பொங்கோலில் கட்டப்பட்டு வரும் 991 பிடிஓ வீடுகள் மேலும் மூன்று மாதம் தாமதமடையும்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், அந்தக் கட்டுமானத் திட்டத்தின் முக்கியமான ஒப்பந்த நிறுவனத்தின் சேவைகளை நிறுத்திவிட்டதே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
‘சிகேஆர் கான்ட்ராக்ட் சர்வீசஸ்’ (சிகேஆர்) என்ற அந்த நிறுவனத்தின் சேவை முன்னேற்றத்தில் மனநிறைவு இல்லை.
தேவையான கட்டுமான இலக்கை நிறைவேற்ற அந்த நிறுவனம் திரும்பத் திரும்ப தவறிவிட்டது என்று வீடுகளை வாங்கி இருப்போருக்கு மின்னஞ்சல் மூலம் கழகம் வியாழக்கிழமை தெரிவித்தது.
வீடுகளை வாங்கி இருப்போரின் நலன்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும் அது கூறியது.
பொங்கோல் பாயிண்ட் கோவ் கட்டுமானத் திட்டத்தில் ஆறு புளோக்குகள் கட்டப்படுகின்றன. அவற்றில் மொத்தம் 1,179 வீடுகள் இருக்கும். நீக்குப்போக்கு வீடுகள், மூவறை, நாலறை, ஐந்தறை வீடுகள் அவற்றில் அடங்கும்.
இந்த வீடுகளின் கட்டுமானம் கொவிட்-19 காரணமாக ஏற்கெனவே ஆறு மாதம் முதல் ஒன்பது மாதங்கள்வரை தாமதமடைந்துள்ளது.
அங்கு கட்டப்படும் ஆறு புளோக்குகளில் ஐந்து புளோக்குகளின் கட்டுமானம் மேலும் மூன்று மாதம் தாமதமடையும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்டதற்கு அளித்த கழகம் பதிலளித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அந்த வீடுகள் 2024 கடைசி காலாண்டுக்கும் 2025 முதல் காலாண்டுக்கும் இடையில் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவை பொங்கோல் பாயிண்ட் கோவ் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின்கீழ் கட்டப்படுகின்றன.
பொங்கோல் பாயிண்ட் கோவ் திட்ட வீடுகள் 2019 செப்டம்பரில் விற்பனைக்கு விடப்பட்டன. முதல் கட்ட வீடுகள் ஓராண்டு முன்னதாக 2018 ஆகஸ்ட்டில் விற்பனைக்குக் கொடுக்கப்பட்டன.
முதல் கட்ட வீடுகளை வேறு ஒரு பிரதான கட்டுமான நிறுவனம் கட்டி வருகிறது.
திட்டங்களின் தரம் குறையாமலும் ஊழியர்களின் பாதுகாப்புக்குக் குறை ஏதும் இல்லாமலும் எஞ்சிய பணிகளை பூர்த்தி செய்யும் வகையில் ஆகஸ்ட் மாதம் புதிய ஒப்பந்தக்காரரை வேலையில் அமர்த்தும் முயற்சிகளைத் தான் இப்போது மேற்கொண்டு வருவதாக கழகம் தெரிவித்து உள்ளது.
திட்டத்தைக் கட்டி முடிக்க மேலும் காலஅவகாசம் தேவைப்படுகிறது என்ற போதிலும் இப்போதைய மதிப்பீடுகளின் அடிப்படையில் பார்க்கையில், வீடுகளின் சாவிகளை ஒப்படைக்க வேண்டிய தேதி வாக்கில் பணிகள் முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கழகம் தெரிவித்து உள்ளது.
கொவிட்-19 காலகட்டத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட பெரும்பாலான பிடிஓ திட்டங்களைப் போலவே பொங்கோல் பாயிண்ட் கோவ் திட்டமும் தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டது.
தாமதமான பிடிஓ திட்டங்களில் 70 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட திட்டங்களை இன்றைய தேதியில் கழகம் கட்டி முடித்துவிட்டது.
பொங்கோல் பாயிண்ட் கோவ் திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடர்ந்து மெதுவடைந்ததால் அது சில மாதங்களுக்கு முன்னதாக அணுக்கக் கண்காணிப்பின்கீழ் வைக்கப்பட்டது.
பிடிஓ ஒப்பந்த நிறுவனங்களைத் தான் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் கழகம் தெரிவித்துள்ளது.
சிகேஆர் நிறுவனம், ஜூரோங் ஈஸ்ட்டில் கட்டப்பட்டு வரும் தோ குவான் குரோவ் பிடிஓ திட்டத்தின் பிரதான ஒப்பந்த நிறுவனமாக இருக்கிறது. இந்தத் திட்டம் 2026ல் கட்டி முடிக்கப்படும் என்று மதிப்பிடப்படுகிறது.
யூனோஸ் கோர்ட் பிடிஓ திட்ட புளோக்குகளை சிகேஆர் நிறுவனம் கட்டி முடித்து இருக்கிறது. என்றாலும் கடைகள், சமூக இடங்கள் போன்ற வர்த்தக வசதிகள் இன்னமும் அங்கு கட்டப்பட்டு வருகின்றன.

