அடுத்த நாடாளுமன்ற நாயகராக திரு சியா கியன் பெங்கை முன்மொழிய பிரதமர் லீ சியன் லூங் எண்ணம் கொண்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
திரு சியா, 61, மரின் பரேட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். 2011 முதல் 2016 வரை அவர் துணை நாடாளுமன்ற நாயகராக இருந்தார்.
தெம்பனிஸ் குழுத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செங் லி ஹுவியுடன் தகாத உறவு வைத்திருந்ததன் தொடர்பில் திரு டான் சுவான் ஜின் பதவி விலகியதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற நாயகர் பதவி தற்போது காலியாக உள்ளது. இந்த விவகாரத்தில் குமாரி செங்கும் பதவி விலகினார்.
ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கும் அடுத்த நாடாளுமன்ற அமர்வில் புதிய நாயகரைப் பிரதமர் லீ முன்மொழிவார். அதே அமர்வில் திரு லீ அமைச்சர்நிலை அறிக்கையை வெளியிடுவார்.
பல ஆண்டுகளாக இருந்துவரும் மக்கள் செயல் கட்சியின் நற்பெயரைக் கட்டிக்காக்க அவர்கள் பதவி விலகுவது அவசியம் என்று பிரதமர் லீ கடந்த திங்கட்கிழமை கூறியிருந்தார்.
கடந்த 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு திரு டானுக்கும் குமாரி செங்குக்கும் இடையிலான தகாத உறவு பற்றி தமக்குத் தெரியவந்ததாக கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் திரு லீ குறிப்பிட்டு இருந்தார். இருவருக்கும் தாம் அறிவுரை வழங்கியதாகவும் அவர் கூறி இருந்தார்.
எனினும், இருவருக்கும் இடையிலான தகாத உறவு தொடர்ந்ததைத் தெளிவாக எடுத்துக்காட்டும் அண்மைய தகவல்கள் தமக்குத் தெரியவந்ததை திரு லீ சுட்டினார்.
“நாடாளுமன்ற நாயகர் ஒருவர், எம்.பி. ஒருவருடன் உறவு வைத்திருப்பது பொருத்தமாக இருக்காது. அது ஏற்றுக்கொள்ளக்கூடியதும் அன்று,” என்று திரு லீ சொல்லியிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
2020 பொதுத் தேர்தலுக்குப் பிறகு 14வது நாடாளுமன்றத்தில் முதல் அமர்வில், அவைத் தலைவர் இந்திராணி ராஜா நாயகராக திரு டானை முன்மொழிந்து இருந்தார்.
பொத்தோங் பாசிர் எம்.பி. சித்தோ யி பின் அதை ஆதரித்து இருந்தார்.
அதன் பொருட்டு, நாடாளுமன்ற நாயகராக திரு டான் தேர்வு செய்யப்பட்டதாக நாடாளுமன்ற அலுவலர் அறிவித்திருந்தார். நாடாளுமன்றத்தில் கடமையை நிறைவேற்றுவதில் நாயகர் நடுநிலையாகவும் அனைத்து எம்.பி.க்களிடமும் நியாயமாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்று நாடாளுமன்ற இணையப் பக்கம் குறிப்பிடுகிறது.

