காவல்துறை அதிகாரி யுவராஜாவுக்கு அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் இறுதி மரியாதை

காவல்துறை அதிகாரி யுவராஜாவுக்கு அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் இறுதி மரியாதை

2 mins read
c5587bf0-3e3c-4bd5-8735-b6fffae2ef30
ஞாயிற்றுக்கிழமை ஈசூன் அவென்யூ 6, புளோக் 393ல் நடைபெற்ற யுவராஜாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற அமைச்சர் கா.சண்முகம் அவரது குடும்பத்தார், உறவினர்களுடன் பேசினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களான டெரிக் கோ, கா. சண்முகம் ஆகியோர் மறைந்த காவல்துறை அதிகாரி யுவராஜா கோபாலுக்கு இறுதி மரியாதை செலுத்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வாக்கில் நேரில் சென்றனர்.

யுவராஜா
யுவராஜா - படம்: ஊடகம்

அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சட்ட, உள்துறை அமைச்சருமான கா. சண்முகம், காவல்துறையில் ஏறக்குறைய 40 விழுக்காட்டினர் சிறுபான்மை இனங்களான மலாய், இந்திய இனத்தைச் சேர்ந்தோர் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

பாரபட்ச சம்பவங்கள் பற்றி ஏதாவது புகார் தெரிவிக்கப்பட்டால் அது பற்றி தீர விசாரித்து, குற்றவாளிகளைச் சட்டத்துக்குமுன் நிறுத்துவதோடு, வெளிப்படையான உரையாடல்கள் நிகழ அரசாங்கம் வகைசெய்யும் என்று தமிழ் முரசிடம் அமைச்சர் கூறினார்.

“இனம், சமயம், முதலிய காரணிகள் எதையும் வைத்து அரசாங்க நிறுவனங்களும் காவல்துறையும் எவரையும் வேறுபடுத்தக் கூடாது என்பது கொள்கை,” என அமைச்சர் தெரிவித்தார். 

அமைச்சர் சண்முகம், டெரிக் கோ இருவரும் 12.45 மணி அளவில் திரு யுவராஜா குடியிருந்த புளோக் 393இன் ஆறாம் மாடி வீட்டிற்குச் சென்று அவர் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். திரு யுவராஜாவின் மனைவி ரூபலட்சுமி சிவகுமாரிடம் தனிப்பட்ட முறையில் பேசியதாக அமைச்சர் கூறினார். பின்னர் 1 மணி அளவில் திரு யுவராஜாவின் பெற்றோர், இரு சகோதரர்கள், அவர்களின் மனைவிகள் ஆகியோரை கீழ்த்தளத்தில் சந்தித்து இருவரும் பேசினர்.

திரு சண்முகம், கண் கலங்கிய திரு யுவராஜாவின் தாயாரைத் தழுவி ஆறுதல் கூறினார். யுவராஜாவின் நிலைமை பற்றி குடும்பத்தார் சற்று குழம்பி இருந்ததாகவும் அவர்களிடத்தில் யுவராஜா எதிர்நோக்கிய வேலையிட சிக்கல்களைப் பற்றி தாம் தெளிவுபடுத்தியதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

“யுவராஜாவுக்கு ஏற்பட்ட அனுபவங்களின் பின்னணி பற்றி அவரின் குடும்பத்தாருக்குத் தெரியவில்லை. அதனை எடுத்துக் கூறியது அவர்களுக்கு மன நிம்மதி அளித்தது. இவ்விவரங்கள் முன்பே தெரிந்திருந்தால் நிலைமை மாறுபட்டிருக்கும் என்று அவர்கள் வருந்தினர். கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்த சில சம்பவங்களையும் நான் குறிப்பிட்டது அவர்களுக்கு உண்மை நிலவரத்தை மேலும் புரிய வைத்தது,” என்றார் அமைச்சர்.

யுவராஜா மூன்று மகன்களில் இரண்டாவது பிள்ளை. அவரின் மற்றொரு சகோதரர் சிறைச்சாலை சார்ந்து பணிபுரியும் உள்துறைக்குழு அதிகாரியாக உள்ளார்.

யுவராஜாவிற்கு ஏற்பட்டதுபோன்றவற்றை தான் வேலையிடத்தில் சந்தித்ததில்லை என அமைச்சரிடம் அந்தச் சகோதரர் பகிர்ந்துகொண்டிருந்தார். யுவராஜாவின் நிலையைத் தாம் அறியாமல் போனதை நினைத்து அவர் வருந்தியதாகவும் அமைச்சர் கூறினார்.

தங்கள் தொகுதியில் நடைபெறும் ஈமச்சடங்குகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் செல்வது வழக்கம் என கூறினார் திரு சண்முகம்.

முக்கியமாக, குடும்பத்தாருக்கு தங்களின் ஆதரவுண்டு என்பதை தெரியப்படுத்தி, அவர்களின் நலனை உறுதிப்படுத்துவது இன்றைய சந்திப்பின் நோக்கம் என அவர் குறிப்பிட்டார்.

முழுமையான விசாரணை நடைபெறும் என்று உறுதியளித்த அமைச்சர், அதற்கு முன் பொதுமக்கள் காவல்துறையைப் பற்றியோ யுவராஜாவைப் பற்றியோ ஊகங்கள் ஏற்படுத்தவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

யுவராஜாவின் நல்லுடல் உற்றார் உறவினர் சூழ ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்குமேல் மண்டாய் தகனச்சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது.

குறிப்புச் சொற்கள்