தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொஃப்மா சட்டத்தின்கீழ் திருத்தம் பதிவிட லீ சியன் யாங்குக்கு உத்தரவு

3 mins read
a8cd7e23-18ef-4ac4-af29-6dc158033f16
திரு லீ சியன் யாங் - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ரிடவ்ட் ரோடு விவகாரம் குறித்து ஞாயிற்றுக்கிழமை ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட கருத்துக்கு திருத்தம் பதிவிடும்படி திரு லீ சியன் யாங்குக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொய்ச் செய்திகளுக்கு எதிரான பொஃப்மா சட்டத்தின்கீழ் கலாசார, சமூக, இளையர் அமைச்சரும் இரண்டாம் சட்ட அமைச்சருமான எட்வின் டோங் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூ அவர்களின் இளைய மகனான திரு லீயின் ஃபேஸ்புக் பதிவில் உண்மையற்ற மூன்று கூற்றுகள் இருந்ததாக சட்ட அமைச்சு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தியாளர் அறிக்கை தெரிவித்தது.

ரிடவ்ட் ரோடு எண் 26, 31 பங்களாக்கள், சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகத்திற்கும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிரு‌‌ஷ்ணனுக்கும் வாடகைக்கு விடப்பட்டிருந்ததால் அவற்றைப் புதுப்பிக்க அரசாங்கம் பணம் கொடுத்தது. இரு வீடுகளையும் இரு அமைச்சர்கள் குத்தகைக்கு எடுத்திருந்ததால் அங்கிருந்த மரங்களை வெட்ட அனுமதிக்கப்பட்டது.

எஸ்பிஹெச் மீடியா டிரஸ்ட் அதன் விநியோக எண்ணிக்கையை மிகைப்படுத்தி மோசடி செய்தது.

பிரதமர் லீ சியன் லூங் தலைமையிலான மக்கள் செயல் கட்சி மீதான நம்பிக்கை “நொறுங்கிப்போய்” விட்டதாகவும் திரு லீ தமது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருந்தார்.

“இரு அமைச்சர்களும் அவர்களில் ஒருவரின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பிடமிருந்து அரசாங்கத்திற்குச் சொந்தமான பங்களாக்களைக் குத்தகைக்கு எடுத்து, மரங்களை வெட்டி, அரசாங்கச் செலவில் புதுப்பிப்புகளைப் பெற்றனர். கிட்டத்தட்ட ஒரு பில்லியன் வெள்ளி வரிப்பணம் வழங்கப்பட்டுள்ள எஸ்பிஹெச் மீடியா, அதன் விநியோக எண்ணிக்கைகளை மிகைப்படுத்தி மோசடி செய்தது,” என்று அவர் எழுதியிருந்தார்.

ரிடவ்ட் ரோடு விவகாரத்தை லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு விசாரணை செய்தது. மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் மறுஆய்வு செய்தார். இதுபற்றி நாடாளுமன்றத்தில் தீர விவாதிக்கப்பட்டது. இரு அமைச்சர்களும் எந்தத் தவறும் செய்யவில்லை என்று லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவின் அறிக்கை கூறியது. எந்த நடைமுறையும் மீறப்படவில்லை என்று மூத்த அமைச்சரின் மறுஆய்வு கண்டறிந்தது.

இந்நிலையில், திரு லீயின் ஃபேஸ்புக் பதிவிலிருந்த பொய்யான கூற்றுகளுக்கு சட்ட அமைச்சு செவ்வாய்க்கிழமை விளக்கமளித்தது.

முதலாவதாக, புதுப்பிப்புப் பணிகளுக்கும் வாடகைதாரரின் அடையாளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அமைச்சு கூறியது. சிங்கப்பூர் நில ஆணையத்தின் நடைமுறைக்கேற்ப பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வெளிதரப்பு ஆலோசகர்கள் அவசியமென கருதிய பணிகளுக்காகவே பெரும்பாலான செலவுகள் செய்யப்பட்டதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியது. ஒரு வீடு வாழத்தக்க நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்கான வழக்கமான பணிகளுக்கு மீதிச் செலவு செய்யப்பட்டது.

இரண்டாவதாக, மரங்கள் வெட்டப்பட்டதற்கும் வாடகைதாரர்கள் யார் என்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சட்ட அமைச்சு குறிப்பிட்டது. சுயேச்சை மர வளர்ப்பாளர்கள் சோதனையிட்டு, பாதுகாப்புப் பிரச்சினைகள் கண்டறியப்பட்ட பிறகே ஒரு மீட்டருக்கு மேற்பட்ட சுற்றளவு கொண்ட மரங்களை வெட்டுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. தேசிய பூங்காக் கழகத்தின் அனுமதியுடன்தான் மரங்கள் வெட்டப்பட்டன.

மூன்றாவதாக, எஸ்பிஹெச் மீடியா டிரஸ்ட் மோசடி செய்ததாகக் கூறப்பட்டது தவறு என்று சட்ட அமைச்சு சுட்டிக்காட்டியது. விநியோக எண்ணிக்கைகள் மிகைப்படுத்தப்பட்ட சம்பவம், எஸ்பிஹெச் மீடியா டிரஸ்ட் ஒருங்கிணைக்கப்படுவதற்குமுன், சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின்கீழ் நடந்தது. ஊடகத் தொழிலுக்கு எஸ்பிஹெச் மீடியா டிரஸ்ட் பொறுப்பெடுத்துக் கொண்ட பிறகு, அதைக் கண்டுபிடித்து விசாரணை செய்ததாக அமைச்சு குறிப்பிட்டது.

அரசாங்கத்தின் நிதியளிப்பு ஒப்பந்தம் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன் செய்யப்படவில்லை, எஸ்பிஹெச் மீடியா டிரஸ்ட் நிறுவனத்துடன் செய்யப்பட்டது. அதோடு, அது விநியோக எண்ணிக்கைகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படவில்லை என்பதையும் அமைச்சு சுட்டிக்காட்டியது.

திரு லீ தமது ஃபேஸ்புக் பதிவில் பொய்யான கூற்றுகள் இருப்பதாகக் குறிப்பிடும் திருத்த அறிவிப்பை வெளியிடவேண்டும்.

குறிப்புச் சொற்கள்