தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அன்புக்குரியோரிடம் தீவிரவாத நாட்டத்துக்கான அறிகுறிகள் தென்பட்டால் 37 விழுக்காட்டினர் புகாரளிப்பர்: ஆய்வு

3 mins read
6815c1b4-4e74-4225-a43f-b2940c725b22
தென்கிழக்காசியாவைச் சேர்ந்த ‘ஐஎஸ்’ பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள், சமூக ஊடகங்கள் மூலம் ‘மெய்நிகர் முஸ்லிம் ஆட்சி வட்டாரம்’ ஒன்றில் வன்செயலில் ஈடுபடும்படி ஒருவரை ஒருவர் ஊக்கப்படுத்திக் கொள்வதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை கூறியது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரர்களிலும் நிரந்தரவாசிகளிலும் 37 விழுக்காட்டினர், தங்கள் அன்புக்குரியோரிடம் தீவிரவாத சித்தாந்தத்தின்பால் ஈர்க்கப்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டால், அதிகாரிகளிடம் அதுகுறித்துத் தெரிவிப்பர் என்று கருத்தாய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

உள்துறை அமைச்சு, 15 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய 2,004 பேரிடம் அக்கருத்தாய்வை மேற்கொண்டது. 2022ஆம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை அந்தக் கருத்தாய்வு நடைபெற்றது.

கருத்தாய்வில் கலந்துகொண்டோர் பொதுவாகத் தாங்கள் விழிப்புடன் இருப்பதாகக் கூறினர். பொது இடங்களில் சந்தேகத்துக்குரிய வகையில் யாரேனும் நடந்துகொள்கிறார்களா அல்லது சந்தேகத்துக்குரிய பொருள்கள் ஏதேனும் தென்படுகின்றனவா எனக் கண்காணிக்கும் வழக்கம் உண்டு என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

சிங்கப்பூருக்கு உடனடி அச்சுறுத்தல் ஏதும் இல்லாவிட்டாலும், அது தொடர்ந்து பயங்கரவாதச் செயல்களுக்கான இலக்காக இருந்துவருகிறது என்று அதிகாரிகள் மதிப்பிட்டுள்ள வேளையில் இக்கருத்தாய்வின் முடிவுகள் வெளியாகி உள்ளன.

இளையர்கள் தீவிரவாத சித்தாந்தத்தின்பால் ஈர்க்கப்படும் போக்கு குறித்த கவலை சிங்கப்பூரில் அதிகரிப்பதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்தது. சமூக ஊடகங்கள், இணைய விளையாட்டுத் தளங்கள் ஆகியவற்றின் வாயிலாக பயங்கரவாதக் குழுக்கள் ஆட்சேர்ப்பில் ஈடுபடுவதை அது சுட்டியது.

திங்கட்கிழமை வெளியிட்ட பயங்கரவாத மிரட்டல் தொடர்பான வருடாந்தர மதிப்பீட்டில் அது அவ்வாறு கூறியது.

ஈராக்கிலும் சிரியாவிலும் செயல்படும் ‘ஐஎஸ்’ பயங்கரவாத அமைப்பு போன்ற குழுக்களால் சிங்கப்பூரில் தீவிரவாத சித்தாந்தத்தின்பால் ஈர்க்கப்படுவோரின் வயது குறைந்துகொண்டே வருவதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை சொன்னது.

2015ஆம் ஆண்டிலிருந்து இங்கு 49 பேருக்கு உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுப்புக்காவல் உத்தரவு, கட்டுப்பாட்டு உத்தரவு போன்றவை பிறப்பிக்கப்பட்டுள்ளன. அவர்களில் 37 பேர் சிங்கப்பூரர்கள்; 12 பேர் வெளிநாட்டினர்.

அதே காலகட்டத்தில் 20 அல்லது அதற்குக் குறைவான வயதுடைய சிங்கப்பூர் இளையர்கள் 11 பேர்மீது உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் அனைவரும் சுயமாகவே தீவிரவாத சித்தாந்தத்தின்பால் ஈர்க்கப்பட்டவர்கள்.

2022 ஜூலையில் பயங்கரவாத அச்சுறுத்தல் மதிப்பீட்டின் அடிப்படையில் நால்வர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் மூவர் இளையர்கள்.

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டோரில் ஆக இளையவருக்கு வயது 15. அவர் 2022 டிசம்பரில் தடுத்து வைக்கப்பட்டார்.

சிங்கப்பூரில் தாங்களாகவே தீவிரவாதத்தின்பால் ஈர்க்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட பெரும்பாலோர், ‘ஐஎஸ்’ பயங்கரவாத அமைப்பு, அல் காய்தா போன்றவற்றின் பிரசாரங்களை சமூக ஊடகம் வாயிலாகப் பார்த்து அதன்மூலம் மாறியவர்கள் ன்று உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை கூறியது.

தீவிரவாதம் தொடர்பான தகவல்கள் சமூக ஊடகங்களில் எளிதாகப் பரவக்கூடியவை என்பதை அது சுட்டியது.

வெவ்வேறு நாடுகளில் இருந்தாலும் ஒத்த சிந்தனை உடையோர் இணையம்வழி தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு ‘மெய்நிகர் முஸ்லிம் ஆட்சி வட்டாரத்தை’ உருவாக்க இயலும். அங்கு அவர்கள் பயங்கரவாதக் குழுக்களை ஆதரிக்கும் பிரசாரங்களைப் பரப்ப முடியும் என்று அது குறிப்பிட்டது.

“உலகெங்கும் பயங்கரவாதம், தீவிரவாதம் தொடர்பான மிரட்டல்கள் இருந்து வருகின்றன. சிங்கப்பூரும் சிங்கப்பூரர்களும் அதற்கு விதிவிலக்கல்ல,” என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை கூறியது.

“ஒட்டுமொத்தக் கண்காணிப்பு, தயார்நிலை, மீள்திறன், ஒற்றுமை ஆகியவற்றுடன், பயங்கரவாதச் செயல்களை மேற்கொள்ளவோ அவற்றுக்கு நிதியாதரவு அளிக்கவோ அவைகுறித்து பிரசாரம் செய்யவோ முனைவோரை அறவே சகித்துக்கொள்ளாமையே நமது வலுவான தற்காப்பு,” என்று அது வலியுறுத்தியது.

குறிப்புச் சொற்கள்