சிங்கப்பூரில் எதிரொலிக்கும் இந்தியாவின் அரிசித் தட்டுப்பாடு

3 mins read
53348053-080f-41ee-b695-8deda014dd3c
இந்தியா பாஸ்மதி தவிர்த்த ஏனைய அரிசி வகைகளுக்குத் தடைவிதித்ததிலிருந்து சிங்கப்பூரிலுள்ள கடைகளில் பொதுமக்கள் அதிகளவில் அரிசியை வாங்கிக் குவிக்கின்றனர். - படம்: மோனலிசா

பாஸ்மதி அரிசி தவிர்த்த ஏனைய அரிசி வகைகளை ஏற்றுமதி செய்வதற்கு இந்திய அரசு தடை விதித்துள்ளதையடுத்து சிங்கப்பூரில் இந்திய அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சில கடைகளில் இருப்பு இல்லை. சில கடைகள் விலையை உயர்த்தியுள்ளன. முஸ்தபா சென்டர் ஒருவருக்கு இரண்டு பாக்கெட்டுகள் மட்டுமே என்ற கட்டுப்பாடு கொண்டுவந்துள்ளது. 

இந்தியாவில் தொடர்ந்து பெய்யும் கனமழையில் நெல் விளைச்சலும்  அரிசி உற்பத்தியும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் உள்நாட்டில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.

அதைத் தவிர்க்க இந்திய அரசாங்கம் பாஸ்மதி தவிர்த்த ஏனைய வகை அரிசிகளுக்கு ஏற்றுமதித் தடையை விதித்துள்ளது. 

ஜூலை 20ஆம் தேதி இந்த அறிவிப்பு வந்ததுமே இந்திய அரிசி கிடைக்காமல் போய்விடும் அல்லது விலையேறிவிடும் என்ற அச்சத்தால் இங்குள்ளவர்கள் பொன்னி அரிசி உள்ளிட்ட அரிசி வகைகளை வாங்கிச் சேர்க்கத் தொடங்கிவிட்டனர்.

தாய்லாந்து, மியன்மார், கம்போடியா உள்ளிட்ட வேறுபல நாடுகளிலிருந்தும் சிங்கப்பூர் அரிசியை இறக்குமதி செய்கிறது. எனினும் இந்திய அரிசியையே பெரும்பாலும் இந்தியர்கள் விரும்புகின்றனர்.

“இப்போதைக்கு உள்ள இருப்பு சரக்கு அதிகபட்சமாக இன்னும் நான்கு முதல் ஐந்து நாள்களுக்கு நீடிக்கும். அரிசி விநியோகிப்பாளர்கள் நிலவரத்தை இன்னும் உறுதிப்படுத்தவில்லை,” என்று கூறினார் 12 ஆண்டுகளுக்கும் மேலாக கொடச்சாத்திரி பலசரக்கு கடை நடத்திவரும் திருவாட்டி சீதா தேவி, 44. 

மக்கள் அரிசியை வாங்கி வைக்கத் தொடங்கியுள்ளனர்.
மக்கள் அரிசியை வாங்கி வைக்கத் தொடங்கியுள்ளனர். - படம்: மோனலிசா

ஒருவேளை விநியோகிப்பாளர்களிடம் சரக்கு இல்லையெனில் குறைந்தது ஒருவாரம் முதல் பத்து நாள்களுக்காவது அரிசித் தட்டுப்பாடு நிலவும் என்று ஊகிப்பதாகத் தெரிவித்த அவர், இதுவரையில் தங்களுடைய கடையில் விலையை ஏற்றவில்லை என்றும் கூறினார். 

சென்னை டிரேடிங் அண்ட் சூப்பர்மார்ட் கடையில் மேலாளராகப் பணிபுரியும் சிவக்குமார், 50, “இருப்பு குறைந்துகொண்டே வரும் சூழலில் திங்கட்கிழமை முதல் அரிசியின் வகையையும் அளவையும் பொறுத்து ஒரு 5 கிலோ பாக்கெட்டுக்கு ஒரு வெள்ளியும் பத்து கிலோ பாக்கெட்டுக்கு இரண்டு வெள்ளியும் விலையை ஏற்றியுள்ளோம்.

“இருப்பினும் சிங்கப்பூர் இது போன்ற சூழ்நிலைகளை விரைவில் சரிசெய்து விடும் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம்“ என்றார்.

“அரிசியின் இருப்பு மிகவும் குறைந்து வருகிறது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒவ்வொருவரும் இரண்டு முதல் நான்கு பாக்கெட்டுகள்வரை வாங்கிச் செல்கின்றனர். அடுத்து எப்போது சரக்கு வரும் என்று சரிவரத் தெரியவில்லை,” என்றார் சாய் சண்முகா கடையின் மூத்த ஊழியரான சக்திவேல் வெங்கடாச்சலம், 63. 

இந்திய மளிகைக் கடைகளிலும் பல்பொருள் அங்காடிகளிலும் அரிசி விற்றுத் தீர்ந்து வருகிறது.
இந்திய மளிகைக் கடைகளிலும் பல்பொருள் அங்காடிகளிலும் அரிசி விற்றுத் தீர்ந்து வருகிறது. - படம்: மோனலிசா

அம்பிகாஸ் அரிசி விநியோக நிறுவனத்தின் பொது மேலாளர் திரு குழந்தைவேலு பெரியசாமி, 64, “அரிசி இருப்பு குறைந்துள்ள நிலையில் அதிகபட்சம் அடுத்த ஒருமாத காலத்திற்கு சமாளிக்கலாம். இதுவரை எங்களிடம் இருக்கும் ஆர்டர்களை கொடுத்து வருகிறோம்.

கையிருப்பு இன்னும் சில வாரங்களுக்குத் தாக்குப் பிடிக்கும் என கடைக்காரர்கள் கூறுகின்றனர்.
கையிருப்பு இன்னும் சில வாரங்களுக்குத் தாக்குப் பிடிக்கும் என கடைக்காரர்கள் கூறுகின்றனர். - படம்: மோனலிசா

“பிற நாடுகளிலிருந்து நாம் இறக்குமதி செய்தாலும் இந்தியாவிலிருந்து வரும் அரிசியை மட்டுமே இந்தியர்கள் விரும்புவதால் தட்டுப்பாடு தலைதூக்கும் வாய்ப்புகள் உள்ளன” என்று கூறினார். 

“பொதுவாக இரண்டு வாரத்திற்கு ஒருமுறை 10 கிலோ அரிசி வாங்குவேன். அரிசித் தட்டுப்பாடு ஏற்படும் என்ற செய்தியால் இம்முறை 30 கிலோ வாங்கிச் செல்கிறேன்,“ என்றார் கட்டுமானத் துறையில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியரான ராஜா நாச்சியப்பன், 39. 

முன்னாள் ஆசிரியரான 59 வயது திருவாட்டி கீதா சுப்ரமணியன், கடைக்கு வந்த பின்னரே சக வாடிக்கையாளர்கள் மூலமே அரிசித் தட்டுப்பாடு பற்றி தெரிந்துகொண்டார். அதனால் பொதுவாக வாங்குவதைவிட இரு மடங்கு வாங்கிச் செல்வதாகக் கூறினார்.

உலகளாவிய அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 40 விழுக்காடாக உள்ளது. இந்தியாவில் இருந்து 140 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்தச் சூழலில் அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்திருப்பதால் அனைத்துலக அளவில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

குறிப்புச் சொற்கள்