விலைவாசி உயர்ந்துவரும் சூழலில் அறக்கொடை அமைப்புகளும் இதர அமைப்புகளும் குழந்தைகள், பாலர்கள் உள்ள குடும்பங்களிலிருந்து அதிகரித்துவரும் தேவையைப் பூர்த்தி செய்கின்றன.
நிதிச்சுமையைக் குறைக்க சில குடும்பங்கள் கடும் நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. செலவைக் காரணம் காட்டி சில குழந்தைகளுக்குப் பாலுக்குப் பதிலாக மைலோ பானம் ஊட்டப்படுவதாக சில அமைப்புகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் வசதி குறைந்த குடும்பங்களுக்கு குழந்தை பால் மாவு, டயப்பர் போன்ற அத்தியாவசிய பொருள்களை எஸ்எஸ்விபி அமைப்பு வழங்கி வருகிறது.
எஸ்எஸ்விபி அமைப்பின் பால், டயப்பர் திட்டத்துக்குப் பொறுப்பு வகிக்கும் திருவாட்டி ஆங் சியூ யான், 2023 ஜூன் நிலவரப்படி 336 குழந்தைகள், பாலர்களுக்கு இத்திட்டம் உதவியுள்ளதாகக் கூறினார். ஒப்புநோக்க, 2019 இறுதியில் 132 இளம் பிள்ளைகள் உதவி பெற்றிருந்தனர்.


