மக்கள் செயல் கட்சியின்கீழ் (மசெக) 2006ல் திரு சியா அரசியலில் அடியெடுத்து வைத்தார்.
நான்காவது தவணையாக மரின் பரேட் குழுத்தொகுதி எம்.பி.யாக அவர் சேவையாற்றி வருகிறார்.
நாடாளுமன்றத் துணை நாயகர் பதவி ஒருபுறமிருக்க, 2011 முதல் 2015 வரை மதிப்பீட்டுக் குழுவுக்கும் திரு சியா தலைமை தாங்கினார். அரசாங்கச் செலவினங்களை ஆராய அக்குழு பணிக்கப்பட்டுள்ளது.
சிறப்புரிமைக் குழு, நிலையான ஆணைகள் குழுவின் முன்னாள் உறுப்பினராகவும் அவர் செயலாற்றினார்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டிற்கான மசெகவின் அரசாங்க நாடாளுமன்றக் குழுத் தலைவராகவும் தற்போது திரு சியா உள்ளார். முன்னதாக சமூக, இளையர், விளையாட்டுத் துறைக்கான அரசாங்க நாடாளுமன்றக் குழுத் தலைவராகவும் அவர் செயலாற்றினார்.
நாடாளுமன்றத்தில் திரு சியாவின் முக்கிய பங்களிப்புகளில் ஒன்று, பெற்றோர் பராமரிப்புச் சட்டத்தில் அவர் புரிந்த பணியாகும்.
1995ல் நிறைவேற்றப்பட்ட அச்சட்டம், தங்களைக் கவனித்துக்கொள்ள முடியாத மூத்தோர் தங்கள் பிள்ளைகளிடமிருந்து பராமரிப்பு கோர வகைசெய்கிறது.
அச்சட்டத்தை மறுஆய்வு செய்ய 2022ல் ஒன்பது எம்.பி.க்கள் அடங்கிய பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதற்கு திரு சியா தலைமை தாங்கினார்.
தொடர்புடைய செய்திகள்
ஃபேர்பிரைஸ் குழுமத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியாவார் திரு சியா. 2001ல் ஃபேர்பிரைசின் தலைமை செயல்பாட்டு அதிகாரியாக பணியைத் தொடங்கிய அவர், 2016ல் அதன் தலைமை நிர்வாகியானார்.
2022 ஏப்ரலில் தலைமை நிர்வாகி பொறுப்பிலிருந்து விலகிய திரு சியா, பின்னர் ஃபேர்பிரைஸ் துணைத் தலைவர், ஃபேர்பிரைஸ் அறநிறுவனத் தலைவர் பொறுப்புகளை ஏற்றார்.
என்டியுசி என்டர்பிரைசின் தலைமை நிர்வாகியாக அவர் தொடர்ந்து நீடிக்கிறார். தமது வாழ்க்கைதொழிலின் பெரும்பகுதியை திரு சியா என்டியுசி குழுமத்தில் அமைத்துக்கொண்டார்.
நான்கு பிள்ளைகளில் மூன்றாவதாக பிறந்தவர் திரு சியா. திருமணமான திரு சியாவுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.
2014ல் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில், தமது வளரும் பருவத்தில் வீட்டின் வரவேற்பறையில் மெல்லிய மெத்தையில் தாம் படுத்து உறங்கியதை நினைவுகூர்ந்தார். உணவு நேரத்தின்போது ஒரு பிடி சோற்றைகூட தாம் வீணடித்ததில்லை என்றார் அவர்.
பல ஆண்டுகள் கழிந்தும் தாம் செய்யும் ஒவ்வொரு செலவையும் கணக்கு வைத்திருப்பதாகவும் உணவு விரயமாவதை தம்மால் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அப்பேட்டியில் திரு சியா குறிப்பிட்டிருந்தார்.

