தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இதயப் பிரச்சினைக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் பாட்டாளிக் கட்சி எம்.பி. ஃபைசல் மனாப்

1 mins read
e13347d1-e4b1-44fb-bca0-a395c7197474
திரு ஃபைசல் மனாப் இதயப் பிரச்சினைக்காக திங்கட்கிழமை இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். - படம்: GOV.SG

அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் பாட்டாளிக் கட்சித் துணைத் தலைவருமான ஃபைசல் மனாப் இதயப் பிரச்சினைக்காக திங்கட்கிழமை இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திரு ஃபைசல் சுயநினைவுடனும் சீரான நிலையிலும் இருப்பதாக பாட்டாளிக் கட்சி செவ்வாய்க்கிழமை கூறியது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

“பொதுமக்களின் அக்கறைக்காக அவரின் குடும்பத்தார் நன்றி தெரிவித்துக்கொள்கின்றனர். அவர் குணமடைவதில் கவனம் செலுத்த தனிமறைவு வழங்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்,” என்று பாட்டாளிக் கட்சி குறிப்பிட்டது.

2011லிருந்து அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக திரு ஃபைசல் இருந்து வந்துள்ளார்.

பாட்டாளிக் கட்சியின் அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருவாட்டி சில்வியா லிம், திரு ஜெரால்ட் கியாம், திரு பிரித்தம் சிங், இதர கட்சி உறுப்பினர்கள் திரு ஃபைசலின் தொகுதிப் பணியை மேற்கொள்வர்.

முன்னதாக, பாட்டாளிக் கட்சியின் முன்னாள் இளையரணித் தலைவர் நிக்கோல் சியாவுடன் தகாத உறவு வைத்திருந்ததன் தொடர்பில் பொய் கூறியதற்காக அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லியோன் பெரேரா ஜூலை 19ஆம் தேதி பதவி விலகினார்.

குறிப்புச் சொற்கள்