பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான லியோன் பெரேரா கட்சியில் இருந்து விலகி இருக்கிறார்.
அவர் 2020 பொதுத் தேர்தலில் அல்ஜுனிட் குழுத்தொகுதியில் வெற்றிபெற்ற பாட்டாளிக் கட்சி உறுப்பினர்கள் அணியில் ஒருவராக இடம்பெற்றிருந்தார்.
சக நாடாளுமன்ற உறுப்பினரான நிக்கோல் சியாவுக்கும் அவருக்கும் இருந்த தொடர்பு தெரியவந்ததை அடுத்து அந்த 53 வயது அரசியல்வாதி விலகிக்கொண்டார்.
இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையான திரு பெரேரா பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்.
1. கல்வித்துறைச் சாதனையாளர்
அரசாங்கத் தேர்வாணைய கல்விமானாகிய திரு பெரேரா, ஆங்கிலோ சீனப் பள்ளியிலும் பிறகு ஹுவா சோங் தொடக்கக் கல்லூரியிலும் பயின்றவர்.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டப்படிப்பு படித்து தத்துவம், அரசியல், பொருளியல் ஆகிய துறைகளில் முதல் வகுப்பு இரட்டை ஹானர்ஸ் பட்டத்துடன் தேர்வானார்.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு படித்தபோது 1992ல் தலைசிறந்த செயல்திறனை வெளிப்படுத்தினார். அதற்காக அவருக்கு அரசியலில் ‘கிப்ஸ் பிரைஸ்’ வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
2. முன்னாள் அரசாங்கச் சேவையாளர்
பட்டம் பெற்றதும் 1992ல் பொருளியல் வளர்ச்சிக் கழகத்தில் சேர்ந்து பிறகு அந்தக் கழகத்தின் நிறுவன மேம்பாட்டுப் பிரிவின் உதவித் தலைவரானார்.
தொடர்புடைய செய்திகள்
3. பல புகழுக்குச் சொந்தக்காரர்
பொதுச் சேவையை அடுத்து ஒரு தனியார் நிறுவனத்தின் ஆலோசனைப் பிரிவுக்குத் தலைவரானார் திரு பெரேரா.
பிறகு, 2000ஆம் ஆண்டில் ‘ஸ்பயர் ரிசர்ச் அண்ட் கன்சல்டிங்’ நிறுவனத்தின் இணை நிறுவனரானார்.
அந்த நிறுவனம், உலகில் புதிதாக தலையெடுக்கும் சந்தைகளுக்கு ஆய்வு, ஆலோசனைச் சேவைகளை வழங்குவதில் சிறப்புக் கவனம் செலுத்தி வந்தது.
அதன் தலைமை நிர்வாகியாக 2021 வரை இருந்த திரு பெரேரா, இப்போது அந்த நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார்.
நிபுணத்துவ திறமைகள் ஒருபுறம் இருக்க, தொண்டூழியத்திலும் அவர் ஈடுபட்டு வந்தார்.
திரு பெரேரா, ‘மவுரா’ என்ற உள்ளூர் மனிதஉரிமைக் குழுமத்தின் குழு உறுப்பினராக முன்பு செயல்பட்டவர்.
‘தி இன்டிபென்டன்ட்’ என்ற சமூக அரசியல் தளத்திற்கான ஆலோசகராக இருந்த திரு பெரேரா 2016ல் அதிலிருந்து விலகிக்கொண்டார்.
4. அரசியல் ஈடுபாடு
திரு பெரேரா, 2013 தொடக்கத்தில் பாட்டாளிக் கட்சித் தொண்டராக இருந்தார். அதற்கு ஆறு மாதத்திற்குப் பிறகு கட்சியின் முழு உறுப்பினரானார்.
ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் 2015 பொதுத் தேர்தலில் பாட்டாளிக் கட்சி களமிறக்கிய வேட்பாளர்களில் அவரும் ஒருவர். அந்தத் தேர்தலில் அவர் தோற்றார். இருந்தாலும் தொகுதியில்லா உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட்டார்.
திரு பெரேரா, 2016 ஜூன் மாதம் பாட்டாளிக் கட்சியின் ஊடகக் குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். 2018 ஏப்ரலில் கட்சியின் இளையர் பிரிவின் தலைவரானார்.
அல்ஜுனிட் குழுத்தொகுதியில் 2020 பொதுத் தேர்தலில் களமிறக்கப்பட்ட பாட்டாளிக் கட்சியின் உறுப்பினர்களில் ஒருவராக இருந்த திரு பெரேரா, வெற்றி பெற்று சிராங்கூன் பிரிவு குடியிருப்பாளர்களைப் பிரதிநிதிக்கும் முழு நாடாளுமன்ற உறுப்பினரானார்.
ஓராண்டுக்குப் பிறகு அவர் பாட்டாளிக் கட்சியின் ஊடகக் குழுவின் தலைவராக பதவி உயர்வு பெற்றார்.
அதேவேளையில், இளையர் பிரிவின் தலைமைத்துவம் திருவாட்டி நிக்கோல் சியாவிடம் சென்றது.
5. குடும்பம்
திரு பெரேராவின் மனைவியான திருவாட்டி கரோல், கணவரைவிட மூன்று வயது இளையவர். இருவருக்கும் 2003ல் திருமணம் நடந்தது.
அந்த மாது முன்னாள் அரசாங்கச் சேவை ஊழியர். 2005ல் பெண் குழந்தைப் பிறந்ததும் அவர் வேலையை விட்டுவிட்டார்.
திரு பெரேராவுக்கு பதின்ம வயது ஆண் மகனும் உண்டு.

