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதை நடக்கவே விடாதீர்கள். தரநிலைகளை உயர்த்திப் பிடியுங்கள், சிங்கப்பூர் செயல்படும் நாடாக விளங்குவதை உறுதி செய்யுங்கள்,” என்று திரு லீ குவான் இயூ கூறியதை பிரதமர் சுட்டினார்.

