காவல்துறை அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததைத் தொடர்ந்து இனப் பாகுபாடு, வேலையிடத்தில் பகடிவதை, இதர குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு காவல்துறையிடம் தாம் கூறியுள்ளதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் தெரிவித்துள்ளார்.
காவல்துறை அதிகாரியாக அடையாளம் காணப்பட்ட 36 வயது ஆடவர் ஒருவர், ஈசூனில் உள்ள குடியிருப்பு புளோக் ஒன்றின் கீழ்த்தளத்தில் அசைவின்றிக் கிடந்தது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக காவல்துறை வெள்ளிக்கிழமை மாலை வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.
மாலை 4.55 மணிவாக்கில் உதவி கோரி காவல்துறைக்கு அழைப்பு வந்தது. புளோக் 393 ஈசூன் அவென்யூ 6ன் கீழ்த்தளத்தில் திரு யுவராஜா கோபால் கண்டறியப்பட்டார்.
அந்த அதிகாரியின் பெயரைக் குறிப்பிட்டு அவரை அடையாளப்படுத்திய அமைச்சர் சண்முகம், ‘துயரமான சூழலில்’ திரு யுவராஜா இறந்ததாகக் கூறி அவருடைய குடும்பத்தாருக்கு தமது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார்.
“திரு யுவராஜா சமூக ஊடகப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். சிங்கப்பூர் காவல்துறையில் தாம் இனப் பாகுபாட்டை எதிர்நோக்கியதாக அவர் கூறியிருந்தார். அதுவும் அவர் முன்வைத்த மற்ற குற்றச்சாட்டுகளும் கடுமையானவை,” என்று திரு சண்முகம் ஃபேஸ்புக்கிலும் இன்ஸ்டகிராமிலும் பதிவிட்டார்.
“இந்த விவகாரத்தை முழுமையாக விசாரிக்கும்படி காவல்துறையிடம் நான் கேட்டுக்கொண்டுள்ளேன். அதிகாரியின் மரணத்திற்கான காரணத்தை நாங்கள் கண்டறிவோம். அதற்காக பொறுப்பேற்போம்.”
“இனப் பாகுபாடற்ற தெளிவான கொள்கையை நாங்கள் கொண்டுள்ளோம். தாங்கள் நியாயமாக நடத்தப்படுவதற்கு அனைத்து அதிகாரிகளுக்கும் உரிமையுண்டு. அந்தக் கோட்பாட்டிற்கு ஓர் அமைப்பாக சிங்கப்பூர் காவல்துறை கடப்பாடு கொண்டுள்ளது. உண்மையில் என்ன நடந்தது என்பதை நாங்கள் விசாரிப்போம்,” என்று திரு சண்முகம் விவரித்தார்.
திரு யுவராஜா வெள்ளிக்கிழமை பிற்பகல் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். வேலையிடத்தில் மேலதிகாரிகள் தம்மை கேலி செய்ததாகவும் தம் சகாக்கள் தம்மிடம் இனவாதக் கருத்துகளைக் கூறியதாகவும் அவர் அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து தாம் உதவி நாடியதாகவும் ஆனால் எந்த உதவியும் தமக்குக் கிடைக்கவில்லை என்றும் திரு யுவராஜா கூறியிருந்தார். அந்தப் பதிவு பின்னர் அகற்றப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
காவல்துறை வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், “அந்த அதிகாரி தமது பதிவில் குறிப்பிட்டிருந்த வேலையிட சவால்களைப் பற்றி காவல்துறைக்குத் தெரியும். அவருக்குப் பல்வேறு உதவிகளை நாங்கள் வழங்கினோம்,” என்று குறிப்பிட்டது.
“இந்த விவகாரத்தை நாங்கள் ஆய்வு செய்து, அந்த அதிகாரி தமது பதிவில் குறிப்பிட்டிருந்த அனைத்து விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்துவோம்.
“எங்கள் சக ஊழியர் மரணம் அடைந்திருப்பது எங்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த அதிகாரியின் குடும்பத்தாருக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். துயரமான இந்தச் சமயத்தில் அவரின் குடும்பத்தாருக்கு நாங்கள் உதவி வழங்கி வருகிறோம்,” என்று காவல்துறை கூறியது.
இதற்கிடையே, பன்னிரண்டாம் தளத்தில் குடியிருக்கும் திரு தோ லீ லோங், தாம் ஐந்து மணிக்கு மேல் வேலை முடிந்து வீடு திரும்பியபோது தமது வீடருகே தாம் எப்போதும் வைத்திருக்கும் இரண்டு கருப்பு தகர நாற்காலிகளில் ஒன்றினை காணவில்லை என தமிழ் முரசிடம் கூறினார். அவற்றில் ஒன்று பன்னிரண்டாம் மாடி சாளரத்தின் அருகே கிடந்ததாகவும் தம்மிடம் தகவல் விசாரித்தன் பின்னர் அதனை போலீசார் நேற்று மாலை அப்புறப்படுத்தியதாகவும் கூறினார். “அந்த நாற்காலியை யுவராஜ் பயன்படுத்தி இருக்கலாம் என நம்புகிறேன்,” என்று அவர் தெரிவித்தார்.
நான்கரை மணி அளவில் வேலை முடந்து வரும்போது முதல் தளத்தின் தூணருகே யுவராஜின் நல்லுடல் கீழ்நோக்கி கிடந்ததை நேரில் கண்டார் 393 புளோக்கில் குடியிருக்கும் திரு லீ யாப் சென், 70. யுவராஜ் தமது காவலர் சீருடையில் இருந்தார் என்றும் ரத்தக்கசிவு எதுவும் தென்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். உடனே 995க்கு அழைத்து தாம் விவரம் கூறியதாகவும் திரு லீ சொன்னார்.
நேற்று நான்கு மணி அளவில் மாடிப்படிகளில் ஒருவர் வேகமாக ஓடும் சத்தம் கேட்டதுபோல உணர்ந்த ஆறாம் மாடி அண்டைவீட்டுக்காரர் திருவாட்டி சாங், 66, நான்கரை மணியளவில் ஏதோ விழுந்த தொப்பெனும் ஒரு சத்தம் கேட்டதை நினைவுகூர்ந்தார். ஐந்து மணிக்குமேல் சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையின் வருகைக்குப் பின்னர் இருபதுக்கும் மேற்பட்ட காவல் அதிகாரிகள் கீழ்தளத்தில் குழுமியிருந்ததை அவர் கண்டார். யுவராஜும் அவரின் மனைவியும் 393 புளோக்கில் குடிபுகுந்து சில மாதங்களே ஆயின என்று அவர் கூறினார்.
திரு யுவராஜாவின் நல்லுடல் புளோக் 393 ஈசூன் அவென்யூ 6 #06-1118 எனும் முகவரியில் வைக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு மண்டாய் தகனச்சாலைக்குக் கொண்டுசெல்லப்படும் அவரது நல்லுடல், இரவு 7.30 மணியளவில் அங்கு தகனம் செய்யப்படும்.
கூடுதல் செய்தி: ஆ.விஷ்ணு வர்தினி

