தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சட்டவிரோதமாக இறக்குமதியான 600 கிலோ உணவுப்பொருள்கள்

1 mins read
ae5aa098-bb23-4d5a-acc4-09520380704e
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 600 கிலோகிராமுக்கு மேற்பட்ட உணவுப்பொருள்கள் ஆறு கடைகளிலிருந்து கைப்பற்றப்பட்டது. - படம்: சிங்கப்பூர் உணவு அமைப்பு

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 600 கிலோகிராமுக்கு மேற்பட்ட உணவுப்பொருள்கள் ஆறு கடைகளிலிருந்து கைப்பற்றப்பட்டதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. 

ஜூலை 12ஆம் தேதி எட்டு உணவுப்பொருள் கடைகளை அமைப்பின் அதிகாரிகள் சோதனையிட்டபோது, ஆறு கடைகளில் தாய்லாந்திலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பச்சை மாமிசமும் பதனிடப்பட்ட மாமிசமும் கண்டுபிடிக்கப்பட்டன. 

பன்றியிறைச்சி, கோழி, மாட்டிறைச்சி, வாத்து, மீன் உள்ளிட்ட உணவுப்பொருள்கள் அதில் உள்ளடங்கும். 

கடைக்காரர்களில் மூவர் செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் கடை நடத்தி வந்ததாகவும் உணவு அமைப்பு தெரிவித்தது. அந்தக் கடைகளின் பெயரை அமைப்பு வெளியிடவில்லை. 

ஆறு கடைகளின் தொடர்பில் அமைப்பு தொடர்ந்து புலனாய்வு செய்து வருகிறது. 

மூலம் அறியப்படாத இடங்களிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களும், உரிமம் இல்லாமல் உணவுப்பொருள் விற்கும் கடைகளும் உணவுப் பாதுகாப்புக்கு ஆபத்தை உண்டாக்குவதாக அமைப்பு குறிப்பிட்டது. 

விற்பனை செய்வதற்காக மாமிசங்களையும் கடலுணவுகளையும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்வோருக்கு $50,000 வரையிலான அபராதம், ஈராண்டு வரையிலான சிறைத் தண்டனை, அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். உரிமம் இல்லாமல் உணவுப்பொருள் கடை நடத்துவோருக்கு $10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். 

குறிப்புச் சொற்கள்