தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

15 பேர் மீது மானபங்கக் குற்றச்சாட்டு

3 mins read
cf632612-a677-42bf-b0f5-b7e4382f91d8
நீதிமன்றத்தில் புதன்கிழமை தனித்தனியான வழக்குகளில் 15 ஆடவர்கள் மீது மானபங்கக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

மானபங்கப்படுத்தியதாக புதன்கிழமை நீதிமன்றத்தில் தனித்தனியான வழக்குகளில் 21 வயது முதல் 68 வயது வரை உள்ள 15 ஆடவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

தி பாரகன் கடைத்தொகுதியில் செயல்படும் ஒரு மருத்துவ நிலையத்தில், 2022 மார்ச்சில் அறுவைசிகிச்சை செய்து கொண்டிருந்த 31 வயது மாதை மானபங்கம் செய்ததாகக் கூறப்படும் 43 வயது ஆடவர் அந்தப் 15 பேரில் ஒருவராவார்.

ஆன்சன் ரோட்டில் ஹோட்டல் மதுபானக்கூடம் ஒன்றில் 29 வயதும் 31 வயதும் உள்ள இரண்டு மாதர்களை கடந்த ஜனவரி மாதம் மானபங்கம் செய்ததாகக் கூறப்படுவதன் தொடர்பில் அரோரா துஷார், 24, என்பவர் மீது இரண்டு மானபங்கக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் 21 வயது ஆடவரைப் பலவந்தமாக மானபங்கப் படுத்தினார் என்று கூறப்படுவதன் தொடர்பில் சாலமன் டியுக் நியோ யுரேன் ராய், 26, என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

நீதிமன்றத்தில் புதன்கிழமை 16 பேர் மீது மானபங்கக் குற்றச்சாட்டு சுமத்தப்படவிருந்தது. ஆனால், ஒருவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

டான் இயூ சோங், 60, என்ற அந்த ஆடவரைக் கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. இவர் ரிவர்வேல் டிரைவில் உள்ள ஒரு கடையில் 2022 நவம்பரில் 42 வயது மாதை மானபங்கப்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.

குற்றம் சுமத்தப்பட்ட 15 பேரில் இரண்டு பேர் இரவுநேர கேளிக்கை விடுதிகளில் அந்தக் குற்றத்தைச் செய்து இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

நீதிமன்றத்திற்கு புதன்கிழமை வந்த இதர மூன்று மானபங்க வழக்குகள் தொடர்பான சம்பவங்கள் மின்தூக்கிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

தியோங் பாருவில் குடியிருப்பு புளோக் ஒன்றின் மின்தூக்கியில் 2022 ஆகஸ்ட்டில் 15 வயது சிறுமியை கோபால் மைக்கேல், 38, என்பவர் மானபங்கப்படுத்தி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

பி. மோகன், 57, என்பவர் ஒரு மாதின் தோள்பட்டையைப் பற்றிப் பிடித்து அந்த மாதின் கழுத்தில் பலவந்தமாக முத்தமிட்டதாகக் கூறப்பட்டதையொட்டி புதன்கிழமை அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்தச் சம்பவம் எந்த இடத்தில் நிகழ்ந்தது என்பது பற்றிய விவரங்கள் நீதிமன்ற ஆவணங்களில் இல்லை.

மீடியாகார்ப் வளாகத்தில் 2022 அக்டோபர் 23ஆம் தேதியும் 24ஆம் தேதியும் 26 வயது மாதை இரண்டு முறை மானபங்கப்படுத்தியதாக சிவபாலன் சிவ பிரசாத் மேனன், 42, என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

சையது ஆல்வி ரோட்டில் உள்ள முஸ்தபா சென்டர் கடையில் 38 வயது மாதை 2022 டிசம்பரில் உமேஷ், 22, என்பவர் மானபங்கம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதன்தொடர்பில் காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து ஒரே மணி நேரத்தில் உமேஷ் கைதானார்.

பாலி லேனில் உள்ள காப்பிக்கடை ஒன்றில் 25 வயது மாதை மானபங்கம் செய்ததாகக் கூறப்படுவதன் தொடர்பில் ஹாரித் அனிக் அஸ்மான், 21, என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இதனிடையே, சிங்கப்பூரில் மானபங்கச் சம்பவங்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டில் 1,610 ஆக அதிகரித்தது என்றும் இது கவலை தருவதாகவும் காவல்துறை தெரிவித்து இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்