லியோன் பெரேரா, நிக்கோல் சியா விவகாரம்: புதன்கிழமை பாட்டாளிக் கட்சியின் செய்தியாளர் கூட்டம்

லியோன் பெரேரா, நிக்கோல் சியா விவகாரம்: புதன்கிழமை பாட்டாளிக் கட்சியின் செய்தியாளர் கூட்டம்

2 mins read
fc3c79c8-6440-4261-9de2-9f00cf30c1cd
புதன்கிழமையன்று பாட்டாளிக் கட்சியின் செய்தியாளர் கூட்டம் நடைபெறும் என்று அதன் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் கூறினார். - படம்: ஷின் மின்

பாட்டாளிக் கட்சி புதன்கிழமை செய்தியாளர் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.

அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லியோன் பெரேராவும் பாட்டாளிக் கட்சி மூத்த உறுப்பினர் திருவாட்டி நிக்கோல் சியாவும் கைகளைப் பிடித்தவாறு எடுக்கப்பட்ட காணொளி ஒன்று இணையத்தில் வலம்வருகையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான பிரித்தம் சிங் தலைமையில் கேலாங்கிலுள்ள கட்சித் தலைமையகத்தில் செய்தியாளர் கூட்டம் நடைபெறும் என்று கட்சியின் ஊடகக் குழு செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்தது.

இரண்டு மூத்த கட்சி உறுப்பினர்களின் தகாத முறையில் நடந்துகொண்டதன் தொடர்பில் காணொளி ஒன்று இணையத்தில் வலம்வருவதை பாட்டாளிக் கட்சி ஆராய்ந்து வருவதாக திங்கட்கிழமையன்று பாட்டாளிக் கட்சி குறிப்பிட்டது.

அந்த 15 வினாடிக் காணொளியில் உணவகம் ஒன்றில் அமர்ந்தவாறு திருவாட்டி சியா போன்ற தோற்றங்கொண்ட ஒரு மாதின் கையை திரு பெரேரா வருடுவதாகத் தெரிகிறது.

திரு பெரேரா திருமணமானவர்; பிள்ளைகளும் உண்டு. அவரைப் போல் திருவாட்டி சியாவுக்கும் திருமணமாகிப் பிள்ளைகள் இருக்கிறார்கள். பாட்டாளிக் கட்சி தொடர்பில் முக்கியமான முடிவுகளை எடுக்கும் 15 உறுப்பினர்கள் அடங்கிய மத்திய செயற்குழுவில் இவ்விருவரும் அங்கம் வகிக்கின்றனர்.

அத்துடன் 53 வயது திரு பெரேரா அல்ஜுனிட் குழுத்தொகுதியின் சிராங்கூன் பிரிவுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். கட்சியின் ஊடகக் குழுவும் இவரின் தலைமையில் செயல்பட்டு வருகிறது.

திருவாட்டி சியா, 36, பாட்டாளிக் கட்சியின் இளையர் பிரிவுத் தலைவர். 2020 பொதுத் தேர்தலில் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சிக்கு எதிராகப் போட்டியிட்டு சிறிதளவு வாக்கு எண்ணிக்கையில் தோல்வி கண்ட பாட்டாளிக் கட்சி உறுப்பினராகவும் இவர் இருந்தார்.

திரு பெரேரா, திருவாட்டி சியா விவகாரம் தொடர்பில் கலந்தாலோசிக்க பாட்டாளிக் கட்சியின் மத்திய செயற்குழு திங்கட்கிழமை இரவு கேலாங் தலைமையகத்தில் சந்தித்ததாக அறியப்படுகிறது.

சந்திப்புக் கூட்டத்திற்குப் பிறகு விரைவில் இவ்விவகாரம் குறித்த ஆகக் கடைசி நிலவரம் விரைவில் தெரிவிக்கப்படும் என்று திரு சிங் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

பாட்டாளி கட்சியின் மத்திய செயற்குழுவில் திரு ஜேமஸ் லிம், முன்னாள் தலைமைச் செயலாளர் லோ தியா கியாங், ஜெரல்ட் கியாம், ஃபைசல் மனாப், டெனிஸ் டான், இணைப் பேராசிரியர் லிம் லூவிஸ் சுவா, திருவாட்டி ஹி டிங் ரு மற்றும் பலர் உள்ளனர்.

திங்கட்கிழமை நடந்த கலந்தாலோசனையில் திரு பெரோராவும் திருவாட்டி நிக்கோல் சியாவும் பங்கேற்கவில்லை.

குறிப்புச் சொற்கள்