செங்காங் ஈஸ்ட் அவென்யூவில் உள்ள புளோக் 280பி-ன் நான்காவது மாடி வீடு ஒன்றில் புதன்கிழமை அதிகாலை 2.45 மணிக்குத் தீ மூண்டது.
அந்தக் கட்டடத்தில் இருந்து 50 பேர் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டனர்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த தீயணைப்பாளர்கள் அந்தத் தீயை அணைத்து ஒரு தம்பதியையும் அவர்களுடைய பிள்ளைகளையும் அந்த வீட்டில் இருந்து காப்பாற்றினார்கள்.
இதனிடையே, அந்தத் தீயை அணைத்த செங்காங் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சிலரை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வெள்ளிக்கிழமை பேட்டி கண்டது.
தீ மூண்ட தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்தபோது வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தது.
தீயணைப்பு படைப் பிரிவு தளபதி சார்ஜண்ட்(1) கிறிஸ்டோபர் காய் ரிலோர், 19, என்ற முழுநேர தேசியச் சேவையாளர் ஓர் ஆயுதத்தைக் கொண்டு கதவை உடைத்தார்.
சார்ஜண்ட்(3) ரஃபிக் ஹில்மான், 25, உள்ளே நுழைந்தார். உதவ வேண்டிஅலறல் சத்தம் கேட்டது. படுக்கை அறை ஒன்றில் இருந்து அந்தச் சத்தம் வருவதை உணர்ந்துகொண்ட அவர், அந்த அறையில் இருந்த ஒரு தம்பதியும் அவர்களின் மூன்று பிள்ளைகளும் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து தைரியப்படுத்தினார்.
பிறகு அவர் இரண்டு சிறுமிகளையும் கைக்கு ஒன்றாக தூக்கிக்கொண்டு அந்தச் சிறுமிகளின் தாயாரோடு வீட்டைவிட்டு வெளியே தப்பி வந்தார்.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே ஸ்டாஃப் சார்ஜண்ட் அகம்மது ஹலிம் கான், 33, என்பவர் வீட்டின் உள்ளே பயத்தில் நடுங்கியபடி இருந்த பிள்ளைகளின் தந்தைக்குத் தைரியம் சொல்லி அவரிடம் இருந்த இரண்டு வயது ஆண் குழந்தையைத் தன்னிடம் ஒப்படைக்கும்படி அந்தத் தந்தையை கேட்டுக்கொண்டார்.
பிறகு அவர், அந்தக் குழந்தையைச் சுமந்து கொண்டு அந்தத் தந்தையுடன் வீட்டில் இருந்து பத்திரமாக வெளியே வந்தார்.
அந்தத் தந்தை மூச்சுவிட சிரமப்பட்டதை அறிந்து உடனடியாக அவருக்கு உதவினார்.
பிறகு அக்குடும்பத்தினர் அங்கு காத்திருந்த மருத்துவ வண்டியில் ஏறிச் சென்றனர்.
அதேவேளையில், தீ மூண்ட வீட்டின் உள்ளே லெஃப்டினென்ட் டியோ காங் ஸியாங், 28, என்ற தளபதி, பிரத்தியேகச் சாதனத்தைப் பயன்படுத்தி தீ மூண்ட இடத்தை கண்டறிய முயன்றார்.
தீ மூண்ட 15 நிமிடங்களுக்குள் குடும்பத்தினர் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். தீயும் அணைக்கப்பட்டது என தீயணைப்பு நிலைய தளபதி மேஜர் உத்மான் ஷாரிஃப், 31, கூறினார்.

