பிடோக் ரெசர்வோர் சாலையில் வெள்ளிக்கிழமை காலை குடியிருப்பு ஒன்றில் தீச்சம்பவம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
படுக்கையறையில் மின்சாரக் கோளாறு காரணமாக தீ மூண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதன் ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.
புளோக் 618 பிடோக் ரெசர்வோர் சாலையில் ஏழாவது மாடி வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது குறித்து வெள்ளிக்கிழமை அதிகாலை 3.40 மணிக்கு குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
அந்த வீட்டிலிருந்து கரும்புகை வெளியேறியதைக் கண்ட குடிமைத் தற்காப்புப் படை வீரர்கள், நீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.
அந்த வீட்டின் வரவேற்பறைக்கும் தீ பரவியதாகவும் வீட்டின் எஞ்சிய பகுதிகள் சேதமுற்றதாகவும் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் அந்த வீட்டிலிருந்து இருவர் வெளியேறிவிட்டனர். ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மற்றொருவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த புளோக்கிலிருந்து சுமார் 90 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
மின்கோளாறு காரணமாக இந்த வாரம் ஏற்பட்ட மூன்றாவது தீவிபத்து இது.