அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லியோன் பெரேராவுக்கும் பாட்டாளிக் கட்சி மூத்த உறுப்பினர் திருவாட்டி நிக்கோல் சியாவுக்கும் இடையே தகாத உறவு இருப்பதாக கட்சி மட்டத்தில் 2020ஆம் ஆண்டு இறுதி, 2021ஆம் ஆண்டு தொடக்கத்திலும் தகவல் வந்ததாக அறியப்படுகிறது.
அவ்விருவரும் அடிக்கடி ஹோட்டல்களுக்கு செல்வதும் முறையற்று நடந்துகொள்வதாகவும் 2020ஆம் ஆண்டு மத்தியிலேயே புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது. அத்துடன், இந்தப் பிரச்சினை கட்சித் தலைவர்களிடம் 2021ஆம் ஆண்டில் தெரிவிக்கப்பட்டதாகவும் செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரு பெரேரா அப்பொழுது திருவாட்டி நிக்கோல் சியாவுக்கு மதியுரைஞராக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்றாலும் அவர்களின் சந்திப்பு இதையும் தாண்டிய ஒன்றாக இருந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர்களுக்கு எதிரான புகார் கட்சித் தலைவி திருவாட்டி சில்வியா லிம், செங்காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஜேமஸ் லிம் ஆகியோரிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் அறியப்படுகிறது.
அத்துடன், கட்சித் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெரல்ட் கியாம், டெனிஸ் டான் ஆகியோரும் இது குறித்த புகார்களை அறிந்திருந்ததாக நம்பப்படுகிறது.
இதுபற்றிக் கேட்டதற்கு பாட்டாளிக் கட்சியின் பிரித்தம் சிங் தகுந்த நேரத்தில் இவை அனைத்தும் குறித்து தாம் ஒரே வீச்சில் ஊடகங்களுக்கு தெரிவிக்கப் போவதாக விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், திங்கட்கிழமையன்று திரு சிங்கும் மற்ற கட்சித் தலைவர்களும் திரு பெரேரா, திருவாட்டி நிக்கோல் சியா தொடர்பான விவகாரம் பற்றி கேலாங்கில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் விவாதித்ததாகத் தெரிகிறது.
இதற்கிடையே, எதிர்க்கட்சித் தலைவரான திரு சிங் பாட்டாளிக் கட்சியின் மத்திய செயற்குழுவின் கலந்தாலோசனை தொடர்வதாகத் தெரிவித்துள்ளார்.
பாட்டாளி கட்சியின் மத்திய செயற்குழுவில் திரு ஜேமஸ் லிம், முன்னாள் தலைமைச் செயலாளர் லோ தியா கியாங், ஜெரல்ட் கியாம், ஃபைசல் மனாப், டெனிஸ் டான், இணைப் பேராசிரியர் லிம் லூவிஸ் சுவா, திருவாட்டி ஹி டிங் ரு மற்றும் பலர் உள்ளனர்.
அந்த கலந்தாலோசனையில் திரு பெரோராவும் திருவாட்டி நிக்கோல் சியாவும் பங்கேற்கவில்லை.