பொதுச் சுகாதாரத்தில் அதிக அர்ப்பணிப்பு, வேட்கை, ஈடுபாடு காட்டும் இளையர்களை அங்கீகரிக்கும் நோக்கத்துடனும் அவர்களின் இலக்கை அடைய உதவவும் சுகாதார அமைச்சு சுகாதாரப் பராமரிப்பு உபகாரச் சம்பள விருதுகளை வழங்கியது.
அதிநவீன ஆராய்ச்சி, மேம்பாடு, புதுமையான மின்னிலக்கத் தீர்வுகள் ஆகியவற்றைச் செயல்படுத்துவதற்கான முக்கிய மையமாக வளர்ந்து வருகிறது சிங்கப்பூர்.
“அதிகரித்து வரும் நாட்பட்ட நோய்ச் சுமை, மூப்படையும் மக்கள்தொகை போன்ற சவால்கள் உள்ள பின்னணியில், திறமையான சுகாதார நிபுணர்களுக்கான தேவை அதிகரித்துள்ளதைக் காண்கிறோம். சுகாதாரத் தொழில்நுட்பம், சமூகப் பராமரிப்பு , சுகாதார நிர்வாகம் போன்ற வளர்ந்து வரும் துறைகளுக்கும் ஆர்வமுள்ள மாணவர்கள் தேவை,” என வலியுறுத்தியது சுகாதார அமைச்சு.
இந்த ஆண்டு சுகாதாரப் பராமரிப்பு உபகாரச் சம்பள விருதுகள் பொது சுகாதாரத்தில் ஆர்வம் காட்டிய நபர்களை தம் தனிப் பாதைகளைத் தொடர ஊக்குவித்தது.
சிறு வயதில் தொலைக்காட்சியில் சுகாதார ஊழியர்கள் ஆற்றும் பணியைக் கண்டு வியந்த ஷெஃப்ஃபேல் சரவணன் ஒருங்கிணைப்புத் தாதிமை உபகாரச் சம்பளத்தை பெற்றுள்ளார்.
அடுத்தத் தலைமுறை தாதிமைத் தலைவர்களை வளர்க்கும் நோக்கத்துடன் வழங்கப்பட்டது இந்த விருது. 17 வயது ஷெஃப்ஃபேல் தன் இலக்கை நோக்கி பயணம் செய்ய செயின்ட் ஜான் பிரிகேட் துணைப்பாட வகுப்பில் இணைந்து தனது திறன்களை வளர்த்துக்கொண்டார். அதில் துணைத் தலைவராகவும் முதலுதவிக் குழுத் தலைவராகவும் பொறுப்பேற்று மிளிர்ந்தார்.
“வாழ்க்கைப் பாதையை தேர்ந்தெடுக்கையில் தாதியரின் வாழ்வு எவ்வாறு இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள அன்னையின் உந்துதலுடன் ஒரு பயிலரங்கில் கலந்துகொண்டேன். அங்கு தாதியரின் வேட்கையைக் கண்டு வியந்தேன். கொவிட்-19 கிருமித்தொற்றுக் காலத்திலும் அதே ஆர்வத்துடன் பணியாற்றினார்கள். அதைத் தொடர்ந்து நன்யாங் பலதுறைத் தொழில்கல்லூரியில் தாதிமையில் பட்டயம் பெற முடிவெடுத்தேன்,” என்று ஷெஃப்ஃபேல் பகிர்ந்துகொண்டார்.
ஒருங்கிணைப்புத் தாதிமை உபகாரச் சம்பளத்தை பெற்றுள்ளது பெருமை அளிப்பதாகவும் தொடர்ந்து கடுமையாக உழைத்து சமூகத்திற்குப் பணியாற்றும் உறுதியுடன் உள்ளார் ஷெஃப்ஃபேல். தலைமைத் தாதி என்ற நிலையை அடையும் லட்சியத்துடன் இருக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
தொடர்புத்திறன் குறைபாடு உள்ள ஒரு நோயாளிக்கு ஆதரவாகப் பணியாற்றிய சண்முகம் சுவேதாவிற்கு சமூகப் பராமரிப்பு உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டது.
“சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தில் இயன்மருத்துவத்தில் பட்டக்கல்வி பெறத் தீர்மானித்தேன். காயம் அடைந்தவர்களுக்கு மீண்டுவரும் பயணத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் வாய்ப்பை இந்தத் துறை வழங்கும். சமூகத்தில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்த ஆசைப்படுகிறேன்,” என்று குறிப்பிட்டார் சுவேதா.
சுகாதாரப் பராமரிப்பு உபகாரச் சம்பள விருது நிகழ்ச்சி ஜூலை 21ஆம் தேதி சேண்ட்ஸ் எக்ஸ்போ, மாநாட்டு நிலையத்தில் நடந்தேறியது. 161 உபகாரச் சம்பள விருதுகள் மருத்துவம் முதல் கணினி அறிவியல் வரை வெவ்வேறு பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
நிகழ்வில் சுகாதார அமைச்சரும் மூப்படைதல் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திரு ஓங் யி காங் கலந்துகொண்டார்.
“வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் சுகாதாரத் துறைக்குத் தேவை. மாறிவரும் இந்த துறையில் பரந்த பின்னணிகள் நல்ல மாற்றங்களைக் கொண்டுவர வித்திடும்,” என்று உரையில் குறிப்பிட்டார் திரு ஓங் யி காங்.
சுகாதாரத் துறையில் சிறந்து பணியாற்றுவோம் என்று மாணவர்கள் நிகழ்ச்சியின் நிறைவில் உறுதிமொழி எடுத்தனர்.
sabitha@sph.com.sg