பிரதமர் லீயைத் தொடர்புபடுத்தி போலி இணைய விளம்பரம்

பிரதமர் லீயைத் தொடர்புபடுத்தி போலி இணைய விளம்பரம்

1 mins read
96e14ac9-69e8-4bbb-be15-6f2558d03608
‘சிஎன்ஏ’ இணையத்தள அறிக்கையைப் போன்றே தோற்றமளிக்கும் போலி அறிக்கையின் படத்தைப் பிரதமர் லீ சியன் லூங் தமது ஃபேஸ்புக் பதிவில் இணைத்துள்ளார். - படம்: பிரதமர் லீ ஃபேஸ்புக்

மின்னிலக்க நாணய மோசடிக்காரர்கள் போலியான விளம்பரங்களில் தமது பெயரையும் படத்தையும் பயன்படுத்தி அதை அண்மையில் இணையத்தில் உலவவிட்டிருப்பதாகப் பிரதமர் லீ சியன் லூங் கூறியிருக்கிறார்.

சனிக்கிழமை ஃபேஸ்புக்கில் அவர் அவ்வாறு பதிவிட்டுள்ளார்.

வழக்கமாக முக்கியமான உரை அல்லது அறிவிப்புக்குப் பிறகு இத்தகைய போலி விளம்பரங்கள் தலைதூக்குவது வழக்கம் என்பதைக் குறிப்பிட்ட பிரதமர், கடந்த சில நாள்களில் அவை மீண்டும் இணையத்தில் காணப்படுவதாகக் கூறினார்.

“எனது பெயரைப் பயன்படுத்தி ஒரு பொருளை விற்பனை செய்யும் விளம்பரங்கள், சில திட்டங்களில் முதலீடு செய்ய ஊக்குவிக்கும் விளம்பரங்கள், என் குரலைப் பயன்படுத்தி பணம் அனுப்பும்படி கோரும் விளம்பரங்கள் இருந்தாலும் அவற்றுக்கும் எனக்கும் தொடர்பில்லை,” என்று பிரதமர் லீ குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய சில விளம்பரங்களை இணையத்தைப் பயன்படுத்தியபோது தாமே பார்த்ததாகவும் வேறு சில விளம்பரங்கள் குறித்து சிங்கப்பூரர்கள் தமக்குத் தகவல் அளித்ததாகவும் அவர் கூறினார்.

‘சிஎன்ஏ’ இணையத்தள அறிக்கைபோலத் தோற்றமளிக்கும் போலி அறிக்கையின் படத்தையும் திரு லீ தமது பதிவில் இணைத்துள்ளார். “சிறப்பு அறிக்கை: லீ சியன் லூங்கின் ஆக அண்மை முதலீடு அரசாங்கத்தையும் பெரிய வங்கிகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது” என்ற தலைப்புடன் அந்தப் போலி அறிக்கை வெளியாகியுள்ளது. பிரதமரின் படம் அதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மோசடிகள், போலிச் செய்திகள், போலி விளம்பரங்கள் உள்ளிட்டவற்றுக்குப் பதில் அளிக்க வேண்டாம் என்று பொதுமக்களைப் பிரதமர் கேட்டுக்கொண்டார். இத்தகைய மோசடிகள் குறித்துப் புகாரளிக்கும்படியும் அவர் அறிவுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்