சிங்கப்பூரில் $2.65பி. சிலிகான் பாக்ஸ் தொழிற்சாலை, 1,200 பேருக்கு வேலைகள்

சிங்கப்பூரில் $2.65பி. சிலிகான் பாக்ஸ் தொழிற்சாலை, 1,200 பேருக்கு வேலைகள்

2 mins read
04ba4247-b623-428d-a412-87faedd0e40b
சிங்கப்பூர் அனைத்துலக புத்தாக்க மையமாக நன்மதிப்பு பெற்றிருப்பதும் இங்குள்ள திறன்பெற்ற ஊழியர் அணியும், தொழிற்சாலையை இங்கு அமைப்பதற்கான காரணங்கள் என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனருமான ஹான் பியுங் ஜூன் வியாழக்கிழமை கூறினார்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிலிகான் பாக்ஸ் நிறுவனம் சிங்கப்பூரில் $2.65 பில்லியன் பெறுமானமுள்ள புதிய தொழிற்சாலையை வியாழக்கிழமை திறந்தது. 

அந்த 73,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட தொழிற்சாலை தெம்பனிஸ் வட்டாரத்தில் அமைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு, மின்சார வாகனங்கள், தொழில்நுட்ப அணிகலன்கள் போன்றவற்றுக்குப் பயன்படக்கூடிய பகுதி மின்கடத்தி நுண்சில்லு இணைப்புகளை இந்தத் தொழிற்சாலை உற்பத்தி செய்யும். 

இந்தத் தொழிற்சாலை பொறியாளர் முதல் மின்னிலக்க நிபுணர் வரை 1,200 வேலைகளை உருவாக்கும் என்று சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட சிலிகான் பாக்ஸ் நிறுவனம் தெரிவித்தது. அதோடு, சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் ஆதரவுடன், திறன் மேம்பாட்டு வாய்ப்புகளையும் வழங்கும். 

சிங்கப்பூர் அனைத்துலக புத்தாக்க மையமாக நன்மதிப்பு பெற்றிருப்பதும் இங்குள்ள திறன்பெற்ற ஊழியர் அணியும், தொழிற்சாலையை இங்கு அமைப்பதற்கான காரணங்கள் என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனருமான ஹான் பியுங் ஜூன் வியாழக்கிழமை கூறினார். 

சிங்கப்பூரின் வலுவான ஆளுமையும் முக்கிய காரணம் என்றார் டாக்டர் ஹான். 

“சிங்கப்பூரில் செயலாற்றல்மிக்க அரசாங்கம் இருப்பதாக நான் சொல்வேன்,” என்றார் அவர். 

சிலிகான் பாக்ஸ் நிறுவனம் 2021ல் தொடங்கப்பட்டது. அதன் பிரத்யேக “நுண்சில்லு இணைப்புத் தொழில்நுட்பத்துடன்”, மின்சாரம் குறைவாகத் தேவைப்படும் உயர் செயல்திறன்மிக்க சாதனங்களை வடிவமைக்கலாம். 

நுண்சில்லுகளைக் கொண்டு பெரிய பகுதி மின்கடத்தி சில்லுகளைத் தயாரிக்கலாம். 

சிலிகான் பாக்ஸ் அதன் நிதி திரட்டு நடவடிக்கைகள் மூலம் இதுவரை 208 மில்லியன் அமெரிக்க டாலர் திரட்டியுள்ளது. 

சிலிகான் பாக்ஸ் அதன் முதல் உற்பத்தி, ஆய்வு, மேம்பாட்டுத் தொழிற்சாலையை சிங்கப்பூரில் அமைத்திருப்பது, பகுதி மின்கடத்தி துறையில் சிங்கப்பூர் “முக்கிய அனைத்துலக மையமாக” போட்டித்திறனுடன் திகழ்வதை எடுத்துக்காட்டுவதாகப் பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் பிங் சியோங் பூன் கூறினார். 

“பகுதி மின்கடத்தி தொழில்துறை நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏழு விழுக்காட்டுக்குமேல் பங்களிக்கிறது. இதுவே சிங்கப்பூரின் ஆகப்பெரிய உற்பத்திப் பிரிவு,” என்று தொழிற்சாலையின் திறப்பு விழாவில் திரு பிங் குறிப்பிட்டார். 

அனைத்துலக பகுதி மின்கடத்தி சந்தையில் சிங்கப்பூரின் பங்கு கிட்டத்தட்ட 11 விழுக்காடு. பகுதி மின்கடத்தி சாதனங்களில் கிட்டத்தட்ட 20 விழுக்காடு சிங்கப்பூரில் உற்பத்தியாகிறது. 

2023 ஏப்ரல் மாதம் உலகெங்கிலும் சில்லு விற்பனை 21.6 விழுக்காடு குறைந்தது. இவ்வாண்டு முழுவதும் 10.3 விழுக்காடு சரிவும், அடுத்த ஆண்டு 11.9 விழுக்காடு உயர்வும் ஏற்படுமென்று வா‌ஷிங்டனில் உள்ள பகுதி மின்கடத்தி தொழில்துறை சங்கம் கணிக்கிறது. 

ஆனால், நடப்பிலுள்ள பத்தாண்டுகளின் முடிவில் உலகளாவிய சில்லு தொழில்துறையின் மதிப்பு ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

குறிப்புச் சொற்கள்