ஷெல்-எக்சான் மொபில் இரண்டு நிறுவனங்களுக்கும் இடைப்பட்ட ‘இன்ஃபிநியூம்’ என்ற கூட்டுத்தொழில் நிறுவனம், 2025முதல் 2035 வரை US$20 மில்லியன் ($26.5 மில்லியன்) முதலீடு செய்ய திட்டமிடுகிறது.
சிங்கப்பூர் உள்ளிட்ட உலகம் முழுவதும் செயல்படும் அதன் உற்பத்தி ஆலைகளின் வசதிகளை மேம்படுத்துவது அந்த மூதலீட்டின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அந்தப் பத்தாண்டு மூலதனச் செலவினம், நிறுவனத்தின் இலக்கு நிறைவேறவும் உதவும். அறவே கரிமக்கழிவு இல்லாத நிலையை உருவாக்க நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
சிங்கப்பூரில் வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்த விவரங்களை இன்ஃபிநியூம் அறிவித்தது.
இன்ஃபிநியூம் நிறுவனம், இயந்திரங்களில் உராய்வுகளைக் குறைக்க உதவும் எண்ணெய், எரிபொருள்களுக்கான பெட்ரோலிய துணைப் பொருள்களைத் தயாரிக்கிறது.
இந்த நிறுவனம், தனது கரிமக்கழிவை 2030 ஆம் ஆண்டுவாக்கில் பாதியாகக் குறைத்து, 2050ம் ஆண்டு வாக்கில் அதை முழுமையாகக் குறைக்கப் போவதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்தது.
இந்தத் தொழில்துறையில் உலக அளவில் இத்தகைய அறிவிப்பை விடுத்த முதல் நிறுவனம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

