சிங்கப்பூரில் உள்ள மிகச் சிறிய, சிறிய, நடுத்தர நிறுவனங்கள் எல்லை தாண்டிய மின்வர்த்தகத்தை மேம்படுத்த ஆதரவு வழங்கப்படவிருக்கிறது.
‘அமேசான் குளோபல் செல்லிங் சிங்கப்பூர் கிராஸ்-பார்டர் லாஞ்ச்பேட்’ எனும் புதிய திட்டம் திங்கட்கிழமை தொடங்கப்பட்டது. எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பும் சிங்கப்பூர் வர்த்தகக் கூட்டமைப்பும் இணைந்து அத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.
புதிய திட்டத்தின் மூலம் 100க்கு மேற்பட்ட உள்ளூர் நிறுவனங்கள் பலனடையும். அடுத்த ஈராண்டுகளில் அந்நிறுவனங்களின் தயாரிப்புகளை வெளிநாட்டுச் சந்தைகளுக்கு விரிவுபடுத்த ‘குளோபல் செல்லிங்’ உதவி வழங்கும்.
அமேசான் நிறுவனத்தின் ஓர் அங்கமான ‘குளோபல் செல்லிங்’, விற்பனையாளர்கள் அனைத்துலக அளவில் வர்த்தகம் மேற்கொள்ள உதவி செய்கிறது.
புதிய திட்டத்தின் மூலம் வர்த்தக வளர்ச்சியும் கொள்கையும், சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பான ஆலோசனைகளை 100 உள்ளூர் மிகச் சிறிய, சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பெற்றுக்கொள்ளும்.
ஏறக்குறைய 300 மிகச் சிறிய, சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு எல்லை தாண்டிய மின்வர்த்தகம் தொடர்பான புரிதலுக்காக கருத்தரங்குகள், வர்த்தக மறுஆய்வு, வர்த்தகப் பங்காளித்துவத் தொடர்புகள் போன்றவற்றிற்கு ஏற்பாடு செய்யப்படும்.
எல்லை தாண்டிய மின்வர்த்தகம், மிகச் சிறிய, சிறிய, நடுத்தர நிறுவனங்களின் வெற்றிக்கு அவசியமானது என்பதை ‘அமேசான் குளோபல் செல்லிங்’ சுட்டியது.

