நாடாளுமன்றத்தில் வெவ்வேறு சம்பவங்களின் காரணமாக ஐந்து இடங்கள் காலியாக இருக்கின்றன.
சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இதுபோன்றதொரு நிலைமை இதுவரை ஏற்பட்டதில்லை.
சிங்கப்பூரர்கள் இந்நிலைமை பற்றி பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றனர். காலியான இடங்களை நிரப்ப ஏன் இடைத்தேர்தல் நடத்தப்படவில்லை? நாடாளுமன்றப் பணி பாதிக்கப்படுமா? நாடாளுமன்றத்தின் எதிர்காலம் என்னவாகப் போகிறது?
இந்த நிலைமை 2021 நவம்பர் மாதம் ஆரம்பமானது. செங்காங் குழுத்தொகுதியின் முன்னாள் பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான், நாடாளுமன்றத்தில் பொய் கூறியதைத் தொடர்ந்து பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டார்.
இவ்வாண்டு ஜூலை மாதம், முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக மக்கள் செயல் கட்சியிலிருந்தும் ஜூரோங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகிக்கொண்டார்.
சுமார் ஒரு வாரத்திற்குப் பிறகு, முன்னாள் நாடாளுமன்ற நாயகரும் மரின் பரேட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டான் சுவான் ஜின்னும் தெம்பனிஸ் குழுத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான செங் லீ ஹுய்யும் “பொருத்தமற்ற உறவில்” இருந்ததனால் விலகிக்கொண்டனர்.
அதே வாரத்தில், அல்ஜுனிட் குழுத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லியோன் பெரேரா, பாட்டாளிக் கட்சியின் நிக்கோல் சியாவுடன் தகாத உறவில் இருந்ததாகக் காட்டிய காணொளி வெளியானதைத் தொடர்ந்து பதவியிலிருந்து விலகிக்கொண்டார்.
1. முன்னாள் சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றிருந்த பொறுப்புகளை மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீண்டகாலத்திற்கு ஏற்பது சாத்தியமா?
தொடர்புடைய செய்திகள்
அரசியல் கட்சியிடமும் நகர மன்றத்திடமும் போதுமான வளங்கள் இருந்தால், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஏற்றிருந்த பணிகளைச் செய்வது சாத்தியமே என்கிறார் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக அரசியல் துறை இணைப் பேராசிரியர் டாக்டர் சொங் ஜா இயன்.
ஆனால், தொகுதி மக்களுக்குத் தங்களையும் தங்கள் நலனையும் நேரடியாகப் பிரதிநிதிக்க நாடாளுமன்றத்தில் ஒருவரும் இருக்கமாட்டார்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
2. காலி இடங்களால் நாடாளுமன்றப் பணி பாதிப்படையுமா?
நாடாளுமன்றத்திலிருந்து ஐவர் விலகியிருப்பதால், நாடாளுமன்றம் செயல்படும் விதம் பாதிக்கப்பட்டிருப்பதாக அல்லது பாதிக்கப்படும் என்று சொல்லலாகாது என்கிறார் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் யூஜின் டான். மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடுதல் பொறுப்பேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படும்.
“நாடாளுமன்றப் பதவிக் காலத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகுவது அல்லது வெளியேற்றப்படுவது, அல்லது உயிரிழப்பது எதிர்பார்க்கப்படும் ஒன்றே,” என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் சட்டங்களை நிறைவேற்ற குறைவெண் வரம்பு தேவை. அரசமைப்புச் சட்டத்தின்படி மொத்த உறுப்பினர்களில் கால்பகுதியினர் குறைவெண் வரம்பாகக் கருதப்படுவர். விடுப்பில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.
காலி இடங்கள் சேர்த்துக் கொள்ளப்படமாட்டா என்று அரசியல் கவனிப்பாளர்கள் கூறினர்.
தற்போதைய நாடாளுமன்றத்தில் 99 உறுப்பினர்கள் உள்ளனர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டோர் எண்ணிக்கை 93லிருந்து 88 ஆகக் குறைந்துள்ளது. ஒன்பது நியமன உறுப்பினர்களும் தொகுதியில்லா உறுப்பினர்கள் இருவரும் உள்ளனர்.
இந்நிலையில், குறைவெண் வரம்பின்படி வழக்கமான சட்டங்களை நிறைவேற்ற 25 உறுப்பினர்கள் அவையில் இருந்தால் போதுமானது.
பெரும்பாலான மசோதாக்களை நிறைவேற்ற பெரும்பான்மை தேவை.
இந்நிலையில், குறைந்தபட்சம் 25 உறுப்பினர்களில் 13 பேர் வாக்களித்தால் போதுமானது.
3. இடைத்தேர்தல் அவசியமா? எந்தக் கட்டத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படவேண்டும்?
நாடாளுமன்றத்தில் காலியாக இருக்கும் ஐந்து இடங்களும் குழுத்தொகுதிகளில் உள்ளவை. அரசமைப்புச் சட்டத்தின்படி, இந்தச் சூழ்நிலையில் இடைத்தேர்தல் நடத்தவேண்டிய அவசியமில்லை.
தனித்தொகுதிக்கு உறுப்பினர் இல்லாவிட்டால், அல்லது குழுத்தொகுதி உறுப்பினர்கள் அனைவரும் விலகியிருந்தால் மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படவேண்டும்.
பதினான்காம் நாடாளுமன்றம் விரைவில் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்யவிருக்கிறது. மீதம் இரண்டு ஆண்டுக்கும் குறைவான பதவிக்காலம் இருக்கையில், இடைத்தேர்தல் நடத்துமாறு வாதிடுவது சிரமம் என்றார் பேராசிரியர் டான்.
திரு டான் சுவான் ஜின், திருவாட்டி செங் விவகாரத்தின் தொடர்பில் ஜூலை 17ஆம் தேதி செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பிரதமர் லீ, உடனடியாகப் பொதுத் தேர்தல் நடத்தத் திட்டமிடவில்லை என்று கூறினார்.
தற்போதைய அரசாங்கத்தின் தவணைக்காலம் அண்மையில் இரண்டாம் பாதியைத் தொடங்கியது. இந்தத் தவணைக்காலத்திற்கு முழு நிரல் இருப்பதாகவும், அரசாங்கம் அதைச் செயல்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்த பொதுத் தேர்தல் 2025ஆம் ஆண்டுக்குள் நடத்தப்படவேண்டும்.

