சிங்கப்பூரில் கடந்த மே மாதம் விற்பனைக்குக் கொடுக்கப்பட்ட பிடிஓ வீடுகளுக்கு விண்ணப்பித்து இருப்போர், குலுக்குச் சீட்டு விற்பனை முடிவுகளை ஆகஸ்ட்டில்தான் தெரிந்துகொள்ள முடியும். அந்த முடிவுகள் ஜூலையில் தெரிவிக்கப்பட இருந்தன.
முந்தைய விற்பனையில் எஞ்சிய வீடுகளுக்கு மனுச் செய்து இருந்தோர் அவர்களின் குலுக்கல் வரிசை எண்ணை, ஜூலை முடிவுக்குப் பதிலாக ஆகஸ்ட் கடைசி வாரத்தில் தெரிந்துகொள்ளலாம்.
பிடிஓ, எஞ்சிய வீடுகள் மே மாதம் விற்பனைக்குக் கொடுக்கப்பட்டபோது ஏற்பட்ட கணினிக் கோளாறுகள் காரணமாக இந்தத் தாமதங்கள் இடம்பெறுகின்றன.
வீடுகள் விற்பனைக்குக் கொடுக்கப்பட்ட முதல் நாளன்று வீடு வாங்க விரும்பியோரில் சிலர், மெய்நிகர் காத்திருப்பு அறையில் இரண்டு மணி நேரம் வரை காத்திருந்தனர். பிறகுதான் வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குவீட்டு இணையவாயிலை அவர்கள் எட்ட முடிந்தது. கழகம், வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் விண்ணப்பதாரர்களில் சிலருக்கு மின்னஞ்சல் அனுப்பியது.
கணினி முறை பிரச்சினை காரணமாக விண்ணப்பிப்பதில் தாமதத்தை எதிர்நோக்கி உதவி நாடியோரின் மனுக்கள் உட்பட, பெறப்பட்ட வீட்டு விண்ணப்பங்களைத் தான் பரிசீலித்து வருவதாக கழகம் அதில் தெரிவித்தது. தாமதம் காரணமாக பெறப்பட்ட விண்ணப்பங்களைப் பரிசோதிக்கவும் கணினி மூலமாக குலுக்கல் நடைமுறையை மேற்கொள்ளவும் மேலும் கால அவகாசம் தேவைப்படுகிறது என்று மின்னஞ்சலில் கழகம் குறிப்பிட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் எதிர்நோக்கிய சங்கடத்தைத் தான் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்த கழகம், குலுக்கல் முடிவுகள் கிடைத்ததும் அவற்றைக் கூடுமான வரை விரைவாக விண்ணப்பதாரர்களிடம் தெரிவிக்க தன்னால் ஆன அனைத்தையும் செய்யப்போவதாக தெரிவித்தது.
பிடிஓ வீடுகளுக்கு 20,000க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். எஞ்சிய வீடுகளுக்கு மனு செய்திருந்தவர்களின் எண்ணிக்கை 17,000க்கும் அதிகம்.
விண்ணப்பத்திற்கான காலஅவகாசம் முடிந்த பிறகு இரண்டு மாத காலத்திற்குள் குலுக்கல் முடிவுகள் பற்றி விண்ணப்பதாரர்களுக்கு அறிவிக்கப்படும் என்று கழகத்தின் இணையத்தளம் தெரிவிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
இதில் விற்பனை தொடக்கம், கிடைக்கக்கூடிய வீடுகளின் எண்ணிக்கை உள்ளிட்ட பல அம்சங்களும் கருத்தில் கொள்ளப்படும்.
மே மாத விற்பனை நடைமுறை ஜூன் 8ஆம் தேதி இரவு 11.59 மணிக்கு முடிவடைந்தது. மே மாதம் வீடுகள் விற்பனைக்குக் கொடுக்கப்பட்டபோது, அவற்றுக்கு விண்ணப்பித்தவர்கள் கணினிக் கோளாறு பற்றி புகார் தெரிவித்து இருந்தனர்.
தாங்கள் நீண்ட நேரம் காத்திருந்து பிறகுதான் வீவக வீட்டு விற்பனை இணைய நுழைவாயிலை எட்ட முடிந்ததாக அவர்கள் கூறினர். மூன்று காரணங்களால் விண்ணப்பதாரர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டி இருந்ததாக கழகம் தெரிவித்தது.
பிடிஓ வீடுகளையும் எஞ்சிய வீடுகளையும் சேர்த்து விற்பனைக்குக் கொடுக்கப்பட்டது ஒரு காரணம்;
பிடோக், சிராங்கூன் போன்ற முதிர்ச்சியடைந்த குடியிருப்புப் பேட்டைகளில் வீடுகள் விற்பனைக்குக் கொடுக்கப்பட்டது இரண்டாவது காரணம்; கிடைக்கவிருக்கும் வீடுகளை தெரிந்துகொள்வதற்காக வீவக இணைய வாயிலை எட்டியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது மூன்றாவது காரணம் என்று கழகம் தெரிவித்தது.

