சிங்கப்பூரிலேயே ஆகப்பெரிய கட்டுமான, முன்வார்ப்பு மையம் வருங்காலத்தில் இடம்பெற இருக்கின்ற பிடிஓ வீட்டுத் திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்து இருக்கிறார்.
‘எச்எல்-சன்வே பிரிஃபேப் ஹப்’ என்ற அந்த ஒருங்கிணைந்த மையம், ஆண்டு ஒன்றில் 100,000 கன மீட்டர் அளவுக்குக் கட்டுமானப் பகுதிப் பொருள்களைத் தயாரித்துத் தரும் என்று அமைச்சர் கூறினார்.
அந்த கான்கிரீட் பகுதிப்பொருள்களைக் கொண்டு ஏறக்குறைய 17 அடுக்குமாடி புளோக்குகளைக் கட்டி முடித்துவிடலாம் என்று புதிய மையத்தின் திறப்புவிழாவில் பேசிய அமைச்சர் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் எச்எல்-சன்வே பிரிஃபேப் ஹப் போன்ற ஆறு மையங்கள் அமைய இருக்கின்றன. அவற்றில் இது முதலாவது மையமாகும்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக கட்டுமானத் திட்டங்களில் பயன்படுத்தக்கூடிய முன்வார்ப்பு குளியல் அறைகள், மேற்கூரைகள் போன்ற பலதரப்பட்ட பகுதிப்பெருள்களை அந்த மையங்கள் உருவாக்கித்தர முடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
எச்எல்-சன்வே பிரிஃபேப் ஹப் மையம் பொங்கோல் பாரத் லேனில் 3.8 ஹெக்டர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
ஹோங் லியோங் ஆசியா நிறுவனத்திற்கும் மலேசியாவின் சன்வே கன்ஸ்ட்ரக்ஷன் குரூப் நிறுவனத்திற்கும் இடைப்பட்ட கூட்டுத்தொழில் நிறுவனமாக அது அமைந்துள்ளது.
புதிய மையம், தானியக்க முறையில் கட்டடப் பகுதிப்பொருள்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது.
தொடர்புடைய செய்திகள்
கொவிட்-19 தொற்று காலத்தில் பொருள், சேவை விநியோகக் கட்டமைப்பில் பெரிய அளவில் குளறுபடிகள் ஏற்பட்டன.
உள்ளூரிலேயே சில கான்கிரீட் முன்வார்ப்பு உற்பத்தி ஆற்றலைப் பெருக்கிக்கொள்ள வேண்டிய தேவையை அந்த நெருக்கடிகள் கோடிட்டுக்காட்டியதாக அமைச்சர் கூறினார்.
சிங்கப்பூரின் ஒருங்கிணைந்த கட்டுமானப் பொருள் முன்வார்ப்பு ஆற்றலைப் பலப்படுத்துவதன் மூலம் உள்ளூரில் முக்கியமான கட்டடப் பகுதிப்பொருள்களைத் தயாரிக்க முடிந்ததாக அமைச்சர் தெரிவித்தார்.
இறக்குமதிகள் பாதிக்கப்பட்டாலும் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடக்கும் அளவுக்கு உள்ளூர் விநியோகக் கட்டமைப்பு மீன்திறனுடன் திகழ இதன் மூலம் வழி கிடைக்கும் என்றார் அவர்.
அதிக எண்ணிக்கையிலான பிடிஓ வீட்டுக் கட்டுமானத் திட்டங்கள் இடம்பெற இருக்கின்றன. இந்தச் சூழலில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தரப்படுத்தப்பட்ட முன்வார்ப்பு பகுதிப்பொருள்களை அதிகம் பெற்றிருப்பது பற்றி ஆராய்ந்து வருகிறது.
இதன்மூலம், குறிப்பிட்ட நீள, அகலத்தைக் கொண்ட கான்கிரீட் பகுதிப்பொருள்களைக் கட்டுமான நிறுவனங்கள் வாங்க அதிக வாய்ப்புகள் இருக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
சிங்கப்பூரில் கட்டுமானத் தொழில்துறையில் தானியக்கம், புத்தாக்கத்தை அதிகம் பயன்படுத்துவதால் சிங்கப்பூரர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளும் உருவாகும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
தானியக்கம், புத்தாக்கம் அதிகரிப்பதால் ஊழியர்கள் வழிவழியான உடலுழைப்பு வேலை முறைக்குப் பதிலாக அதிக தேர்ச்சி உள்ள புதிய வேலைகளைப் பார்க்கலாம். இதனால் அவர்களுக்கு அதிக ஊதியமும் கிடைக்கும் என்று சமூக சேவைகள் ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு லீ குறிப்பிட்டார்.

