மோசடிக் குற்றங்களுக்காக புரூடென்ஷியல் அஷ்ஷூரன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதிநிதியான ஹுவாங் மெங்திங்கிற்கு எதிராக சிங்கப்பூர் நாணய ஆணையம் ஐந்து ஆண்டுகளுக்குத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
2019 ஜூலைக்கும் 2020 நவம்பருக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் தமது வாடிக்கையாளர்களின் விபத்து தொடர்பான கோரிக்கைகளை ஒருங்கிணைக்க 11 போலியான விலைப் பட்டியல்களைத் திருத்தியமைத்து ஹுவாங் சமர்ப்பித்தார். இதன்மூலம் புரூடென்ஷியல் நிறுவனத்திடமிருந்து அவருடைய வாடிக்கையாளர்களுக்கு $3,287.82 வழங்குதொகை கிடைத்தது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி ஹுவாங்கிற்கு எதிராக நான்கு மோசடிக் குற்றச்சாட்டுகள் நிரூபணமாகின. அவருக்கு ஆறு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் ஹுவாங்கிற்குப் பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு புதன்கிழமை நடப்புக்கு வந்தது. நிதி ஆலோசனை சேவை வழங்குவது, நிர்வாகத்தில் பங்கெடுப்பது, இயக்குநராகச் செயல்படுவது, பங்குதாரராவது ஆகியவற்றிலிருந்து அவருக்குத் தடை விதிக்கப்படுகிறது.