சிங்கப்பூரில் கடந்த 12 மாதங்களில் தனியார் வாடகை கார்களின் எண்ணிக்கை 11.3 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஜூன் மாதம் அத்தகைய கார்களின் எண்ணிக்கை 76,686ஆக இருந்தது.
சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் தனியார் வாடகை கார் சேவை வழங்கும் நிறுவனங்கள் கார் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன.
‘சிஓஇ’ எனப்படும் வாகன உரிமைச் சான்றிதழ்க் கட்டணம் வெகுவாக உயர்ந்துள்ளதால் புதிய கார்களின் விலையும் உயர்ந்துள்ளது. அதனால் பயனாளர்கள் சிலர் வாடகை கார் சேவையை நாடுவதாக கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
2019ஆம் ஆண்டு தனியார் வாடகை கார் சேவையை 77,141 பேர் நாடினர். இந்த ஆண்டு ஜூன் மாத இறுதியில் அந்த எண்ணிக்கை 76,686ஆகப் பதிவானது. கொவிட்-19 கிருமிப் பரவலால் 2020, 2021ஆம் ஆண்டுகளில் குறைந்த வாடகை கார்களின் எண்ணிக்கை மீண்டும் 2022ல் அதிகரிக்கத் தொடங்கியது.
“கொவிட்-19 நோய்ப் பரவல் காலகட்டத்தில் தேவை குறைந்ததால் தனியார் வாடகை கார்களின் எண்ணிக்கையும் குறைந்தது. கிருமிப்பரவலுக்குப் பிறகு வியக்கத்தக்க அளவில் தேவை அதிகரித்தது. எனவே அத்தைகைய கார்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது,” என்று சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் பொருளியல் இணைப் பேராசிரியர் வால்டர் தெஸைரா கூறினார்.
சுற்றுப் பயணத்துறையின் மறுமலர்ச்சி வாடகை கார்களுக்கான கூடுதல் தேவையை உருவாக்கியிருப்பதாகக் கூறிய கோல்ட்பெல் நிறுவன இயக்குநர் வாரிய ஆலோசகர் இங் லீ குவாங், இந்தத் தேவை மேலும் அதிகரிக்கும் என்று கருதுவதாகக் கூறினார். சீனாவில் இருந்து வரும் சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை இன்னும் கிருமிப் பரவலுக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்த அளவை எட்டவில்லை என்பதை அவர் சுட்டினார்.
புதிய வாகனங்களுக்கான ‘சிஓஇ’ ஒதுக்கீட்டு எண்ணிக்கை குறைந்திருக்கும் வேளையில் தனியார் வாடகை கார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதை கவனிப்பாளர்கள் சுட்டினர்.
இந்நிலையில், சிங்கப்பூரில் டாக்சிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2014ஆம் ஆண்டில் 28,259 டாக்சிகள் இங்கு சேவை வழங்கின. இவ்வாண்டு ஜூன் மாத நிலவரப்படி 13,861 டாக்சிகள் மட்டுமே சேவை வழங்கி வருகின்றன. சென்ற ஆண்டுடன் ஒப்புநோக்க இது 3.47 விழுக்காடு குறைவு.