போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரனிடம் லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணை பற்றி ‘பொலிடிக்கல் சோஃபிஸ்ட்ரி’ வலைப்பதிவுத் தளம் வெளியிட்ட செய்தியைத் திருத்துமாறு பொஃப்மா எனும் இணையவழி பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சித் திறத்திற்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் உத்தரவிடப்பட்டுள்ளது.
‘அப்ஃபிரண்ட் அண்ட் ட்ரான்ஸ்பேரண்ட்?’ என்ற தலைப்பிலான அச்செய்தியில் இரு பொய்கள் இருந்ததாகப் பிரதமர் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
திரு ஈஸ்வரன் கைதான செய்தி அரசியல் ரீதியில் அவமானத்திற்குரியதாக இருந்ததால், பிரதமர் லீ சியன் லூங்கும் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் ஜூலை 12ஆம் தேதி அதை வெளியிடவில்லை என்று கூறப்பட்டது முதல் பொய்.
துணைப்பிரதமர் வோங் உண்மையை மறைக்க விரும்பியதால், அதே தேதியில் அளித்த ஒரு பேட்டியில் திரு ஈஸ்வரனும் தொழிலதிபர் ஓங் பெங் செங்கும் கைதான தகவலை வேண்டுமென்றே வெளியிடவில்லை என்பது இரண்டாவது பொய்.
பிரதமர் லீயின் அறிக்கையும் துணைப் பிரதமர் வோங்கின் பேட்டியும், லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு அன்றைய தினம் செய்த அறிவிப்பை ஒத்திருந்ததாகப் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டது.
புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்த ஒரு விவகாரத்தின் தொடர்பிலான விசாரணைக்குத் திரு ஈஸ்வரன் உதவி வருவதாகப் புலனாய்வுப் பிரிவு அன்றைய தினம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. விசாரணையின் விவரங்களைப் பிரிவு வெளியிடவில்லை.
ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளைத் தொடர்ந்து, திரு ஈஸ்வரனும் திரு ஓங்கும் ஜூலை 11ஆம் தேதி கைதாகி, பிணையில் விடுவிக்கப்பட்டதாகப் புலனாய்வுப் பிரிவு ஜூலை 14ஆம் தேதி தெரிவித்தது.
விசாரணையின்கீழ் இருக்கும் ஒருவரைக் கைது செய்வதா இல்லையா என்பது லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு எடுக்கும் ஒரு தீர்மானம் என்று அரசாங்கத்தின் ‘ஃபெக்ச்சுவலி’ இணையத் தளத்தில் வெளியிடப்பட்ட பிரதமர் அலுவலக அறிக்கை குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
“புலனாய்வின் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்ட விவரத்தை வெளியிடுவதும் லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு எடுக்கவேண்டிய ஒரு தீர்மானம்,” என்றும் அறிக்கை சுட்டிக்காட்டியது. இத்தகைய தகவலைப் புலனாய்வுப் பிரிவு (அமைச்சர்கள் அல்ல) வெளியிடுவதே வழக்கம் என்றும் அறிக்கை கூறியது.
எனவே, பிரதமர் லீ ஜூலை 12ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையும், அதே நாளில் துணைப் பிரதமர் வோங் அளித்த பேட்டியும், லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு அன்றைய தினம் வெளியிட்ட அறிக்கையை ஒத்திருந்ததாகப் பிரதமர் அலுவலகம் கூறியது.
“அரசியல் ரீதியாக அவமானத்திற்குரியதாக இருந்ததால் அமைச்சர் ஈஸ்வரன் கைதான செய்தியைப் பிரதமரோ அல்லது துணைப் பிரதமரோ வெளியிட விரும்பவில்லை என்று சொல்வதும், துணைப் பிரதமர் உண்மையை மறைக்க விரும்பியதால் தகவலை வேண்டுமென்றே வெளியிடவில்லை என்று சொல்வதும் உண்மையல்ல,” என்றும் பிரதமர் அலுவலகம் விவரித்தது.
பொஃப்மா உத்தரவுக்கு இணங்க, ‘பொலிடிக்கல் சோஃபிஸ்ட்ரி’ வலைத்தளம் திருத்தம் வெளியிட்டுள்ளது.

