செயற்கை நுண்ணறிவின் 100 பயன்களை 100 நாள்களில் கண்டறிய புதிய திட்டம்

செயற்கை நுண்ணறிவின் 100 பயன்களை 100 நாள்களில் கண்டறிய புதிய திட்டம்

2 mins read
0c9be917-92be-4bcc-a484-088e455f32bc
தொடர்பு, தகவல் அமைச்சு, சிங்கப்பூர் மின்னிலக்கத் தொழில்துறை அலுவலகம், அறிவார்ந்த தேச, மின்னிலக்க அரசாங்க அலுவலகம், கூகல் கிளவுட் ஆகியவை ‘செயற்கை நுண்ணறிவு முன்னோடிகள்’ திட்டத்தைத் தொடங்கி வைத்தன.  - படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

செயற்கை நுண்ணறிவுடன், பள்ளி ஆலோசகர்கள் வழக்கமான பணிகளை வெளிதரப்பிடம் கொடுத்துவிட்டு, விரிவான அறிக்கைகளை அதிக செயலாற்றலுடன் எழுதலாம். இதன்வழி, மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க அவர்களுக்குக் கூடுதல் நேரம் கிடைக்கும். 

ஊழியர்களுக்கு அதிக பயன்மிக்க வேலைப் பயிற்சிகளும் வேலைகளும் பரிந்துரைக்கப்படலாம். வேலை தேடுவோரைப் பொருத்தமான முதலாளியுடன் இணைக்கும் செயற்கை நுண்ணறிவுடன் ஆட்சேர்ப்பைத் துரிதப்படுத்தலாம். 

உண்மையான சவால்களுக்கு அமைப்புகள் உருவாக்கக்கூடிய சில செயற்கை நுண்ணறிவு தீர்வுகள் இவை. திங்கட்கிழமை அறிவிக்கப்பட்ட ‘செயற்கை நுண்ணறிவு முன்னோடிகள் (AI Trailblazers)‘ திட்டம் இதற்கு வழிகோலும். 

தொடர்பு, தகவல் அமைச்சு, சிங்கப்பூர் மின்னிலக்கத் தொழில்துறை அலுவலகம், அறிவார்ந்த தேச, மின்னிலக்க அரசாங்க அலுவலகம், கூகல் கிளவுட் ஆகியவை இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தன. 

இத்திட்டத்தின்கீழ், அரசாங்க அமைப்புகளும் தொழில் நிறுவனங்களும் கூகல் கிளவுட்-டின் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் ‘புத்தாக்கச் சோதனைக்களங்களின’” வாயிலாக மூன்று மாதம் வரை இலவசமாகப் பயன்படுத்தலாம். 

பங்குபெறும் அமைப்புகளின் செயற்கை நுண்ணறிவு உருவாக்கிகள் முழுநாள் பயிற்சிப் பயிலரங்குக்குச் செல்லவேண்டும். அங்கு கூகல் கிளவுட் பொறியாளர்களுடன் சேர்ந்து செயற்கை நுண்ணறிவின் உத்தேசப் பயன்களை உருவாக்கிகள் அடையாளம் காண்பார்கள். 

பிறகு, புத்தாக்கச் சோதனைக்களத்தின் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பயன்படுத்தி மாதிரிவடிவத்தையும், பின்னர் குறைந்தபட்ச சாத்தியப் பொருளையும் உருவாக்குவார்கள். 

பங்குபெறும் அமைப்புகள் தாங்கள் உருவாக்கிய சாத்தியப் பொருளை தொழில்நுட்ப வல்லுநர்களிடமும் மற்ற அரசாங்க, வர்த்தகப் பயனீட்டாளர்களிடம் படைப்பதற்கும் ஆண்டு இறுதியில் வாய்ப்பளிக்கப்படும். 

ஆகச்சிறந்த தயாரிப்புகளுக்கு இவ்வாண்டு பிற்பகுதியில் பரிசளிக்கப்படும். 

இப்போது முதல் செப்டம்பர் 30 வரை பயிலரங்குகள் நடத்தப்படும். அடுத்த 100 நாட்களில் 100 செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளைக் கண்டறிந்து உருவாக்குவது இலக்கு. 

திட்டத்தில் இடம்பெறும் முதல் 20 பங்கேற்பாளர்களில் மனிதவள அமைச்சு, அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பு, மாஸ்டர்கார்ட், ‘புராபர்ட்டிகுரு’ குழுமம் ஆகியவை உள்ளடங்கும். 

திட்டத்தைத் தொடங்கிவைத்து பேசிய தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ, பொதுத் துறை, தனியார் துறை இரண்டிலும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை வளர்ப்பதற்கான துவக்கமே இத்திட்டம் என்று கூறினார். 

“எங்கள் லட்சியம் நூறுகளுடன் நின்றுவிடாது. ஆயிரக்கணக்கிலும், எதிர்காலத்தில் பல்லாயிரக்கணக்கிலும் இருக்கும். ஆனால், ஆயிரம் மைல் பயணமும் முதல் அடியிலிருந்துதான் தொடங்கும்,” என்றார் அவர். 

பல்வேறு சமுதாயப் பிரிவினர் செயற்கை நுண்ணறிவு அறிவாற்றலையும் திறன்களையும் வளர்த்துக்கொள்ள உதவும் திட்டங்களை தொடர்பு, தகவல் அமைச்சும் கூகல் கிளவுட்டும் எதிர்காலத்தில் அறிவிக்கும். 

குறிப்புச் சொற்கள்