ஷெல் எரிபொருள் திருட்டு: முன்னாள் ஊழியரின் இறப்புக்குப் பிறகு குற்றச்சாட்டுகள் விலக்கு

1 mins read
55f57088-de62-44f5-996d-5a830c3a6209
பூ பு வென். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஷெல் நிறுவனத்தின் புலாவ் புக்கோம் எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலையில் $5.5 மில்லியனுக்குமேல் பெறுமானமுள்ள எரிபொருள் களவாடப்பட்ட சம்பவத்தின் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் ஊழியர் ஒருவர் இறந்துவிட்டதால், அவர்மீதான குற்றச்சாட்டுகள் விலக்கப்பட்டுவிட்டன.

இதனால் திரு பூ பு வென் மீதான 19 குற்றச்சாட்டுகள் மீதான நீதிமன்ற விசாரணையும் முடிவுக்கு வந்துவிட்டன.

ஜூலை 7ஆம் தேதி நடைபெற்ற விசாரணைக்கு முந்தியச் சந்திப்பின்போது குற்றச்சாட்டுகள் விலக்கப்பட்டன.

ஐம்பத்தைந்து வயதான திரு பூ, ஜூலை மாதம் காலமானதாக டெண்டன்ஸ் ரோடிக் சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த தற்காப்பு வழக்கறிஞர் நவின் நாயுடு வெள்ளிக்கிழமை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் தெரிவித்தார்.

கப்பல் எரிபொருள் விநியோக நிறுவனமான செண்டெக் மரீன் அண்ட் டிரேடிங் நிறுவனத்தில் வேலை செய்துவந்த திரு பூ, 2017 ஜூன் மாதத்திற்கும் 2018 ஜனவரி மாதத்திற்கும் இடையில் களவாடப்பட்ட எரிபொருளைக் கையாண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இவரும் செண்டெக் நிறுவனத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு முன்னாள் எழுத்தர்களும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினர்.

‌ஷெல் ஆலையிலிருந்து களவாடப்பட்ட எரிபொருளைப் பெறுவதற்கு மூவரும் உதவி செய்ததாகக் கூறப்படுகிறது. அதோடு, செண்டெக் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் பாய் கெங் பெங்கிடமிருந்து மூவரும் லஞ்சம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தங்கியிருந்து, சிங்கப்பூர் காவல்துறையின் விசாரணைகளைத் தவிர்ப்பதற்காக அவர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்