பாரந்தூக்கி ஓட்டுநர் ஒருவர், அவருக்குப் பின்னால் யாராவது இருக்கிறார்களா என்பதைச் சரியாகச் சோதிக்காமல், வாகனத்தைப் பின்னோக்கிச் செலுத்தியபோது ஒருவரை மோதித் தள்ளினார்.
அச்சம்பவம் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் தேதி நடைபெற்றது.
பாரந்தூக்கி மோதியதில், திரு முகமது ஹானாஃபியா அப்துல் ஜலீலின் இடது கால் நொறுங்கியது. அதே நாளன்று பின்னேரத்தில் முட்டிக்கு மேல் உள்ள கால்பகுதிவரை நீக்க, அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
பாரந்தூக்கியை ஓட்டிய 69 வயது ஆங் சேம் போவிற்கு வியாழக்கிழமை இரண்டு வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கவனக்குறைவாகச் செயல்பட்டு 56 வயது திரு ஹானாஃபியாவுக்குக் கடுமையான காயங்கள் ஏற்படுத்திய குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.
சம்பவம் நேர்ந்த நாளன்று, ஜாலான் பூன் லேக்கு அருகில், குவாலிட்டி ரோட்டில் உள்ள கிடங்கு ஒன்றுக்கு விநியோக ஓட்டுநரான திரு ஹானாஃபியா பால்மாவு விநியோகிக்கச் சென்றிருந்தார்.
ஆங், பாரந்தூக்கிக்குப் பின்னால் யாராவது இருக்கிறார்களா என்பதைக் கவனிக்கத் தவறினார். திரு ஹானாஃபியாவை மோதியதும், ஆங் பாரந்தூக்கியை நிறுத்திவிட்டு, அவரைத் தூக்கிவிடுவதற்கு முயன்றார். இருப்பினும், அவரைத் தூக்கிவிட முடியாததால் ஆங் உதவிக்கு அழைப்பு விடுத்தார்.
பின்னர் திரு ஹானாஃபியாவை அவசர மருத்துவ வாகனம் ஒன்று தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டுசென்றது.
தொடர்புடைய செய்திகள்
கவனக்குறைவால் மற்றொருவருக்குக் காயம் ஏற்படுத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஈராண்டுகள் வரை சிறைத்தண்டனையும் $5,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.