திமோர் லெஸ்டே தலைநகர் டிலியில் தூதரகம் ஒன்றை சிங்கப்பூர் அமைக்க இருப்பதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
வர்த்தகம், முதலீடு, சுற்றுப்பயணம், தற்காப்பு, எரிசக்தி, மனிதவளம் போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் மையப் பகுதியாக தூதரகம் செயல்படும் என அறிக்கை குறிப்பிட்டது.
சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் திமோர் லெஸ்டே வெளியுறவு, ஒத்துழைப்பு அமைச்சர் பெண்டிட்டோ டோஸ் சான்டோஸ் ஃபிரைட்டாசும் நடத்திய கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.
தூதரகம் அமைப்பது குறித்த திட்டத்தை திமோர் லெஸ்டே தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
தூதரகம் எங்கு அமையும் என்பது குறித்த விவரங்கள் வரையப்பட்டு வருவதாக டாக்டர் விவியன் தெரிவித்தார்.
திமோர் லெஸ்டேயில் தூதரகம் அமைக்கும் ஆறாவது ஆசியான் நாடாக சிங்கப்பூர் விளங்கும். புருணை, இந்தோனீசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், தாய்லாந்து ஆகிய ஆசியான் நாடுகள் டிலியில் ஏற்கெனவே தூதரகங்களை அமைத்துள்ளன.
இந்நிலையில், திமோர் லெஸ்டேயின் மேம்பாட்டிற்கு சிங்கப்பூரின் வலுவான, நிலையான ஆதரவை டாக்டர் விவியன் கோடிட்டுக் காட்டியதாக வெளியுறவு அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.
சொத்துச் சந்தை, விருந்தோம்பல் போன்ற துறைகளில் திமோர் லெஸ்டேயின் முக்கிய அந்நிய முதலீட்டாளராக சிங்கப்பூர் திகழ்கிறது.

