சிங்கப்பூரில் நேர்மையுடன் நிபுணத்துவத்துடன் பணியாற்றும் பொதுச் சேவை அதிகாரிகள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று அரசாங்கச் சேவைத் தலைவர் லியோ யிப் உறுதிபட தெரிவித்து இருக்கிறார்.
அரசியல் அரங்கில் அதிர்ச்சிகளை ஏற்படுத்தக்கூடிய அளவில் பல சம்பவங்கள் இடம்பெற்றிருக்கக்கூடிய சூழலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்றிருக்கும் சம்பவங்கள் பல சிங்கப்பூரர்களிடையே, அரசாங்க அதிகாரிகளிடையே கவலையை ஏற்படுத்தி இருக்கின்றன.
இந்தச் சூழலில் திரு யிப் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஒரு செய்தியில், நேர்மையோடும் நிபுணத்துவத்தோடும் பணியாற்றும் பொதுச் சேவை அதிகாரிகள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
திரு யிப் வெளியிட்டு உள்ள செய்தியைத் தான் பார்த்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் ரிடவுட் பங்களாக்களை வாடகைக்கு எடுத்திருந்த விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதம்;
போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் ஊழல் புலன்விசாரணையில் உதவி வரும் விவகாரம்;
நாடாளுமன்ற நாயகர் டான் சுவான்-ஜின், தெம்பனிஸ் குழுத்தொகுதி உறுப்பினர் செங் லி ஹுய் இருவரும் பதவி விலகி இருக்கும் விவகாரம் ஆகியவற்றை திரு யிப் சுட்டிக்காட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
பொதுச் சேவையைப் பொறுத்தவரை அது இப்போது சங்கடமான ஒரு நேரத்தை எதிர்நோக்குகிறது.
என்னதான் நடக்கிறது இங்கே என்று சில அதிகாரிகள் கேள்வி எழுப்புகிறார்கள். மற்றவர்கள் இது அரசாங்கத்தையும் ஆளுமை முறையையும் எப்படி பாதிக்கும் என்பது பற்றி கவலைப்படுகிறார்கள். மற்றவர்கள் ஏமாற்றமடைந்து இருக்கிறார்கள் அல்லது கோபமடைந்து இருக்கிறார்கள் என்று திரு யிப் குறிப்பிட்டார்.
இவை எல்லாம் இயற்கையானவைதான், புரிந்து கொள்ளக்கூடியவைதான் என்றாரவர்.
சில அதிகாரிகளிடையே, சில அமைப்புகளில் மன உறுதி பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதைத் தான் புரிந்துகொள்வதாக அவர் கூறினார்.
அரசாங்கச் சேவையின் மூத்த தலைவர்கள் இந்தப் பிரச்சினைகளைக் கையாண்டு வருகிறார்கள். அதிகாரிகளுக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். இந்தச் சூழலில் தங்களுடைய கவலைகளைத் தங்களின் மூத்த தலைவர்களிடம் தெரியப்படுத்தும்படி திரு யிப் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.
நம்முடைய ஆளுமை முறை, நேர்மை, ஒளிவுமறைவற்ற தன்மை, பொறுப்பேற்கும் நிலை ஆகியவற்றைக் கட்டிக்காக்கும் நம்முடைய உறுதி எல்லாம் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றன என்பதே அண்மைய சம்பவங்கள் மூலம் தெரியவருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் அரசாங்கச் சேவையில் 16 அமைச்சுகளிலும் 50க்கும் மேற்பட்ட ஆணைபெற்ற அமைப்புகளிலும் சுமார் 150,000 அதிகாரிகள் பணியாற்றுகிறார்கள்.
அரசாங்கச் சேவைக்கு உள்ளே செயல்படும் குடிமைச் (சிவில்) சேவையில் 86,000 அதிகாரிகள் அமைச்சுகளில் பணியாற்றுகிறார்கள்.
லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு நடத்தி வரும் விசாரணை முடிய காலம் பிடிக்கும். அதுவரையில் ஊகமாக எதையும் தெரிவிக்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்குத் திரு யிப் அறிவுரை கூறினார்.


