திடீர் இதயச் செயலிழப்பு வயதானோருக்கு மட்டுமே ஏற்படும் எனப் பலர் நினைக்கலாம். ஆனால், இளவயதினருக்கும் இதயம் செயலிழக்க நேரிடும் வாய்ப்பு உண்டு.
அண்மையில் 24 வயது காங் ஸி யிங் திடீரென இதயச் செயலிழப்புக்கு ஆளானதை தொடர்ந்து 22 நாள்கள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடினார்.
கடந்த ஏப்ரல் மாதம் நெஞ்சு வலித்ததாலும் மயக்கமாக இருந்ததாலும் ஸி யிங் மருத்துவமனைக்குச் சென்றார்.
அன்று அவருடைய இதயம், தெளிவான முன்அறிகுறிகள் எதுவுமின்றித் திடீரெனச் செயல் இழந்தது. அதற்கு முன்னதாக எந்தவொரு இதயப் பிரச்சினையும் அவருக்கு ஏற்பட்டதில்லை.
ஸி யிங்கின் இதயம் செயலிழந்ததால் உடலின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாமல் போனது. அவரின் உயிரைக் காக்க ஒன்றுக்கும் மேலான சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டன.
“இளையோர் எந்தச் சுகாதார பிரச்சினைகளும் தங்களைப் பாதிக்காது என்று நினைப்பதுண்டு. எனினும், மயோகார்டிடிஸ் எனும் இந்த நோய் எந்த வயதினரையும் பாதிக்கக்கூடும். அனைவரும் இதன் முன்அறிகுறிகளை கண்டறிந்து விழிப்புணர்வுடன் செயல்படுவது முக்கியம்,” என்று வலியுறுத்தினார் இணைப் பேராசிரியர் ராமநாதன் கே.ஆர்.
“எக்மோ எனும் மீளுயிர்ப்புச் சுவாசக் கருவியும் அண்மையில் பயன்பாட்டில் வந்துள்ள இம்பெல்லா எனும் கருவியும் ஸி யிங்கின் உயிரை காக்க பேருதவியாக இருந்தன. இரு கருவிகளையும் இணைத்து நோயாளிக்கு வழங்குவதை எக்பேல்லா என்று அழைப்போம். மயோகார்டிடிஸ் நோயால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை வழங்குவதை இது எளிமையாக்கியுள்ளது. சிக்கல்களைக் குறைத்து உயிர்பிழைக்கும் வாய்ப்பையும் அதிகரிக்கிறது,” என்று விளக்கினார் மருத்துவர் செந்தில் குமார் சுப்பையன்.
“தேசியப் பல்கலைக்கழக இதய நிலையம் சிங்கப்பூர் பொதுமக்களுக்கான ஒரே இதய நிலையம். திடீர் இதயச் செயலிழப்பு நேரிடும் நோயாளிகளுக்கு சிறந்த பராமரிப்பு வழங்கும் நோக்கத்துடன் பலதுறை இதய அதிர்ச்சிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதல் செயல்திறனுடன் சிகிச்சை வழங்க முடியும்,” என்று துணைப் பேராசிரியர் லின் வெய்சின் பகிர்ந்துகொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
சிகிச்சை முடிந்த பின்னும் ஸி யிங் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைகளுக்குக் கட்டாயம் செல்ல வேண்டும்.
நீண்டகாலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்த இதய நோய் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது முக்கியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.