ஜூனில் 5.12 மில்லியன் பயணிகள்;2020 ஜனவரிக்குப் பின் சாதனை

3 mins read
b6ff473d-d334-44e7-b16d-8f29bc8da2ad
சாங்கி விமான நிலையம் வழியாக இந்த ஆண்டு ஜூனில் 5.12 மில்லியன் பயணிகள் பயணம் மேற்கொண்டனர். . - படம்: சாவ் பாவ்

சாங்கி விமான நிலையம் வழியாக இந்த ஆண்டு ஜூன் மாதம் 5.12 மில்லியன் பேர் பயணம் மேற்கொண்டனர்.

கொவிட்-19 தொற்று 2020 ஜனவரியில் தொடங்கிய பிறகு பயணிகளின் மாதாந்திர எண்ணிக்கை முதன் முதலாக 2023 ஜூனில் ஐந்து மில்லியன் அளவைக் கடந்தது.

சாங்கியில் இருந்து மொத்தம் 27,500 விமானச் சேவைகள் புறப்பட்டுச் சென்றன, அல்லது தரை இறங்கின.

இது, கொவிட் -19க்கு முந்தைய 2019ஆம் ஆண்டின் ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 88% ஆகும். சாங்கி விமான நிலையக் குழுமத்தின் ஆகப் புதிய புள்ளிவிவரங்கள் மூலம் இவை தெரியவருகின்றன.

இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை சாங்கி வழி 14.6 மில்லியன் பயணிகள் சென்றனர். இது, 2019ஆம் ஆண்டின் அதே மாதத்தின் அளவில் 87% ஆகும்.

இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 81,400 விமானச் சேவைகள் இடம்பெற்றன. இது 2019ஆம் ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் ஏறக்குறைய 90%க்குச் சமம்.

ஆஸ்திரேலியா, இந்தியா, இந்தோனீசியா, மலேசியா, தாய்லாந்து ஆகியவை இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் அதிக பயணிகளுக்குச் சொந்தமான முக்கிய சந்தைகளாக இருந்தன.

வடகிழக்கு ஆசியாவைச் சேர்ந்த பயணிகளின் போக்குவரத்து சீராக மேம்பட்டு வந்ததாக குழுமம் தெரிவித்தது.

சாங்கி குழுமம், அதிக போக்குவரத்தைச் சாதிக்க பல முயற்சிகளை மேற்கொண்டது. மேலும் பல இடங்களை எட்ட அது முயன்றது.

அவற்றின் விளைவாக இந்தியாவின் புவனேஸ்வரம் நகருக்கு வாரம் இரண்டு நேரடிச் சேவைகள் அறிமுகமாயின. இதுபோன்ற இதர புதிய வழித்தடங்களும் அறிமுகமாயின.

வான்கூவர்-சிங்கப்பூர் விமானச் சேவையை 2024 ஏப்ரல் முதல் தொடங்கப்போவதாக ஜூன் மாதம் ஏர் கனடா நிறுவனம் அறிவித்தது. கனடாவையும் சிங்கப்பூரையம் இணைக்கும் ஒரே ஒரு நேரடி விமானச் சேவை இதுதான்.

சாங்கி விமான நிலையம், 2019 உச்ச காலத்தில் 7,400க்கும் மேற்பட்ட வாராந்திர விமானச் சேவைகளை உலகம் முழுவதிலும் உள்ள 170க்கும் மேற்பட்ட நகர்களுக்கு நடத்தியது.

கொவிட்-19 காரணமாக கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் பயணக் கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்ததால் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அவை சீராக மீட்சி கண்டு வருகின்றன.

இந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி நிலவரப்படி, சாங்கி விமான நிலையத்தில் மொத்தம் 99 விமான நிறுவனங்கள் 63க்கும் மேற்பட்ட வாராந்திர சேவைகளை 148 நகர்களுக்கு வழங்கின.

அந்தச் சேவைகள் சிங்கப்பூரையும் அந்த நகர்களையும் இணைத்தன.

இந்த ஆண்டில் சிங்கப்பூருக்கு 12 மில்லியன் முதல் 14 மில்லியன் வரைப்பட்ட அனைத்துலக பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிங்கப்பூர் சுற்றுலாக் கழகம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கணித்து இருந்தது.

சுற்றுலாத் துறை அடுத்த ஆண்டில் முழுமையாக மீட்சி கண்டுவிடும் என்றும் அது கணித்துக் கூறியது.

ஜூனில் சிங்கப்பூருக்கு வந்த அனைத்துலக பயணிகளின் எண்ணிக்கை 1.13 மில்லியனாக இருந்தது. தொடர்ந்து நான்கு மாத காலமாக இருந்து வந்த ஒரு மில்லியன் எண்ணிக்கையை அது விஞ்சியது.

இந்த ஆண்டின் முதல் பாதியில் சிங்கப்பூருக்கு 6.28 மில்லியன் பயணிகள் வந்தனர்.

குறிப்புச் சொற்கள்