2030க்குள் 16,000 வாகன மின்னேற்றிக் கூடங்கள்; உள்ளூர் நிறுவனம் இலக்கு

2030க்குள் 16,000 வாகன மின்னேற்றிக் கூடங்கள்; உள்ளூர் நிறுவனம் இலக்கு

2 mins read
cc1ca9f2-686a-40b3-9710-ab2598482eb5
நிலப் போக்குவரத்து ஆணையத்தின் குத்தகையைப் பெற்றுள்ள ஐந்து நிறுவனங்களில் சார்ஜ்+ நிறுவனம் ஒன்றாகும். இது 2025ஆம் ஆண்டுவாக்கில் 2,000 வீவக கார்ப்பேட்டைகளில் குறைந்தபட்சம் 12,000 வாகன மின்னேற்றிக் கூடங்களை அமைக்கும். - கோப்புப்படம்: சாவ் பாவ்

சிங்கப்பூரில் 2030ஆம் ஆண்டுவாக்கில் 16,000 மின்னேற்றிக் கூடங்களை அமைக்க சார்ஜ்+ என்ற உள்ளூர் நிறுவனம் இலக்கு நிர்ணயித்து உள்ளது.

இதன் விளைவாக, மின்வாகனங்களில் மின்சாரத்தை நிரப்பிக்கொள்ள அத்தகைய வாகனங்களைப் பயன்படுத்துவோருக்கு அதிக வசதிகள் இருக்கும்.

சார்ஜ்+ நிறுவனம், 2030ஆம் ஆண்டுவாக்கில் 10,000 மின்னேற்றிக் கூடங்களை அமைக்க 2020ல் இலக்கு நிர்ணயித்து இருந்தது. இப்போது இலக்கை அது உயர்த்தி உள்ளது.

வீடமைப்பு வளர்ச்சிக் கழக குடியிருப்புப் பேட்டைகளின் கார்ப்பேட்டைகளிலும் கூட்டுரிமைக் குடியிருப்புகள், கடைத்தொகுதிகள், வணிக, தொழில்துறைக் கட்டடங்களிலும் மெதுவாக, வேகமாக மின்சாரத்தை ஏற்றிக்கொள்ளக்கூடிய கூடங்களை சார்ஜ்+ நிறுவனம் கலந்து அமைக்கும்.

சிங்கப்பூரில் இப்போது செயல்படும் இத்தகைய மின்னேற்றி நிலையங்களின் எண்ணிக்கை துல்லியமாகத் தெரியவில்லை. என்றாலும் அவற்றின் எண்ணிக்கை ஏறக்குறைய 3,800ஆக இருக்கலாம் என்றும் அவற்றில் 1,000க்கும் மேற்பட்டவை சார்ஜ்+ நிறுவனத்தின் கூடங்கள் என்றும் தெரிகிறது.

சார்ஜ்+ நிறுவனம் 2030ஆம் ஆண்டில் 16,000 மின்னேற்றிக்கூடங்கள் என்ற இலக்கை எப்படியும் நிறைவேற்றிவிடலாம் என்று நம்புவதாக அதன் தலைமை நிர்வாகி கோ சீ கியோங் வெள்ளிக்கிழமை தொலைபேசிவழி கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

வரும் 2025ஆம் ஆணடில் 6,000 கூடங்கள் என்ற இலக்கை நோக்கி இந்த நிறுவனம் இப்போது முன்னேறி வருகிறது.

இவற்றில் 4,000 கூடங்களை நிலப் போக்குவரத்து ஆணையம் அளித்த ஒப்பந்தப்புள்ளியின்கீழ் சார்ஜ்+ நிறுவனம் அமைத்து வருகிறது.

சிங்கப்பூரில் 2025ஆம் ஆண்டுவாக்கில் ஏறக்குறைய 2,000 வீவக கார்ப்பேட்டைகளில் குறைந்த பட்சம் 12,000 மின்னேற்றிக் கூடங்களை அமைக்க இந்த ஆணையம் ஐந்து நிறுவனங்களுக்கு ஒப்பந்தப்புள்ளிகளை வழங்கி இருக்கிறது.

அந்த நிறுவனங்களில், எஸ்பி மொபிலிட்டி என்ற உள்ளூர் நிறுவனமும் ஒன்றாகும். இது 600க்கும் மேற்பட்ட மின்னேற்றிக் கூடங்களைக் கொண்டுள்ளது.

டோட்டல்எனர்ஜிஸ் என்ற பிரான்ஸ் நாட்டு நிறுவனத்திற்குச் சொந்தமான புளூசார்ஜ் என்ற நிறுவனம் 450 மின்னேற்றிக் கூடங்களை நிர்வகிக்கிறது.

சிங்கப்பூர், 2030ஆம் ஆண்டுவாக்கில் 60,000 மின்னேற்றிக் கூடங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது. அவற்றில் 40,000 கூடங்கள் பொதுக் கார்ப்பேட்டைகளில் அமைந்திருக்கும். 20,000 கூடங்கள் தனியார் கட்டடங்களில் செயல்படும்.

குறிப்புச் சொற்கள்