2021ஐவிட கடந்த ஆண்டு கூடுதலான உள்ளூர், வெளிநாட்டு ஊழியர்கள் சம்பள கோரிக்கைகளைச் சமர்ப்பித்தனர். அவர்களுக்காக மீட்கப்பட்ட மொத்த தொகையும் கிட்டத்தட்ட 40 விழுக்காடு உயர்ந்து $12 மில்லியனானது.
கடந்த ஆண்டு சம்பள கோரிக்கைகள் 26 விழுக்காடு அதிகரித்து 6,123ஆகப் பதிவாகின. 2021ல் இந்த எண்ணிக்கை 4,848ஆக இருந்தது. வர்த்தகச் செயலிழப்பு அல்லது நிதிச்சுமை எதிர்நோக்கிய நிறுவனங்களுக்கு எதிராக கூடுதலான சம்பள கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக சச்சரவு தீர்வுக்கான முத்தரப்புக் கூட்டணி செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
மனிதவள அமைச்சு, முத்தரப்புக் கூட்டணியிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஊழியர் கோரிக்கைகள், மேல்முறையீடுகள் கடந்த ஆண்டு 1,000 ஊழியர்களுக்கு 1.97 என்ற விகிதமாக உயர்ந்தது. 2021ல் இந்த விகிதம் 1.73ஆக இருந்ததாக வேலை நியமன தரநிலைகள் அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டு மனிதவள அமைச்சுக்கும் முத்தரப்புக் கூட்டணிக்கும் கிடைத்த ஊழியர் கோரிக்கைகள், மேல்முறையீடுகளில் 57 விழுக்காட்டை சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் அடங்கிய உள்ளூர் ஊழியர்கள் சமர்ப்பித்தனர்.
ஊழியர் கோரிக்கைகள், மேல்முறையீடுகளில் பெரும்பகுதி சம்பள கோரிக்கைகளாக அமைந்தன. அடிப்படைச் சம்பளம், மிகைநேர சம்பளத்திற்கான கோரிக்கைகள் அவை. எஞ்சியவை பணிநீக்க கோரிக்கைகளாக இருந்தன.
உள்ளூர், வெளிநாட்டு ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கப்படாததற்கான கோரிக்கைகள் கடந்த ஆண்டு அதிகரித்தன. உள்ளூர்வாசிகளிடையே இந்த விகிதம் 1,000 ஊழியர்களுக்கு 1.29ஆக இருந்தது. ஒப்புநோக்க 2021ல் இந்த விகிதம் 1.16ஆக இருந்தது. வெளிநாட்டு ஊழியர்களைப் பொறுத்தமட்டில், கடந்த ஆண்டு இந்த விகிதம் 1,000 ஊழியர்களுக்கு 2.53ஆக இருந்தது. 2021ல் அது 2.1ஆக இருந்தது.
எனினும், சம்பள பாக்கி மற்றும் தவறாக பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான மொத்த கோரிக்கைகள் கொவிட்-19க்கு முந்தைய நிலவரத்தில் இருந்ததைவிடக் குறைவாக இருந்தன.
சம்பள கோரிக்கைகளில் 86 விழுக்காடு சச்சரவு தீர்வுக்கான முத்தரப்புக் கூட்டணியில் சமரசம் மூலம் தீர்வுகாணப்பட்டது அறிக்கையில் கண்டறியப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அவற்றில் 90 விழுக்காடு கோரிக்கைகள் இரண்டு மாதங்களுக்குள் தீர்வு எட்டப்பட்டன. ஒப்புநோக்க, 2021ல் இந்த விகிதம் 92 விழுக்காடாக இருந்தது.
கடந்த ஆண்டு சம்பள கோரிக்கைகளைச் சமர்ப்பித்த ஊழியர்களில் 93 விழுக்காட்டினர் சம்பள பாக்கியை முழுமையாக மீட்டனர். நான்கு விழுக்காட்டினர் தங்களது சம்பள பாக்கியில் ஒரு பகுதியை மட்டும் மீட்டனர்.
எஞ்சிய மூன்று விழுக்காட்டினர் சம்பள பாக்கியை மீட்கவில்லை என்றும் அவர்களில் பெரும்பாலானோர் அதிக வருமானம் ஈட்டுவோராக இருந்தனர் என்றும் அறிக்கை சுட்டியது.
ஊழியர்களுக்குச் சம்பளத்தை முழுவதுமாகச் செலுத்தாத முதலாளிகளின் வேலை அனுமதிச் சலுகைகள் ரத்து செய்யப்பட்டதாகவும் அறிக்கை குறிப்பிட்டது.

