தமிழ் மொழிக்கான கற்பித்தல் உபகாரச் சம்பளம் பெற்ற துர்கா

தமிழ் மொழிக்கான கற்பித்தல் உபகாரச் சம்பளம் பெற்ற துர்கா

2 mins read
2035788e-0ac0-4cca-a1be-16b516911d8c
இந்த ஆண்டு தமிழுக்காக கல்வி அமைச்சின் கற்பித்தல் உபகாரச் சம்பளத்தைப் பெற்ற ஒரே மாணவர் துர்கா. - படம்: கருணாநிதி துர்கா

இந்த ஆண்டு தமிழ் கற்பித்தலுக்கான கல்வி அமைச்சின் கற்பித்தல் உபகாரச் சம்பள விருதைப் பெற்றிருக்கிறார் 19 வயது கருணாநிதி துர்கா. தேசிய கல்விக் கழகத்தில் நான்காண்டுகள் தமிழில் இவர் பட்டக்கல்வியைப் படிக்க இந்த உபகாரச் சம்பளம் வழங்கப்படுகிறது.

இவ்வாண்டு தேசிய கல்விக் கழகத்தில் தமிழில் இளநிலைப் பட்டப் படிப்பை மேற்கொள்ளவிருக்கும் ஒரே மாணவர் துர்கா. தனது குடும்பத்தில் முதல் ஆசிரியராகப் போகும் பெருமையும் துர்காவைச் சேரும்.

சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் துர்கா உட்பட 106 மாணவர்கள் கல்வி அமைச்சின் உபகாரச் சம்பளத்தைப் பெற்றனர்.

மாணவர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார் கல்வி அமைச்சர் சான் சுன் சிங்.

கல்வித்துறையில் பணியாற்ற ஆர்வம் கொண்ட தகுதியுடைய மாணவர்களுக்குக் கற்பித்தல் உபகாரச் சம்பளம் ஆண்டு[Ϟ]தோறும் வழங்கப்படுகிறது.

இந்த உபகாரச் சம்பளத் திட்டமானது மாணவர்களின் முழு[Ϟ]நேரப் பட்டப்படிப்புக்கும் இதர திட்டங்களுக்கும் நிதி ஆதரவு வழங்க முற்படும். எதிர்காலத்தில் கல்வியாளர்களாக மாணவர்களை தயார்படுத்துவதற்கான பயிற்சித் திட்ட வாய்ப்புகளும் மாணவர்களுக்கு இதன் மூலம் கிடைக்கும்.

பள்ளிக் காலத்தில் தனக்கு உத்வேகம் தந்த ஆசிரியர்களின் வகுப்புகளுக்குச் செல்லும் போதெல்லாம் தாமும் வருங்காலத்தில் மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகத் திகழ வேண்டுமென்ற ஆசை துர்காவுக்கு இருந்தது. குறிப்பாக தொடக்கக் கல்லூரியில் சொல்லித்தந்த வேதியியல் ஆசிரியர் அவருக்கு முன்மாதிரியாக உள்ளார்.

ஆசிரியர்கள் மாணவர்களின் நலனில் அக்கறை எடுத்து பள்ளி முடிந்தும் மாணவர்களின் பாடம் சார்ந்த சந்தேகங்களைத் தீர்க்க உதவுவது துர்காவை ஆசிரியர் தொழில் ஈர்க்கக் காரணமாக இருந்தது.

சிறு வயதிலிருந்தே துர்காவுக்கு தமிழ்மொழி மீது அதிக ஆர்வம். தமிழ்ப் பாடத்தில் சிறந்த தேர்ச்சி பெற்ற துர்கா தமிழ் ஆசிரியராக வேண்டும் என்ற இலக்கைக் கொண்டிருந்தார்.

வீட்டில் தமிழில் பேசுவது, தமிழ் நூல்களை வாசிப்பது, தமிழ்த் திரைப்படங்களைப் பார்ப்பது போன்றவற்றின் மூலம் அவர் தமிழ் மொழித் திறனை வளர்த்து வருகிறார்.

‘ஏ’ நிலைத் தேர்வு முடிந்தவுடன் ஆசிரியராக வேண்டும் என்ற முடிவை எடுத்திருந்தாலும் வேறொரு துறையில் பணிபுரியும் அனுபவத்தைப் பெற விரும்பிய துர்கா தமிழ் முரசில் இணைந்தார். “தமிழ் முரசில் பணியாற்றிய எட்டு மாத காலத்தில் பலவற்றையும் கற்றுக்கொண்டேன். அன்றாடம் தமிழில் எழுதுவதில் இன்பம் கண்டேன். ஒருவேளை உபகாரச் சம்பளம் கிடைக்காமல் இருந்திருந்தால், முழுநேரச் செய்தியாளர் ஆகியிருப்பேன்,” என்றார் துர்கா.

இளம் தலைமுறையினர் தமிழில் பேசத் தயங்குவதாகக் கூறிய துர்கா, விளையாட்டுகள், கலந்துரையாடல் அங்கங்கள் போன்ற புத்தாக்க கற்றல் முறைகள் மூலம் மாணவர்களின் தமிழ்மொழி ஆர்வத்தைத் தூண்ட திட்டம் கொண்டுள்ளார். கலாசார வேர்களோடு இணைந்திருக்க மரபுக் கலைகளையும் கற்கும் எண்ணம் இவருக்கு உள்ளது.

பட்டப்படிப்பு முடிந்ததும் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிய இருக்கும் துர்கா, மாணவர்களுக்குப் பாடம் கற்பிப்பதுடன் அவர்களிடம் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த முனைப்புடன் காத்திருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்