டின் பெய் லிங்கும் லிம் பியாவ் சுவானும் மரின் பரேட் குழுத்தொகுதி உறுப்பினர்களுக்கு உதவுவர்

டின் பெய் லிங்கும் லிம் பியாவ் சுவானும் மரின் பரேட் குழுத்தொகுதி உறுப்பினர்களுக்கு உதவுவர்

2 mins read
82b1a2a3-ac1a-4e97-aeb7-d243997bf7eb
எண் 35, சாய் சீ அவென்யூவில் உள்ள மசெக அலுலகத்தில் திங்கட்கிழமை மக்களைச் சந்தித்த அமைச்சர் எட்வின் டோங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின் பதவி விலகியதை அடுத்து, கெம்பாங்கான்-சாய் சீ குடியிருப்பாளர்களின் தேவைகளைக் கவனித்துக்கொள்ள மரின் பரேட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மவுண்ட்பேட்டன் தனித்தொகுதி உறுப்பினர் லிம் பியாவ் சுவானும் மெக்பெர்சன் தனித்தொகுதி உறுப்பினர் டின் பெய் லிங்கும் உதவுவார்கள்.

ஆளும் மக்கள் செயல் கட்சியை உலுக்கிய அண்மைய சம்பவத்தில், தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செங் லி ஹுய்யும் திரு டானுடனான தகாத உறவு காரணமாக பதவி விலகினார்.

கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங், தானும் மற்ற மரின் பரேட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களான மனிதவள அமைச்சர் டான் சீ லெங், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சியா கியான் பெங், முகம்மது ஃபாஹ்மி அலிமான், திரு லிம், திருவாட்டி டின் ஆகியோரின் உதவியுடன் கெம்பாங்கான்-சாய் சீ குடியிருப்பாளர்களுக்கு சேவையாற்றுவார்கள் என்றும் திங்களன்று ஒரு பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“உடனடி முன்னுரிமை கெம்பாங்கான்-சாய் சீ குடியிருப்பாளர்கள் கவனித்துக் கொள்ளப்படுவதையும் அவர்களின் தேவைகள் கவனிக்கப்படுவதையும் உறுதிசெய்வதாகும்,” என்று திரு டோங் கூறினார். அவரும் டாக்டர் டானும் மரின் பரேட் குழுத்தொகுதியின் தலைமை அமைச்சர்களாக உள்ளனர்.

மக்கள் சந்திப்பில் முன்வைக்கப்படும் வழக்குகள், மேல்முறையீடுகள் அனைத்தையும் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையாள்வார்கள். பல்வேறு சமூகத் திட்டங்களையும் அவர்கள் தொடர்வார்கள். கெம்பாங்கான்-சாய் சீ அடித்தள அமைப்புகளுக்கான ஆலோசகராகத் திரு டோங் பொறுப்பேற்பார்.

டாக்டர் டான் மரின் பரேட் நகர மன்றத்துடன் அணுக்கமாகப் பணியாற்றி குடியிருப்பாளர்களின் நகராட்சி சேவைகள், உள்கட்டமைப்பு தேவைகளில் கவனம் செலுத்துவார்.

தானும் டாக்டர் டானும் கெம்பாங்கன்-சாய் சீ ஆர்வலர்களையும் தொண்டூழியர்களையும் சந்தித்ததாக திரு டோங் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.

தெம்பனிஸ் கிழக்கில், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி மற்ற தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் கோ போ கூன், திரு பே யாம் கெங், திரு டெஸ்மண்ட் சூ ஆகியோரின் உதவியுடன் குமாரி செங்கின் குடியிருப்பாளர்களை கவனித்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

திரு சூ நகர மன்றத்தின் தலைவராக நியமிக்கப்படுவார் என்றும், திரு பேய் துணைத் தலைவராக இருப்பார் என்றும் அவர் கூறினார்.

“அவர்கள் தலைமையின் கீழ், நகர மன்றம் தடையின்றி தொடர்ந்து செயல்படும். தெம்பனிஸ் குழுத்தொகுதிவாசிகள் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் எங்களில் எவரையும் சந்திக்கலாம் அல்லது எங்களுக்கு எழுதலாம்,” என்றார் திரு மசகோஸ்.

குறிப்புச் சொற்கள்